தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 13 டிசம்பர், 2018

பேர்த் எங்களுக்கே அதிக சாதகம் - அவுஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விராட் கோலி


இந்திய-அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பேர்த்தில் தொடங்குகிறது. இந்நிலையில்  இந்த டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோலி

"பேர்த் டெஸ்டில் எங்களுக்குத்தான் அதிக அளவில் வெற்றி  வாய்ப்புள்ளது. இதில் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

உண்மையிலேயே அவுஸ்திரேலியா பேர்த் போன்ற, வேகமான எகிறும் பந்துகளுக்கு உகந்த அதன் சொந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது.

எனினும் அவுஸ்திரேலியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களை விட, பேர்த் அந்த அணிக்கு  அதிக அளவில் சாதகமாக இருக்கும். ஆனால், எங்களுக்கும் அதே அளவு  சமமான வாய்ப்பு உள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் க்ரீன் பிட்ச்களை கண்டு நாங்கள் பதற்றமடையவில்லை. அதைவிட ஆர்வம்தான் அதிகமாக உள்ளது.

ஏனென்றால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறோம். எங்களிடமும் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.20 விக்கெட்டுக்களை வீழ்த்தும்போது, அவர்களுடைய துல்லிய பந்து வீச்சில் அதிக நம்பிக்கை உண்டாகும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் உச்சக்கட்ட திறமையோடு இருக்கும்போது, அணிக்கு அது சிறந்த விஷயமாகும்."

 இதனால் எகிறும் ஆடுகளமாக இருந்தாலும், வேகப்பந்துக்கு ஆதரவான ஆடுகளமாக இருந்தாலும் கூட இந்தியாவுக்கு சாதகமாக பேர்த் அமையும் என்று நம்பிக்கையுடன் கூறினார் கோலி.

2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின், ரோஹித் ஷர்மா இல்லை ; அவுஸ்திரேலியா அதே அணி !!

நாளை மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த்  நகரில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அதே அணியை ஈடுபடுத்தவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் கட்டாயமாகச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடிலெய்ட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட, ரோஹித் ஷர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருக்கு ஏற்பட்ட உபாதைகள் மூலமாக இருவரும் விளையாடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரோஹித் ஷர்மாவின் இடத்தில் துடுப்பாட்ட வீரர் ஹனுமா விஹாரி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, நாளைய ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளருக்கு அதிக சாதகத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதால், சிலவேளைகளில் புவனேஷ்குமார் அணியில் சேர்த்துக்கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்படியில்லாமல் துடுப்பாட்டத்தில் வலுவை அதிகரிக்கவும் ஒரு சுழற்பந்து வீச்சாளரையாவது வைத்திருக்கவும் விரும்பி ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்கவும் இடமுள்ளது.


அவுஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.


செவ்வாய், 11 டிசம்பர், 2018

அடிலெய்ட் டெஸ்ட் - அவுஸ்திரேலியாவின் போராட்டத்தை முறியடித்து சாதனை வெற்றி பெற்ற இந்தியா

 அவுஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 31 ஓட்டங்களால் விறுவிறுப்பான வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தார். அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்க்கஸ் ஹரிஸ் டெஸ்ட் போட்டிகளில் தனது அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தமது விக்கெட்டுகளை பறிகொடுக்கத் தொடங்கியது. எனினும், ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு சிறப்பாக துடுப்பெடுத்தாடிய செட்டேஸ்வர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் தனது 16ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். புஜாரா 123 ஓட்டங்கள் பெற்றிருந்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க இந்திய அணி 250 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இரண்டாம் நாளின் முதல் பந்திலே மீதி இருந்த விக்கெட்டையும் பறிகொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஜோஷ் ஹேசல்வூட் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், லியொன் மற்றும் கமின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சில் குறைந்த ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து தமது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக முதலாவது ஓவரிலே ஆரோன் பின்ஞ்சின் விக்கெட் கைப்பற்றப்பட்டிருந்தது. இதனால், அவுஸ்திரேலிய அணியினர் தமது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டு இந்திய அணியை விட 15 ஓட்டங்களால் பின்தங்கியிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் டிரவிஸ் ஹெட் 72 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். இத்திய அணியின் பந்து வீச்சில் பும்ரா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதமும் இஷாந்த் ஷர்மா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.

இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்ட் 6 பிடிகளை எடுத்தார். இதன் மூலம் இந்தியா சார்பாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக பிடிகளை எடுத்த தோனியின் சாதனையை சமப்படுத்தினார்.

முதல் இன்னிங்ஸில் பெற்ற 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆரம்பம் மற்றும் முன்வரிசை வீரர்களின் பங்களிப்புகளின்  மூலம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு 323 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் முறையே 71 மற்றும் 70 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்து வீச்சாளர் நேதன் லயொன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

323 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் நிறைவில் 104 ஓட்டங்களுக்கு 4 முக்கியமான விக்கெட்டுகளை இழந்திருந்தது.

வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு மேலதிகமாக 219 ஓட்டங்களும் இந்திய அணி 6 விக்கெட்டுகள் கைப்பற்ற வேண்டிய நிலையிலும்  இறுதி நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இரு அணிகளும் தத்தமது அணிகளின் வெற்றிக்காக மும்முரமாக செயற்பட்டனர்.

முக்கியமான துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்தாலும் பந்துவீச்சாளர்கள் இறுதிவரை பொறுமையாகத் துடுப்பாடி தம் போராட்ட குணத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரிய அழுத்தத்தை வழங்கியிருந்தனர்.

எனினும், இந்திய அணியின் பந்து வீச்சு ஆஸி வீரர்களின் துடுப்பாட்டத்தை விடவும் ஆதிக்கம் செலுத்தியதால் அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 291 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இதனால் இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.


இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் ஷோன் மார்ஷ் 60 ஓட்டங்களும் அணித்தலைவர் டிம் பெய்ன் 41 மற்றும் நேதன் லயொன் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக பும்ரா, அஷ்வின் மற்றும் ஷமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக புஜாரா தெரிவானார்.

இந்தியா அவுஸ்திரேலியாவில் பெற்ற ஆறாவது டெஸ்ட் வெற்றி இது என்பதோடு அடிலெய்டில் 2003ஆம் ஆண்டுக்குப் பின் பெற்ற முதலாவது வெற்றியாகவும் அமைகிறது.

இவ்வெற்றியின் மூலம் விராட் கோலி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இது வரையில் ஒரு போட்டியிலேனும் தோல்வியடையாத தலைவராக தனது சாதனையை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 20 போட்டிகளில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கோஹ்லி அவற்றில் 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் மூன்று போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.

முதலாவது போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் இந்தியா நம்பிக்கையுடன் பேர்த் மைதானத்தில் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குத் தயாராகிறது. அவுஸ்திரேலியா தங்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கின்ற ஆடுகளத்தில் காத்திருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...