தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 24 மே, 2018

கோட்டை விட்ட ராஜஸ்தான் ! விடாமுயற்சியால் வென்ற கொல்கத்தா.. #IPL2018 #PlayOffs

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் தினேஷ் கார்த்திக், அன்றே ரசல் மற்றும் குல்டீப் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவுசெய்ய, கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடியது.

நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தெரிவுசெய்த ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்தது.

முதலாவது ஓவரை கௌதம் வீச, நரைன் முதல் பந்தில் பவுண்டரி விளாசி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டார். எனினும் அடுத்த பந்தில் மீண்டும் வேகமான ஓட்டக்குவிப்பில் ஈடுபட முனைந்த நரைன் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இவ்வாறு நரைன் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களம் நுழைந்த உத்தப்பா மற்றும் ரானா ஆகியோர் தலா 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுத்து, பெவிலியன் திரும்ப, நிதானமாக ஆடிய கிரிஸ் லின்னும் ஓரு கட்டத்தில் 18 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணி 8 ஓவர்கள் நிறைவில் 51 ஓட்டங்களை மாத்திரம் இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும் அடுத்து  ஜோடி சேர்ந்த தலைவர் தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் வீரர் சுப்மான் கில் ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்தனர்.

சுப்மான் கில் 17 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, ஆர்ச்சர் வீசிய 15வது ஓவரில் விக்கட்டை பறிகொடுத்தார்.

எனினும் மறுபக்கம் தனது அதிரடியை தொடர்ந்த கார்த்திக், 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

இதேவேளை தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிய ரசல், மைதானத்தில் வானவேடிக்கை காட்டினார். கடந்த சில போட்டிகளில் அதிரடியை வெளிப்படுத்தாத ரஷல், முக்கியமான போட்டியில் அணிக்கு தனது முழு பங்களிப்பையும் வழங்கினார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரசல் 25 பந்துகளுக்கு முகம் கொடுத்து 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ராஜஸ்தான் அணிசார்பில் ஆர்ச்சர், கௌதம் மற்றும் லாப்லின் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் சற்று கடினமானது என்றாலும், எட்டக்கூடிய ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி மிகச்சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது எனதான் கூற வேண்டும்.

ராஜஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் த்ரிப்பாதி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். 5.1 ஓவர்களில் 47 ஓட்டங்களை கடந்திருந்த போது ராஜஸ்தான் அணி தங்களது முதலாவது விக்கட்டை இழந்தது. த்ரிப்பாதி 13 பந்துகளுக்கு 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு செம்சுன் சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தார். ரஹானே மற்றும் செம்சுன் ஜோடி 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 109 ஓட்டங்களை பெற்றிருந்தது.

குறிப்பிட்ட தருணத்தில் வெற்றி வாய்ப்புகள் அனைத்தும் ராஜஸ்தான் பக்கமிருக்க, கொல்கத்தா அணியின் பந்து வீச்சு மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரஹானே ஓட்ட வேகத்தை அதிகரிக்க முனையாததும், சம்சனால் சிக்ஸர்களை அடிக்க முடியாமல் போனதும் சரிவை ஆரம்பித்து வைத்தது.
 ரஹானேவுக்கு எதிராக குல்டீப் யாதவ் பந்து வீச, ரஹானே 46 ஓட்டங்களுடன் வெளியேறினார். ராஜஸ்தான் அணியின் தோல்வி ஆரம்பமானது.

அடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 38 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த சம்சனை சவ்லா வெளியேற்ற போட்டியின் வெற்றி வாய்ப்பு திசைமாறியது.

தொடர்ந்து களம் நுழைந்த வீரர்களை பந்தை எல்லைக்கோட்டுக்கு அடிக்க விடாமல் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்த, ராஜஸ்தான் அணி 4 விக்கட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 

முன்னைய போட்டிகளில் அடித்து நொறுக்கி வேகமாக ஓட்டங்களைப் பெற்றிருந்த கிருஷ்ணப்பா கௌதமை அனுப்பாமல் அவருக்கு முன்னே ஸ்டூவர்ட் பின்னியை அனுப்பியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்தது.

விக்கட்டுகள் கைவசம் இருந்தும் துடுப்பாட்டத்தில் விட்ட கவனக்குறைவினால் ராஜஸ்தான் அணி தொடரிலிருந்தும் வெளியேறியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அன்றே ரசல் தெரிவானார். எனினும் கார்த்திக்கின் பங்கும் அற்புதமானதே.

எவ்வாறாயினும் கொல்கத்தா அணி சிறப்பாக செயற்பட்டு இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. நாளை நடைபெறவுள்ள கிட்டத்தட்ட அரையிறுதிப் போட்டியை ஒத்த போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதுவும் கொல்கத்தாவிலேயே இடம்பெறவிருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேலும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...