தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 23 ஏப்ரல், 2018

கடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டிகள் - திக்திக் த்ரில் முடிவுகள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை.. அதிகமானோர் IPL கிரிக்கெட் போட்டிகளோடு ஊறிக் கிடப்பார்கள் என்பதாலோ என்னவோ நேற்றைய இரு போட்டிகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
எதிர்பார்ப்பைப் போலவே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு போட்டிகளுமே இறுதி ஓவரில் முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட போட்டிகளாக அமைந்திருந்தன.

அதிலும் எல்லாப் போட்டிகளுமே இறுதி ஓவர்களில் வெற்றிகள் அல்லது தோல்விகள் தீர்மானிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பாய் இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளது போட்டிகளும் நேற்று  விறுவிறுப்பான கடைசி ஓவர் முடிவுகளாக அமைந்தன.

இதில் ஹைதராபாத் போட்டியில் சென்னை 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் இரவு நடைபெற்ற போட்டியில் தோல்வி நிச்சயம் என்னும் நிலையிலிருந்து ராஜஸ்தான் பெற்ற அபார வெற்றியும் கடைசி ஓவர் மாயாஜாலம் தான்.

IPL 2018 இன் 20வது போட்டியான சன்ரைசர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் அம்பாத்தி ராயுடுவின் அனாயாசமான அதிரடி துடுப்பாட்டம், கூடவே சுரேஷ் ரெய்னாவின் அரைச்சதமும் சென்னைக்குக் கைகொடுத்தது.

ரெய்னாவின் அரைச்சதம் கொஞ்சம்  இருந்தாலும் ராயுடு சிக்ஸர் பவுண்டரிகளாக  விளாசித் தள்ளியிருந்தார். 4 சிக்ஸர்கள் & 9 நான்கு ஓட்டங்கள்.
மீண்டும் ஒரு தடவை ரஷீத் கானின் பந்துவீச்சுக்கு சரமாரியான அடி விழுந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தமது இலக்காக 183ஐத் துரத்தியவேளையில் முதல் மூன்று விக்கெட்டுக்களும் குறைவான ஓட்டங்களுக்குள் இழக்கப்பட்டாலும் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் அற்புதமான ஆடடம் ஆடியிருந்தார். அவரோடு யூசுப் பதானும் சேர்ந்து சென்னை அணிக்கு அச்சுறுத்தலைக் கொடுத்திருந்தனர்.

நோ போல் வழங்கியிருக்கவேண்டிய ஒரு full toss பந்துக்கு வில்லியம்சன் ஆட்டமிழந்தார். 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 நான்கு ஓட்டங்களுடன் 84 ஓட்டங்கள்.
பதான் நான்கு சிக்ஸர்களுடன் 27 பந்துகளில் 45 ஓட்டங்கள்.

கடைசி நேரத்தில் ரஷீத் கான்  விளங்கினாலும் 19 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்த பிராவோவின் இறுதி ஓவரில் 14 ஓட்டங்களையே பெறக்கூடியதாக இருந்தது.

சென்னை ரசிகர்களுக்கு இருதயத் துடிப்பை எகிறச்செய்து 4 ஓட்டங்களால் நான்காவது வெற்றி
கிட்டியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரர் - ராயுடு.

-----------------

ஒரேயொரு வெற்றியுடன் மட்டும் அல்லாடும் மும்பாய் இந்தியன்ஸ் 168 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தும், முக்கியமான விக்கெட்டுக்களை உடைத்தும் கூட எதிர்பாராத ஒரு வீரரின் துடுப்பினால் வெற்றிக்கு அசாத்தியமாக இருந்த ஓட்டங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

சூரியகுமார் யாதவ் - 72 ஓட்டங்கள், இஷான் கிஷான் - 58.
இத்தனை ஓட்டங்கள் மத்தியிலும் நேற்று தனது முதலாவது ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகளின்  வீரர் ஜொஃப்ரா ஆர்ச்சர் தன்னுடைய துல்லியமான வேகப்பந்துவீச்சில் கலக்கியிருந்தார். 3 விக்கெட்டுக்களை வெறும் 22 ஓட்டங்களைக் கொடுத்து எடுத்திருந்தார்.

ராஜஸ்தானின் துரத்தலில் இந்த IPL இல்  formஇல் இருக்கும் சஞ்சு சம்சனோடு சேர்ந்து கொண்டவர் அதிக விலைக்கு ஏலத்தில் பெறப்பட்ட பென் ஸ்டோக்ஸ். முதற்தடவையாகத் தன்னுடைய துடுப்பாட்டப் பங்களிப்பை ஓரளவுக்கு வழங்கியிருந்தார் ஸ்டோக்ஸ் - 40 ஓட்டங்கள்.

நேற்றைய அரைச்சதத்தோடு மீண்டும் செம்மஞ்சள் தொப்பியைத் தனதாக்கிக்கொண்டார் சஞ்சு சம்சன்.

எனினும் இவ்விருவரது ஆட்டமிழப்புகளுக்குப் பிறகு 17 பந்துகளில் 43 ஓட்டங்கள் என்ற சிக்கலான நிலை தோன்றிய நேரம், யாரும் எதிர்பாராத வகையில் புதிய கதாநாயகனாக உதயமானார் கிருஷ்ணப்பா கௌதம்.

11 பந்துகளில் 33 ஓட்டங்கள்.
2 சிக்ஸர்கள், நான்கு நான்கு ஓட்டங்கள். அதுவும் பும்ரா மற்றும் முஸ்தபிசுர் ஆகியோரின் பந்துகளை வெளுத்து வாங்கி.

எனினும் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது ஆர்ச்சருக்கே
வழங்கப்பட்டது.
மும்பாய்க்கு துரதிர்ஷ்டம் துரத்துகிறது.

சென்னை G.பிரசாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...