தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சென்னையை வீழ்த்திய மும்பாய் ! தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் ஷர்மா

ஒரேயொரு வெற்றி, ஐந்து தோல்விகளுடன் தடுமாறி கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வந்த மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு சென்னைக்கு எதிராக பூனேயில் வைத்து அபாரமான வெற்றி ஒன்றைப் பெற்றுக்கொடுத்து உற்சாகத்தை ஊட்டியுள்ளார் தலைவர் ரோஹித் ஷர்மா.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னொரு இறுதி ஓவர் தோல்வி.
புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 8 விக்கெட் வெற்றி, அதிலும் ரோஹித் ஆட்டமிழக்காமல் அரைச் சதத்துடன் வெற்றியைப் பெற்ற விதம் ஆகியன இன்னும் இந்த வெற்றியை சிறப்பித்திருந்தன.

சென்னையின் ரசிகர்கள் பெருமளவில் குவிந்திருந்த பூனே மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் தலைவர் தோனி எடுத்த பல முடிவுகள் தவறாக அமைந்தன. தானும் பிராவோவும் வழக்கத்தை விட முன்னரே துடுப்பாட வந்தது, ஜடேஜாவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்காதது, கடைசி ஓவரை பிராவோவுக்கு வழங்காமல், தாஹிருக்கு வழங்கியது என்று அனைத்துமே தவறாகிப்போனது.

எனினும் ரோஹித் ஷர்மா எடுத்த எல்லா முடிவுகளுமே சரியாக அமைந்தன. தொடர்ந்து சறுக்கிய கிரோன் பொலார்ட் மற்றும் முஸ்தபிசூர் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். டுமினி, பென் கட்டிங் ஆகியோர் இன்று விளையாடினர்.

சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் பெற்ற 75 ஓட்டங்களுடன் சென்னை பெற்ற 169 ஓட்டங்களை ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய மும்பாய் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அடைந்தது.

ரெய்னா 47 பந்துகளில் 75, தொடர்ந்து சிறப்பாக ஆடி, செம்மஞ்சள் தொப்பியைத் தன் வசம் வைத்துள்ள அம்பாத்தி ராயுடு 35 பந்துகளில் 46.

மும்பாய் அணியின் ஆரம்ப வீரர் சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஒரு அதிரடி ஆரம்பத்தை வழங்கினார். 34 பந்துகளில் 44.
மேற்கிந்தியத் தீவுகளின் ஈவின் லீவிஸ் கொஞ்சம் மந்தமாக 43 பந்துகளில் 47 ஓட்டங்கள்.

எனினும் இந்த உறுதியான அடித்தளத்தில் நின்று ஆடிய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உரித்தாக்கினார்.

இந்த வெற்றியுடன் மும்பாய் இந்தியன்ஸ் 8ஆம் இடத்திலிருந்து ஆறாம் இடத்துக்கு எழுந்துள்ளது.

சென்னை G.பிரசாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...