தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 13 மார்ச், 2018

தக்கூர், மனிஷ் பாண்டே - இளையோரின் அசத்தல்.. இந்தியாவுக்கு வெற்றி - Nidahas Trophy

மழை வந்து போட்டியைக் குழப்புமோ என்ற ரசிகர்களின் அங்கலாய்ப்பின் மத்தியிலேயே 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நேற்று நடைபெற்ற சுதந்திரக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில், தொடர்ந்து நான்காவது தடவையாக இரண்டாவதாகத் துடுப்பாடிய அணிக்கு வெற்றி கிடைத்தது.

குசல் மெண்டிஸின் அற்புதமான அரைச்சதம் இந்திய இளையவர்களின் அற்புதமான ஆட்டத்தினால் தோல்வியில் முடிந்தது.
கடைசியாக குசல் ஆடிய ஐந்து இன்னிங்ஸில் 4வது அரைச்சதம் இது.
38 பந்துகளில் - 3 சிக்ஸர்கள், 3 நான்கு ஓட்டங்களோடு 55 ஓட்டங்கள்.
அவர் ஒரு பக்கம் நின்றுகொண்டேயிருக்க, இந்திய பந்துவீச்சாளர்கள் மறுபக்கம் விக்கெட்டுக்களை உடைத்தெடுத்தனர்.

படம் : www.indiatoday.in

மிக அச்சுறுத்தலாக இருந்த ஓட்ட வேகமும் சடுதியாகக் குறைந்து ஒரு ஓவருக்கு 8 ஆக இறுதியிலே மாறிப்போனது.
தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் மிகத் துல்லியமாக தன்னுடைய நான்கு ஓவர்களில் வெறும் 21 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
முதலாவது போட்டியில் ஒரே ஓவரில் 27 ஓட்டங்களைக் கொடுத்த ஷர்துல் தக்கூர் நேற்று 27 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணிக்கு மிகப்பெரிய வில்லனாக மாறியிருந்தார்.

இந்திய அணியின் களத்தடுப்பில் சுரேஷ் ரெய்னா கலக்கியிருந்தார். குறிப்பாக தனுஷ்க குணாதிலகவின் பிடியெடுப்பு அற்புதம்.

153 என்ற இலக்கு இந்தியாவுக்கு மிக இலகுவாகவே தெரிந்தது.
அதிலும் ரோஹித் ஷர்மா, தவான், ரெய்னா போன்ற மிக அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களோடு துரத்துவதற்கு சாதகமான ஆடுகளத்தில்.

எனினும் அகில தனஞ்செயவின்  சுழலில் கொஞ்சம் தடுமாறி முக்கிய நான்கு வீரர்களை 85 ஓட்டங்களுக்கு இழந்த நேரம் இலங்கையின் காய் கொஞ்சம் ஓங்கியது போலத் தெரிந்தாலும், மனிஷ் பாண்டே, அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கின் உறுதியான இணைப்பாட்டம் இலங்கையிடமிருந்து போட்டியைக் கைமாற்றிவிட்டது.
பொறுமையான இணைப்பாட்டம் - 7.4 ஓவர்களில் முறியடிக்கப்படாத 68 ஓட்ட இணைப்பாட்டம்.

பாண்டே - ஆட்டமிழக்காமல் 42
கார்த்திக் ஆட்டமிழக்காமல் 39

தனஞ்செய மிகச் சிறப்பாகப் பந்துவீசியிருந்தார் - 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள்.
நேற்று லக்மலுக்கு பதிலாக இலங்கை அபொன்சோவை அணிக்குள் சேர்த்திருக்கலாமோ என்று யோசித்திருக்கலாம்.

தனது மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்ற தக்கூர் போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

இந்திய நிர்வாகம் இளையோரை நம்பி அனுப்பியது வீண்போகவில்லை. சிரேஷ்ட வீரர்களின் ஒவ்வொரு இடைவெளியையும் மிகச் சிறப்பாக நிரப்பி பிரகாசிக்கிறார்கள்.

இப்போது இலங்கை அணிக்கு அடுத்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டியை வென்றால் தான் இறுதிப்போட்டி உறுதியாகும்.
இந்தியாவுக்கு இறுதிப் போட்டி இன்னும் உறுதியாக நாளை பங்களாதேஷை வெல்லவேண்டியிருக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...