Latest Updates

6/recent/ticker-posts

தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப் போட்டிக்குச் செல்லுமா இலங்கை? : பங்களாதேஷுடன் இன்று (அரையிறுதி) மோதல்!!! - Nidahas Trophy 2018

இலங்கையில் நடைபெற்றுவரும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T -20 தொடரின் இறுதிப்போட்டிக்கு அணியை தெரிவுசெய்யும் போட்டி இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில்  இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே சுதந்திரக்கிண்ண இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதற்கு இரு அணிகளும் பல யுத்திகளை கையாளும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக பங்களாதேஷ் அணியின் தலைவரும் சகலதுறை வீரருமான ஷகிப் அல் ஹசன் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். இதனால் பங்களாதேஷ் அணி மேலும் பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியை பொறுத்தவரையில் உபாதைக்குள்ளாகியிருந்த குசல் மெண்டிஸ் முழுமையாக குணமடைந்துள்ளார். அத்துடன் இலங்கை அணியும் தங்களது வியூகங்களை சிறப்பாக அமைத்து வருகின்றது.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி சொந்த மண்ணில் சாதனையாக 214 ஓட்டங்களை குவித்தும், அதனை துரத்தி அடித்து பங்களாதேஷ் அணி புதிய சாதனை படைத்து வெற்றிபெற்றிருந்தது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சு பக்கம் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமில அபோன்சோ மற்றும் இசுரு உதான ஆகியோரில் ஒருவர் அணியில் இணைய வாய்ப்புள்ளது.

இதேவேளை பங்களாதேஷ் அணியில் நஜ்முல் இஸ்லாமுக்கு பதிலாக ஷகிப் அல் ஹசன் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக சற்று பலவீனமாகத் தெரியும் பங்களாதேஷின் பந்துவீச்சு பலமடையும் என நம்பப்படுகிறது.

இதேவேளை மழை காரணமாக இன்றைய போட்டி விளையாடப்படாமல் போனால் நிகர ஓட்ட சராசரி வீதத்தில் (Net Run Rate) முந்தியுள்ள இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்