அண்மைய சில ஆண்டுகளாக, தன் திறமையை சர்வதேச மட்டத்தில் வெளிக்காட்டி, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் போராடி அங்கீகாரத்துக்காக முயன்ற, இளம் வீரர்களைக் கொண்ட ஆசிய கிரிக்கெட் அணியான நேபாளக் கிரிக்கெட் அணி, முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்தை பெற்றுள்ளது.
ஹராரேவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பப்புவா நியு கினியா அணிக்கெதிரான, உலகக் கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதன் மூலம் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளது.
இந்த அந்தஸ்தின் மூலம் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை நேபாளக் கிரிக்கெட் அணி, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும்.
எனினும், எனினும், உலகக் கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியில் சுப்பர் சிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெறாததால் நேபாள அணியால் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில் விளையாடமுடியாது.
அத்தோடு, நேபாளக் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக இனி சர்வதேச கிரிக்கெட் சபை நிதியுதவியும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலம் வரை நேபாள அணியின் பயிற்றுவிப்பாளர்களாக முன்னாள் இலங்கை வீரர்கள் ரோய் டயஸ், புபுது தசநாயக்க ஆகியோர் செயற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நேபாள அணியின் தலைவர் பராஸ் கட்கா, அண்மையில் ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தம செய்யப்பட்ட 17 வயது நிரம்பிய சுழல்பந்து வீச்சாளர் லமிச்சேன் ஆகியோர் இனிக் கவனிக்கப்படுவார்கள்.
0 கருத்துகள்