தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Monday, March 12, 2018

மழையின் அச்சுறுத்தலின் மத்தியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதல்! : வெற்றி யாருக்கு? - Nidahas trophy 2018

இலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திரக் கிண்ண T-20 தொடரின் நான்காவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவே நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகளில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்று பலமான நிலையில் உள்ளது.

இந்திய அணிக்கெதிரான முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருக்க, பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியை இந்திய அணி கைப்பற்றியிருந்தது.

பின்னர் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 215 ஓட்டங்களை துரத்தி அடித்து அபார வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு மூன்று அணிகளும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இதன்படி இன்றைய போட்டியானது இலங்கை – இந்திய அணிகளுக்கு மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

இந்தியாவில் இறுதியாக இடம்பெற்றது போல திசர பெரேரா எதிர் ரோஹித் ஷர்மா - Iron Man vs Hit Man மோதலாக அமையப்போகிறது இன்றைய போட்டி.

படம் : Sportzwiki


எனினும் சில நாட்களாகவே மாலை வேளையில் பெய்து வரும் மழையின் அச்சுறுத்தல் இன்று சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
சனிக்கிழமையும் அவ்வாறே இருந்தாலும் போட்டிக்கு முன்னதாக சிறுமழை மட்டுமே எட்டிப் பார்த்திருந்தது. இன்றும் அப்படியே நடந்திட வேண்டும் என்பது ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கும்.

இந்திய அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், இரண்டாவது போட்டியில் தங்களின் பிழைகளை திருத்திக்கொண்டு வெற்றிபெற்றது.

எனினும் இலங்கை அணி கடைசிப்போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் மோசமான தோல்வியினை தழுவியிருந்தது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தாலும் பந்து வீச்சாளர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். களத்தடுப்பிலும் கோட்டைவிட்டிருந்தனர்.

இதனால் இன்றைய போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் சிறப்பாக செயற்பட்டு வருவதால் அணியின் நம்பிக்கை மட்டம் உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதுடன்,
போட்டித் தடைக்குள்ளாகியுள்ள இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமலுக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா அணியில் இணைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலவேளைகளில் யாராவது ஒரு வேகப்பந்துவீச்சாளரின் இடத்தில் சுரங்க லக்மால் அணியில் இடம்பிடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
அத்துடன் குசல் ஜனித் பெரேரா விக்கெட் காப்புக் கடமைகளைப் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

மழைக் குறுக்கீடு இல்லாவிட்டால் மாலை 7 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும்.

http://tamilnews.com இலிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் சேர்க்கப்பட்டது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...