தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 21 மார்ச், 2018

CWCQ - உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகளின் உச்சக்கட்டம் - அந்த இரண்டு அணிகள் எவை ?

இப்போது நடைபெற்று வரும் ஸ்கொட்லாந்து - மேற்கிந்தியத்தீவுகள் போட்டியில் வெல்கின்ற அணி அடுத்த ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும்.

அடுத்த அணி எது என்பதில் தான் ஐக்கிய அரபு அமீரகம் தவிர்ந்த ஏனைய நான்கு அணிகளுக்கிடையிலும் கடுமையான போட்டி நிலவுகிறது.
நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள கடைசி இரண்டு போட்டிகள் இன்னும் விறுவிறுப்பை வழங்கும்.

இன்றைய தினம் ஸ்கொட்லாந்து அணியின் வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கினாலும், மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் ஸ்கொட்லாந்தின் வாய்ப்புக்கள் அற்றுப்போகும் என்பது குறிப்பிடத் தக்கது.முதற்சுற்றின் அசத்தல் அணியாக சூப்பர் சிக்ஸுக்குள் நுழைந்த ஸ்கொட்லாந்து (ஆப்கானிஸ்தானையும் வெற்றி கொண்டிருந்தது) இந்த சுற்றில் தடுமாறியுள்ளது.

இதேவேளையில் தற்போது புள்ளிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சிம்பாப்வேக்கு இரண்டாவது அணியாகத் தெரிவாகக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏற்கெனவே ஐந்து புள்ளிகளைப் பெற்றுள்ள சிம்பாப்வே நாளை ஒப்பீட்டளவில் பலவீனமான அணியான UAEயை இலகுவாக வெற்றிகொள்ளும் என்று நம்பப்படும் நிலையில் சிம்பாப்வே எதுவித சிக்கலும் இல்லாமல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்குத் தெரிவாகும்.

புள்ளிப் பட்டியல்


நேற்று முன்தினம் 289 ஓட்டங்களை பெற்ற பிறகும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகப் பெற முடியாமல் போன வெற்றி நிச்சயமாக சிம்பாப்வே அணிக்கு கவலையை அளித்திருக்கும். அந்தப் போட்டியில் வெற்றி கிடைத்திருந்தால் சிம்பாப்வே அப்போதே தெரிவாகியிருக்கும்.

தற்செயலாக ஐக்கிய அரபு அமீரகம் சிம்பாப்வேக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தால், இந்தத் தகுதிகாண் சுற்று ஆரம்பிக்குமுன் அதிக வாய்ப்புக்களை வைத்திருந்து இப்போது மிகப் பின் தள்ளப்பட்டுள்ள இரு அணிகளுக்கு சிறிய வாய்ப்புக்கள் கிட்டும்.

அயர்லாந்து & ஆப்கானிஸ்தான்.
இரண்டு அணிகளுக்கும் ஒரே நிலை தான். தமக்கு இடையிலே நடைபெறும் சூப்பர் சிக்சின் இறுதிப்போட்டியில் வென்றேயாகவேண்டும்.
அதே நேரம் சிம்பாப்வே நாளை வெல்லக்கூடாது.

முதற்சுற்றிலே இருந்து எந்தவொரு புள்ளியும் இல்லாமல் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள்ளே நுழைந்த ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள். இன்னொரு வெற்றியும் சாத்தியமானதே. ஆனால் சிம்பாப்வேயின் தோல்வி அவர்கள் கையில் இல்லையே.

இதனால் அண்மைய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இரு அணிகளுமே அடுத்த உலகக்கிண்ணத்தில் விளையாடாமல் போகும் நிலை ஏற்படவுள்ளதாகவே தெரிகிறது.

இன்றைய போட்டியின் முடிவில் முதல் இரு உலகக்கிண்ணங்களை வென்ற முன்னைய முடி மன்னவர்கள் மேற்கிந்தியத் தீவுகள் நிலை தெரியும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...