தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 17 மார்ச், 2018

பழி தீர்த்த பங்களாதேஷ், இறுதிப் போட்டியில்.. மீண்டும் பாம்பு நடனமும் மோதல் முறுகலும்

கொழும்பில் நடைபெறும் சுதந்திரக் கிண்ண T20 முத்தரப்பு தொடரில் இரு அணி வீரர்களிடையேயான கடைசி நேர மோதல்களை மீறி வங்கதேச வீரர் மஹ்முதுல்லா கடைசி ஓவரில் 4 பந்துகளில் தேவையான 12 ரன்களை விளாசி தன் அணியை இறுதிப்போட்டிக்கு இட்டுச் சென்றார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவும் பங்களாதேஷ்ம் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற, மீண்டும் இந்த முக்கியமான போட்டிக்காக அழைக்கப்பட்ட பங்களாதேஷ் தலைவர் ஷகிப் அல் ஹசன் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்ய, ஆரம்பத்தில் சடுதியாக விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி குசல் பெரேரா (61) திசர பெரேரா (58) நிமிரலினால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை எடுக்க முடிந்தது.

திசர தன்னுடைய கன்னி T20 அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார்.
குசல் ஜனித் பெரேரா குறைந்த இன்னிங்க்சில் 1000 T20 சர்வதேச ஓட்டங்களைக் கடந்த இலங்கை வீரர் என்ற சாதனையை சங்கக்காரவிடமிருந்து தன் வசப்படுத்தினார்.
சர்வதேச மட்டத்தில ஆறாவது வேகமான வீரர்.
மஹேல, சங்கா, டில்ஷான், மத்தியூஸ் ஆகியோருக்குப் பின் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த ஐந்தாவது இலங்கை வீரராவார்.

6வது விக்கெட்டுக்காக குசல் ஜனித் பெரெரா - திசர பெரெரா சேர்ந்து 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இது இலங்கை சாதனை.
சர்வதேசப் போட்டிகளில் 2வது மிகப்பெரிய 6வது விக்கெட்டுக்கான இணைப்பாட்டம்.


தொடர்ந்து ஆடிய வங்கதேசம் மோதல்கள், வாக்குவாதங்களுக்கிடையே 19.5 ஒவர்களில் 160/8 என்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

கடைசி ஓவர் நாடகம்: நோ-போல் சர்ச்சை, பாம்பு டான்ஸ், வாக்குவாதம்
வங்கதேச உதிரி வீரருக்கும் இலங்கை வீரருக்கும் மோதல் ஏற்பட்டது, ஷகிப் அல் ஹசன் வீரர்களை திரும்பி அழைப்பதில் குறியாக இருந்தார். அப்படிச் செய்திருந்தால் அது ஆட்டத்தைக் கைவிட்டதாகக் கருதப்பட்டு இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அணி முகாமையாளர் கலீத் மஹ்மூத். மஹ்முதுல்லாவிடம் போட்டியை முடித்து விட்டு வருமாறு செய்கை செய்தார்.

இலங்கை அணி வங்கதேசத் தொடருக்குச் சென்ற போது ஒருவிதமான பாம்பு டான்ஸ் ஆடி இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் கேலி, கிண்டல் செய்து வந்ததிலிருந்து இந்தப் பகைமை வளர்ந்து வந்துள்ளது.

இதோடு கடைசி ஓவரை உதான வீச முதல் பவுன்சர் முஸ்தபிசுர் ரஹ்மான் தோள்பட்டைக்கு மேல் சென்றது நோ-போல் கொடுக்கவில்லை, ஓட்டம் ஏதும் இல்லை. 2வது பந்தும் அதே மாதிரி செல்ல நடுவர் உயரமாகச் சென்றதற்கான நோ-போல் கொடுக்கவில்லை.

மறுமுனையில் நின்ற மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-போல் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்படிக் கொடுத்திருந்தால் 5 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்று ஆகியிருக்கும் ஆனால் மாறாக 4 பந்துகளில் 12 ரன்கள் என்ற இக்கட்டு ஏற்பட்டது.

பின்னர் லெக் அம்பயர் நோ-போல் சிக்னல் செய்ததாக ஆட்டம் முடிந்தவுடன் தமிம் இக்பால் கூறினார். சர்ச்சையான அதே 2ம் பந்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஒரு ‘பை’ ரன் எடுக்கலாம் எனும் முயற்சியில் ரன் அவுட் ஆக 4 பந்துகளில் 12 ரன்கள் தேவை. மஹ்முதுல்லா சாமர்த்தியமாக முஸ்தபிசுர் ரஹ்மானை அழைத்து ஒரு ஓட்டம் ஓடியதால் ஸ்ட்ரைக் இவர் கைக்கு வந்தது.
அடுத்த உதான பந்து சற்று வீசப்பட்டது, விட்டிருந்தால் அது அகலப் பந்து தான் ஆனால் மஹ்முதுல்லா அதனை கவர் திசையில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்து தாழ்வான full toss. 2 ஓட்டங்கள். வெற்றிக்குத் தேவை 6, கைவசம் 2 பந்துகள் மீதமுள்ளன,
அடுத்த பந்தை மஹ்முதுல்லா ஆறு ஓட்டங்களாக விளாச,
இறுதிப் போட்டிக்கு வங்கதேசம் முன்னேறியது.

வீரர்களின் சண்டை - சர்ச்சை

மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-போலுக்காக வாதிட்டுக் கொண்டிருந்த போது வங்கதேச மேலதிக வீரர் நூருல் ஹசன் குளிர் பானத்துடன் களத்துக்குள் வந்தார், அவர் சும்மாயில்லாமல் இலங்கை வீரர்களுடன் ஏதோ வாக்குவாதம் புரிந்தார்.
இலங்கை அணியின் தலைவர் திசர பெரெராவை விரல் நீட்டி வாக்குவாதம் புரிந்தார்.

இதனால் பொறுக்கமாட்டாமல் இலங்கை வீரர் ஒருவர் அந்த வீரரை தள்ளினார். இது வங்கதேச வீரர்களை கொதிப்படையச் செய்ய கேப்டன் ஷகிப் அல் ஹசன் மாடியிலிருந்து இறங்கி எல்லைக்கோட்டருகே வந்தார். அங்கு ஏதோ வாக்குவாதம் நிகழ களத்திலிருந்த மஹ்முதுல்லாவையும் ரூபல் ஹுசைனையும் மைதானத்தைவிட்டு வெளியேறுமாறு அழைத்தார். அப்போதுதான் கலீத் மஹ்மூத் ஆட்டத்தை முடித்து விட்டு வாருங்கள் என்று மஹ்முதுல்லாவுக்கு அறிவுறுத்தினார்.

இத்தோடு முடிந்ததா? மஹ்முதுல்லா வென்றவுடன் வங்கதேச வீரர்கள் குழுமி அதே நாகின் டான்ஸை ஆட இம்முறை இலங்கையின் குசல் மெண்டிஸ் வங்கதேச வீரர்களை நோக்கி கோபமாகச் செய்கை செய்ய தமிம் இக்பால் அவரைச் சமாதானப்படுத்தினார், மொத்தத்தில் தெருக்கிரிக்கெட்டில் நடக்கும் சண்டை போல் இருந்தன இந்தக் காட்சிகள்.

இன்னும் மோசமாக பங்களாதேஷ் வீரர்கள் தாம் தங்கியிருந்த ஓய்வறையையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளனர். இது பற்றி இப்பொழுது ICC விசாரணை நடத்துகிறது.

ஆட்ட நாயகனாக மஹ்முதுல்லா தேர்வு செய்யப்பட்டார், இறுதியில் இந்தியாவுடன் வங்கதேசம் மோதுகிறது, சொந்த மண்ணில் இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்துடன் வங்கதேச வீரர்களின் நாகின் டான்ஸ் வேறு இலங்கை வீரர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளது.
முதல் போட்டியில் இந்தியாவை வெற்றிகொண்ட பிறகு அடுத்த மூன்று போட்டிகளிலுமே இலங்கை அணி தோற்றுப்போயுள்ளது.
பங்களாதேஷ் சுற்றுல்லாவின் போது இரண்டு T20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணியையும் தமது முன்னாள் பயிற்றுனர் ஹத்துருசிங்கவையும் சொந்த மண்ணில் வைத்துப் பழி தீர்த்துள்ளது பங்களாதேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...