இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான சுதந்திர கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதி ஓவர் மற்றும் அதன் பின்னர் விரும்பத்தகாத வகையில் செயற்பட்டமை காரணமாக பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் மற்றும் அணியின் உதிரி வீரர் நூருல் ஹசன் ஆகியோருக்கு போட்டிக் கொடுப்பனவில் இருந்து 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் சபையின் போட்டி மத்தியஸ்தர் கிறிஸ் ப்ரோட் இந்த தீர்மானத்தை வௌியிட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த இரண்டு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு புள்ளி வீதம் அபராத அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கட் சபையினால் விதிக்கப்படும் போட்டியாளர் ஒழுக்காற்று சட்டகோவையில் முதல் நிலைக் குற்றம் என்பதன் காரணமாக போட்டியாளர்கள் இருவருக்கும் அபராதமாக நன்னடத்தைப் புள்ளிகள் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷகிப் அல் ஹசன் தன்னுடைய கோபத்தைப் பலவிதமாக வெளிக்காட்டியதுடன், மேற்சட்டையைக் கழற்றி வீசியும் தகாத வார்த்தைகள் பேசியதையும் காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் ஆடுகளத்தில் இருந்த பங்களாதேஷ் வீரர்களை வெளியே அழைத்து போட்டியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் ஈடுபட்டார்.
உதிரி வீரர் நூருல் ஹசனோ இலங்கை அணித் தலைவர் திசர பெரேராவுடன் வேண்டுமென்றே தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், விரல் நீட்டியும் மோசமான நடத்தையை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்படிப்பட்ட கிரிக்கெட்டின் கண்ணியத்தைக் கறைப்படுத்திய இருவருக்கும் இந்தத் தண்டனைகள் போதுமானவையல்ல என்று முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் தம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இந்த வீரர்களின் நடத்தைக்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோரியிருப்பதோடு, தங்கள் சபையும் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவிருப்பதாக உறுதியளித்துள்ளது.
இதேவேளை, வீரர்களின் ஓய்வறைக் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணை முடிவுகள் இன்னும் வெளியாக்கப்படவில்லை. அந்த உடைப்பிலும் கூட ஷகிப்பின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
0 கருத்துகள்