வீணாகிப்போன குசல் பெரேராவின் அதிரடி ! சுழல் + வேகத்தில் இலங்கையைச் சுருட்டிய தென் ஆபிரிக்கா

டெஸ்ட் தொடரில் தென் ஆபிரிக்கா அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை அணி மீண்டும் மத்தியூஸின் தலைமையில் களம் கண்ட முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நேற்று தோல்வி அடைந்தது. இது அஞ்செலோ மத்தியூஸ் தலைமை தாங்கிய 100வது ஒருநாள் சர்வதேசப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ககிசோ றபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றது.


ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில்  நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 36 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஆகியோர் அபாரமாக ஆடி அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். எனினும், இலங்கை அணியால் தென்னாபிரிக்காவுக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.   

இந்தப் போட்டியில் இலங்கை ஒருநாள் அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பினார். கடந்த ஜனவரி மாதம் இலங்கை ஒருநாள் அணிக்கு மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டது தொடக்கம் ஒரே ஒரு போட்டியில் அணியை வழிநடத்திய நிலையில் இரண்டு வாரத்திற்குள் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய மத்தியூஸ் ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்புவது இது முதல் முறையாக இருந்தது.

இலங்கை அணி கடந்த ஆறு மாதங்களில் ஆடிய முதல் ஒருநாள் போட்டியாக இது அமைந்தது. அத்துடன் மத்தியூஸ் இலங்கை அணித்தலைவராக தனது 100 ஆவது போட்டியில் அவரால் வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாதுபோனது.  இலங்கை ஒருநாள் அணிக்கு 100 போட்டிகளில் தலைமை வகிக்கும் நான்காவது வீரராக அவர் பதிவாகினார். இதற்கு முன்னர் அர்ஜுன ரணதுங்க (193), சனத் ஜயசூரிய (118) மற்றும் மஹேல ஜயவர்தன (117) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். மத்தியூஸ் தலைமையில் நேற்றைய போட்டியின் தோல்வியோடு 47 வெற்றிகளும் 47 தோல்விகளும் கிடைத்துள்ளன.

இலங்கை அணி 36 ஓட்டங்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு முதல் ஐந்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வரிசையில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.

எனினும், 6 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை தந்தனர். விக்கெட்டுகள் சரிந்திருந்தபோதும் இந்த இருவரும் தமது அதிரடி பாணியில் வேகமாக ஓட்டங்களை சேர்த்தனர். இதன்மூலம் இருவரும் இணைந்து 55 பந்துகளில் 92 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

திஸர பெரேரா 30 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பெற்றார்.

72 பந்துகளுக்கு முகம்கொடுத்த குசல் பெரேரா 11 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 81 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி 34.3 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில் மிரட்டும் பந்துவீச்சை வெளிக்காட்டிய வேகப்பந்து வீச்சாளர் ககிசோ றபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று இடதுகை சுழல் வீரர் ஷம்சியும் நான்கு விக்கெட்டுகளை பதம்பார்த்து தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

தனஞ்செயவின் பந்துவீச்சில் சிக்கலை எதிர்கொண்டிருந்தாலும்
மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த குயின்டன் டி கொக் மற்றும் அணித்தலைவர் ஃபப் டூ பிளசிஸ் 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். இந்நிலையில் இருவரும் தலா 47 ஓட்டங்களை பெற்று 3 ஓவர்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தபோதும் தென்னாபிரிக்க அணிக்கு அது சவாலாக இருக்கவில்லை.

மத்திய வரிசையில் அனுபவம் வாய்ந்த ஜே.பி. டுமினி அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். இதன்மூலம் தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. டுமினி ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை சார்பில் தனஞ்சய ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணியின் விக்கெட்டுகளை சாய்த்து தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதி செய்த தப்ரேய்ஸ் ஷம்சிக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 


இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் ஓகஸ்ட் முதலாம் திகதி தம்புள்ளையில் பகலிரவு ஆட்டமான நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை