ஆறுதல் வெற்றி, அபார வெற்றி !! சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி !!

இலங்கை - இங்கிலாந்து இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணிக்கு 219 ஓட்டங்களால் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
மழை குறுக்கிட்ட போட்டியில் DLS மழை விதி அடிப்படையில் 219 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியானது, இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணியால் பெறப்பட்ட மிகப்பெரிய ஒருநாள் போட்டி வெற்றியாக மாறியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியமையே மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது. எனினும் அந்த சாதனையை முறியடித்து, இலங்கை அணி டக்வர்த் லூவிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 219 ஓட்டங்களால் வெற்றியை சுவைத்துள்ளது.
இலங்கை அணி பெற்ற 366 ஓட்ட எண்ணிக்கையானது இந்த மைதானத்தில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 375 ஓட்டங்களை குவித்திருந்தது.
அத்துடன் இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற அதிகூடிய ஓட்ட என்னிக்கையாகவும், இந்த வருடத்தில் இலங்கை பெற்ற கூடுதல் ஓட்ட எண்ணிக்கையாகவும் அமைந்துள்ளது.
நேற்றைய போட்டியில் இங்கிலாந்தின் அணித்தலைவர் ஒயின் மோர்கன் ஓய்வெடுத்துக்கொண்ட அதேநேரம், ஜோஸ் பட்லர் அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார்..
முதல் தடவையாக கரான் சகோதரர்கள் சேர்ந்து விளையாடினர். அத்துடன் மார்க் வூட், லயம் ப்ளங்கெட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கை அணியின் லசித் மாலிங்கவுக்கு ஒய்வு கொடுத்து அவருக்குப் பதிலாக துஷ்மந்த சமீர விளையாடியிருந்தார்.
அமில அப்போன்சொவுக்குப் பதிலாக மீண்டும் சந்தக்கான் அணியில் சேர்க்கப்பட்டார்.

இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 366 ஓட்டங்களை குவித்தது. 
சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களுடனும், துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்ட டடிக்வெல்ல 95 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 
சதீர சமரவிக்கிரம தனது கன்னி அரைச்சதத்தைப் பெற்றார்.
நிரோஷன் டிக்வெல்ல மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 137 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு நேர்த்தியான  ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இந்த ஆரம்பமானது கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட சிறந்த ஆரம்பமாகவும், முதல் சத இணைப்பாட்டமாகவும் பதிவாகியது.

பின்னர் மத்திய வரிசையை பலப்படுத்திய குசல் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சந்திமால் அணிக்கு தேவையான இணைப்பாட்டமாக 102 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
நிதானமாக ஆடிய தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றார்.

மிக சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து  அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது இங்கிலாந்து அணி நான்கு ஓட்டங்களை பெற்றிருந்த போது தங்களது மூன்று விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்தது. ஜேசன் ரோய் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பட்லர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து, பின்னர் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்தது. 
லசித் மாலிங்கவுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட துஷ்மந்த சமீர 3 முக்கியமான விக்கெட்டுக்களை சரித்தார்.

பின்னர் ஸ்டொக்ஸ் மற்றும் மொயீன் அலி நம்பகமான இணைப்பாட்டத்தைப் புரிந்தாலும் அகில தனஞ்செயவின் மாயச் சுழலில்  இங்கிலாந்து தொடர்ந்து விக்கெட்டுக்களை இழந்தது.
367 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி, மழை கொட்டி போட்டி நிறுத்தப்பட்ட நேரம், 26.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை எடுத்திருந்தது.
ஸ்டோக்ஸ் - 67
அகில தனஞ்செய 4/19
துஷ்மந்த சமீர - 3/20

எவ்வாறாயினும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றி தொடர் வெற்றியைப் பெற்றது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான  T20 போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் : நிரோஷன் டிக்வெல்ல
தொடர் நாயகன் : ஒயின் மோர்கன்


கருத்துரையிடுக

புதியது பழையவை