25 சிக்ஸர்கள் குவிக்கப்பட்ட நேற்றைய போட்டியில் ஷேன் வொட்சன் மற்றும் சென்னை அணியின் தலைவர் தோனியின் அபார ஆட்டத்தினால் சென்னை அணி விறுவிறுப்பான, முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டெயார்டெவில்ஸ் அணிகள் பூனேயில் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை சென்னை அணிக்கு வழங்கியது.
சென்னை அணி நான்கு முக்கியமான மாற்றங்களை செய்தது.
காயமுற்ற தீபக் சஹார் மற்றும் பில்லிங்ஸ், தக்கூர், தாஹிர் ஆகியோருக்குப் பதிலாக டூ ப்ளெஸி, தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி ங்கிடி, கர்ன் ஷர்மா, கேரள இளம் வேகப்பந்து வீச்சு வீரர் அசிஃப் ஆகியோர் நேற்று விளையாடினர்.
அசிஃப் மற்றும் ங்கிடி ஆகிய இருவருக்கும் நேற்று IPL அறிமுகம்.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு வொட்சன் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். இவர் 40 பந்துகளில் 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் ராயுடு 41 ஓட்டங்களையும், டோனி ஆட்டமிழக்காமல் 22 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும் விளாசி அணியின் ஓட்ட இலக்கை 211 ஆக உயர்த்தினார்.
எனினும் வொட்சன் முதல் பந்திலேயே போல்ட்டின் பந்தில் lbw முறையில் ஆட்டமிழந்திருக்கவேண்டியவர். தொலைக்காட்சி நடுவரின் துணையுடன் தப்பிக்கொண்டார்.
வொட்சன் விளாசல், செம்மஞ்சள் தொப்பி ராயுடு அசத்தலின் பின் தோனி ஐந்து சிக்ஸர்களை வெளுத்திருந்தார்.
இந்நிலையில் 212 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி வெற்றியிலக்கை நோக்கி அதிரடியாக ஆடிய போதும், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
ஆரம்பத்தில் விக்கெட்டுகளை விரைவில் இழந்தபோதும், பாண்ட் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோரின் இணைப்பாட்டம் டெல்லிக்கு நம்பிக்கை அளித்தது.
டெல்லி அணிசார்பில் அதிரடியாக ஆடிய ரிஷாப் பாண்ட் 45 பந்துகளில் 79 ஓட்டங்களையும், விஜய் சங்கர் 31 பந்துகளுக்கு, ஐந்து சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இறுதி ஓவர் வரை நம்பிக்கை இருந்தது.
19வது ஓவரில் பிராவோவின் பந்துவீச்சில் 3 சிக்ஸர்களை விஜய் ஷங்கர் வெளுத்திருந்தார். எனினும் 28 ஓட்டங்கள் பெற வேண்டிய கடைசி ஓவரில் ங்கிடி மிகத் துல்லியமாக வீசி வெற்றியைச் சென்னை வசப்படுத்தினார்.
சென்னை அணிசார்பில் அஷிப் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரர் ஷேன் வொட்சன்.
இதனடிப்படையில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலாவது இடத்தையும், டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தையே பிடித்துள்ளது.
சென்னை G.பிரசாத்
சென்னை G.பிரசாத்
0 கருத்துகள்