Latest Updates

6/recent/ticker-posts

இலகு வெற்றி இலங்கை அணிக்கு - Nidahas Trophy 2018

Photo credits : ESPN Cricinfo

நேற்று கொழும்பில் ஆரம்பமான சுதந்திரக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி இலகுவான 5 விக்கெட் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

பொதுவாகவே இலங்கை அணிக்கு ராசியில்லாத மைதானமாகக் கருதப்படும் R.பிரேமதாச மைதானத்தில் தனது 15 வது  போட்டியில் மூன்றாவது வெற்றியையே நேற்றுப் பதிவு செய்திருந்தது.

அதேவேளை இது ஒரு சாதனை வெற்றியாகவும் அமைந்துபோனது.
இதுவரை இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி ஒரு அணி பெற்ற மிகப்பெரிய இலக்காக மூன்றாண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் வைத்திருந்த சாதனையையும் (173) நேற்று இலங்கை அணி முறியடித்தது.

நாணய சுழற்சியின் சாதகத்தைத் தனதாக்கிக் கொண்ட இலங்கை அணி, இந்தியாவைத் துடுப்பெடுத்தாட அனுப்பி,முதல் இரு ஓவர்களிலேயே இந்தியாவின் இரு மிகச் சிறந்த டுவென்ட்டி  20 துடுப்பாட்ட வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்தது.

இந்த அதிர்ச்சியிலிருந்து இந்தியா மீண்டெழ ஷீக்கார் தவானின் அதிரடித் துடுப்பாட்டம் ஓரளவுக்குக் கைகொடுத்தது.
பந்துகளை சகல பக்கங்களிலும் சிதறடித்த தவான் 6 ஆறு ஓட்டங்கள், 6  நான்கு ஓட்ட்ங்களோடு 49 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இது T 20 சர்வதேசப் போட்டிகளில் அவரது தனிப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

இலங்கை அணியின் பகுதி நேர சுழல்பந்துவீச்சாளர்கள் ஜீவன் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சு இந்திய அணியை 174 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தியிருந்தது.

இந்திய அணியில் நேற்று அறிமுகமான தமிழக சகலதுறை வீரர் விஜய் ஷங்கருடன் மேலும் இரு தமிழக வீரர்களான டினேஷ் கார்த்திக், வொஷிங்டன் சுந்தர் ஆகியோருமாக மூன்று தமிழர்கள் விளையாடியிருந்தனர் என்பது சிறப்பு.

இலங்கை அணி ஆரம்பம் முதல் அதிரடியாக ஆகியிருந்தது.
விக்கெட்டுக்களை இடையிடையே இழந்தபோதிலும் மூன்றாம் இலக்கத்தில் ஆட வந்த குசல் ஜனித் பெரேராவின் அசத்தல் ஆட்டம் இலங்கை அணியை முன்னிலையிலேயே நிறுத்தி வைத்திருந்தது.

ஷர்துல் தாக்கூரின் ஒரே ஓவரில் 27 ஓட்டங்களை அதிரடியாக விளாசியிருந்தார். இது இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவரில் கொடுத்த இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

ஸ்டுவர்ட் பின்னி 2016இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 32 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். 

குசல் ஜனித் தன்னுடைய அரைச்சதத்தை 22 பந்துகளில் பூர்த்தி செய்தார்.
மஹேல, சங்கக்கார இருவரும் தலா 21 பந்துகளில் கடந்ததே இலங்கையின் சாதனை.

சுந்தரின் சாதுரியம் குசலை ஆட்டமிழக்கச் செய்ய, இலங்கை கொஞ்சம் வேகம் குறைந்தது. 
குசல் ஜனித் பெரேரா - 37 பந்துகளில் 66 ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள்.

எனினும் அண்மைக்காலமாக இலங்கையின் கீழ்வரிசை அதிரடியாளர்களாகவும் போட்டி வெற்றியாளர்களாகவும் இருந்துவரும் திஸர பெரேரா, டசுன் ஷானக ஆகியோர் தடுமாற்றம் இல்லாமல் வெற்றியின் இலக்கை அடைய உதவியிருந்தார்கள்.

இந்திய அணியை இலங்கை அணி இலங்கையில் வைத்து மூன்று வருடங்களுக்குப் பெற்றுள்ள முதலாவது வெற்றி இதுவாகும்.

ஹத்துருசிங்க பயிற்றுவிப்பாளராக வந்த பிறகு மாறியுள்ள இலங்கையின் மனநிலையும் வெற்றிக்கான துடிப்பும் நேற்றைய வெற்றியுடன் மேலும் அதிகரித்துள்ளது என்பது நிச்சயம்.

சிரேஷ்ட, வழமையான வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி அடுத்த போட்டிக்காக இன்னும் சில தயார்ப்படுத்தல்களை செய்யவேண்டியிருக்கும்.

இந்தத் தொடரின் அடுத்த போட்டி நாளை இந்திய பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்