ரோஹித் + சுந்தரினால் சுருட்டி எடுக்கப்பட்ட வங்கப் புலிகள் - இறுதிப்போட்டியில் இந்தியா - Nidahas Trophy 2018

ஓட்டங்களைப் பெறாது தடுமாறி வந்த ரோஹித் ஷர்மாவை வலிமைப்படுத்தி மீண்டும் Hit man ஆக மாற்றி இறுதிப்போட்டிக்கு அனுப்பி வைத்துவிட்டு நாளை அரையிறுதிப்போட்டியாகவே நினைக்கக்கூடிய போட்டியில் இலங்கை அணியைச் சந்திக்கவுள்ளது பங்களாதேஷ்.

நேற்றை வரை இந்த சுதந்திரக் கிண்ணத் தொடரில் முதலில் துடுப்பாடிய அணி தோல்வியையே சந்தித்து வந்திருந்தது. அதை மாற்றியமைத்தது இந்தியா.

படம் : ESPNCricinfo 

வேகமாகத் துடுப்பாட்ட சற்று சிரமமாக இருந்த ஆடுகளத்தில் தன்னை form ற்கு கொண்டு வருவதற்கு சில ஓவர்களை ரோஹித் ஷர்மா எடுத்துக்கொள்ளும் வரை முதல் போட்டியிலிருந்து ஓட்டங்களைக் குவித்து வரும் தவானின் ஆட்டம் அணியை சரியான பாதையில் செலுத்தி வந்தது. பிறகு சுரேஷ் ரெய்னாவுடன் 106 ஓட்ட இணைப்பாட்டத்தில் தான் விஸ்வரூபம் எடுத்தார் இந்திய அணியின் தலைவர்.தன்னுடைய 13 வது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்த ரோஹித் கடைசிப் பந்துவரை ஆடுகளத்தில் நின்றார்.

கடைசி நேரங்களில் பங்களாதேஷ் அணியின் சிறப்பான பந்துவீச்சில் கொஞ்சம் கட்டுண்டு போனதால் அவரது மூன்றாவது T20 சர்வதேச சதம் கிடைக்காமல் போனது.
5 நான்கு ஓட்டங்கள், 5 சிக்ஸர்களுடன் 61 பந்துகளில் 89 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
சுரேஷ் ரெய்னா தனது மீள்வருகையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நேற்று வெளிப்படுத்திக்கொண்டார் - 30 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், 5 நான்கு ஓட்டங்களுடன் 47 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

பங்களாதேஷின் பதிலளிப்பில் இலங்கை அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தின் தொடர்ச்சி போலவே முஷ்பிகுர் ரஹீம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஆனால் அவரை விட வேறு யாரும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தாமல் சுருண்டுவிட 17 ஓட்டங்களினால் தோல்வி.

ரஹீம் - ஒரு சிக்ஸர், 8 நான்கு ஓட்டங்களோடு 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்கள்.
சபீர் ரஹ்மானுடனான இணைப்பாட்டம் ஓரளவு நம்பிக்கையை வங்கதேச ரசிகர்களுக்கு வழங்கியிருந்தாலும் வேகம் மந்தமாகவே இருந்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தை சிதறடித்தவர் தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர்.
படம் : ESPNCricinfo 

நான்கு ஓவர்களில் 22 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். அவரது மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும்.
18 வயது மட்டுமே நிரம்பியுள்ள சுந்தர் எதிர்காலத்துக்கான மிக நம்பிக்கை தரக்கூடிய ஒரு இளம் நட்சத்திரமாக எழுச்சி பெற்றுவருகிறார்.

கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து ஓட்டங்களை வாரி வழங்கிய சஹால் நேற்று மிகக் கட்டுப்பாடாகப் பந்துவீசியிருந்தார். நான்கு ஓவர்களில் 21 ஓட்டங்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

விஜய் ஷங்கரும், வொஷிங்டன் சுந்தரும் பந்துவீசிய நேரங்களில் விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக்குடன் தமிழில் உரையாடியது சுவாரஷ்யம்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவானார்.

ஓட்டங்கள் குவிக்கும் நம்பிக்கையுடன் இறுதிப் போட்டியில் இந்தியாவை வழிநடத்த ரோஹித் தயாராக, இலங்கையும் பங்களாதேஷும் நாளை 'அரையிறுதி'யில் விளையாடத் தயாராகின்றன.

உபாதை அச்சத்துக்குள்ளாகியிருந்த இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம் குசல் மெண்டிஸ் நாளைய தினம் விளையாடப் பூரண உடற்தகுதியோடு இருப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்திருப்பது இலங்கை ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதேவேளை பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசனும் விறல் முறிவிலிருந்து குணமடைந்திருப்பதாகவும் அணியுடன் சேர்ந்துகொள்ளவுள்ளதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

புதியது பழையவை