CSK - சென்னை சூப்பர் கிங்ஸ் - மூன்றாவது முறையாகவும் IPL கிண்ணத்தை சுவீ கரிக்குமா? - CSK - ஒரு பார்வை #IPL2018
இவ்வருடம் நடக்கவுள்ள 11 ஆவது ஐபிஎல் - IPL 2018 தொடரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்து விளையாடவிருக்கும் சென்னை அணி எப்படி?
ஓர் அலசல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை தோனி தலைமையில் IPL கிண்ணம் கைப்பற்றியுள்ளது. ஆனால் 2015 ஆண்டில் ஏற்பட்ட சூதாட்ட, போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு 2 வருடத்தடை விதிக்கப்பட்டதால் கடந்த இரண்டு சீசன்களில் இவ்விரண்டு அணிகளும் விளையாட முடியாமல் போனது. இந்த சீசனில் இவ்விரண்டு அணிகளுமே மீண்டும் வந்து விளையாடவுள்ளன. இது சென்னை ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி
உலகம் முழுவதும் வாழும் ஏராளமான தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சென்னை அணி தமக்கேயான அணி என்பது போல ஒரு தனியான பாசமுண்டு. கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் இல்லாத ஆர்வம் இம்முறை இந்த ரசிகர்களுக்கு இப்போதே ஏற்பட்டிருப்பதற்கான காரணம் மஞ்சள் சட்டை அணியான சென்னையின் மீள்வருகையே.
சென்னை அணி இவ்வருடத்திற்கான ஐபிஎல் ஏலத்தில் திறமையான வீரர்களை உள்வாங்கவில்லை எனவும் ஒப்பீட்டளவில் வயதில் மூத்த வீரர்களையுமே வாங்கியதாகவும் CSK ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தமது ஆதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகவீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் சென்னை வாங்கவில்லை. அத்தோடு சென்னை அணியில் தமிழக வீரர்களை பெருமளவு உள்வாங்கவில்லை என்பதும் சென்னை ரசிகர்களுக்கு வருத்தமாக அமைந்தது.
அஷ்வின் இதுபற்றி பகிரங்கமாகவே தனது மனவருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். அவர் மட்டுமன்றி அண்மைய கடைசிப் பந்து கதாநாயகன் தினேஷ் கார்த்திக்கும் CSKக்காக விளையாட முடியாமல் போகும் தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
எனினும் அஷ்வின் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கும், கார்த்திக் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் தலைமை தாங்கவுள்ளனர்.
இவர்கள் மட்டுமன்றி அண்மைக்காலத்தில் பிரகாசித்த மேலும் சில தமிழக இளைய வீரர்கள் வொஷிங்டன் சுந்தர், விஜய் ஷங்கர் ஆகியோரையும் ஏலத்தில் பெற சென்னை சூப்பர் கிங்ஸ் முயலவில்லை.
இவ் வருடம் விளையாடவுள்ள சென்னை அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, களத்தடுப்பு போன்றவற்றை விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.
சென்னை அணியின் துடுப்பாட்டவரிசை ரெய்னா, அம்பதி ராயுடு, தமிழக வீர்ர முரளி விஐய், கேதார் யாதவ், தோனி, மற்றுமொரு தமிழக வீரர் ஜெகதீசன், அவுஸ்திரேலிய அதிரடி வீரர் ஷேன் வொட்சன், சாம் பில்லிங்ஸ், தென் ஆபிரிக்க அணித்தலைவர் டூ பிளேஸி என நீண்டு செல்கின்றது. ஆனால் முன்னைய சென்னை அணியின் பிரண்டன் மக்கலம், டுவைன் ஸ்மித் போன்ற அதிரடி வீரர்களை தவறவிட்டமை அணிக்கு பின்னடைவே. ஏனெனில் இவ்வருடம் விளையாடவுள்ள சென்னை அணியின் துடுப்பாட்டவரிசையில் அதிரடி துடுப்பாட்டவீரர்களாக ரெய்னா, தோனி, வொட்சன் மட்டுமே உள்ளனர். இது சென்னைக்கு சற்று பின்னடைவு தான்.
சகலதுறைவீரர்களை பொறுத்தவரையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் டுவைன் பிராவோ, அவுஸ்ரேலிய வீரர் வொட்சன், ரவீந்தீர ஜடேஜா மற்றும் தீபக் சாகர் போன்றோர் இவ்வணியில் உள்ளனர்.
இருப்பினும் இதிலும் சென்னைக்கு சிக்கல் தான் ஏனெனில் ஜடேஜா முழுமையான உடற்தகுதியுடன் உள்ளாரா என்ற கேள்வியுள்ளது. நியூசீலாந்தின் மிச்சேல் சண்ட்னர் சத்திர சிகிச்சை காரணமாக இம்முறை விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சுவரிசையை பார்த்தால் அதுதான் பின்னடைவே. கடந்த சீசன்களில் சென்னை அணியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஊதாநிற தொப்பியை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணம் - மோகித் ஷர்மா. ஆனால் இந்த சீசனில் வேகப்பந்துவீச்சு வரிசை தான் சென்னைக்கு தலையிடியாக இருக்கும் போல. டுவைன் பிராவோவும், வொட்சனும் தான் சென்னை அணியில் அனுபவமான (மித) வேகப்பந்துவீச்சாளர்கள். இவர்களை விடுத்து இளம் வீரர்கள் அண்மையில் இந்திய அணியில் கலக்கி வரும் ஷர்துல் தாகூர், தீபக் சாகர் மற்றும் ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒரு போட்டி கூட விளையாடாத தென்னாபிரிக்காவின் லுங்கி ங்கிடி, மற்றும் இங்கிலாந்தின் மாக் வூட் ஆகியோர் தான் உள்ளனர் என்பது சென்னையின் வேகப்பந்துவீச்சு வரிசையில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது.
எனினும் சென்னை அணியில் சுழல் மாயாஜாலத்திற்கு பஞ்சம் இல்லை. இவ்வணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் குவிந்து காணப்படுகின்றார்கள். ரவீந்தீர ஜடேஜா, ஹர்பஜன் சிங், கரன் ஷர்மா மற்றும் தென்னாபிரிக்காவின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாகீர் இவர்களை விட பகுதி நேரத்தில் சுழலில் விக்கெட்டுகளை எடுக்கும் சுரேஸ் ரெய்னா, கேதார் யாதவ் ஆகியோரும் சென்னை அணியின் சுழலுக்கு பலம் சேர்க்கின்றது.
அத்துடன் சென்னை அணியில் அதிகமான சிறந்த களத்தடுப்பு வீரர்கள் உள்ளனர். குறிப்பாக மகேந்திரசிங் தோனி , ரெய்னா, ஜடேஜா, டுபிளிசிஸ், பிராவோ எனப் பல சிறந்த களத்தடுப்பு வீரர்கள் சென்னை அணியில் உள்ளனர்.
இதேபோல, சென்னை அணியில் என்ன குறைகள் இருந்தாலும் மகேந்திர சிங் தோனி என்ற ஒரு வார்த்தை போதும், சென்னை அணி கிண்ணத்தை கைப்பற்றி வர அவரது தலைமைத்துவம், அவரது அனுபவம் சென்னை அணிக்கு மிக மிகப் பெரும் பலம்.
Finisher என்ற அந்த மந்திர வார்த்தை தான் ரசிகர்களின் ஏக நம்பிக்கை.
அணியை எந்தக் கட்டத்திலும் தூக்கி நிமிர்த்திவிடக் கூடியவராக 'தள்ள தோனி இருக்கிறார்.
நடைபெறவுள்ள IPL தொடரில் சென்னை அணி மூன்றாவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றுமா?
உங்களுடன் நானும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். ஐபில் 11 ஆவது சீசனுக்காக..
தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை
0 கருத்துகள்