Latest Updates

6/recent/ticker-posts

ஸ்டீவ் ஸ்மித்துக்கு இன்னொரு இடி ! ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து நீக்கப்படுவாரா?


பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி, கேப்டன்பதவியை இழந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீடிப்பாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது. இதையடுத்து பேட்டி அளித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்மிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்தும், துணைக் கேப்டன் பதவி டேவிட் வார்னரிடம் இருந்தும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்ன நடவடிக்கை இருக்கும்
இது குறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் நிருபர்களிடம் இன்று கேள்வி எழுப்பியபோது அவர் கூறுகையில், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பின், பிசிசிஐ, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடவடிக்கையை எடுக்கும். இப்போதுள்ள நிலையில், எந்த நடவடிக்கையும் அவர் மீது பிசிசிஐ அல்லது ராஜஸ்தான் அணி ஏதும் எடுக்க முடியாது.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் மட்டுமல்ல மிக முக்கியமான வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஆதலால், அவருக்கு விதிக்கப்படும் தண்டனையைப் பொறுத்தே அணியின் முடிவு மாறுபடும். பொறுத்திருந்து பார்க்கலாம்’ எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு ஸ்மித், டேவிட் வார்னர் இருவரையும் பதவிநீக்கம் செய்துள்ளது குறித்து சுக்லாவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‘இது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உள்பிரச்சினை இதில் பிசிசிஐ, ஐபிஎல் அமைப்பு எந்த தலையீடும் செய்யாது. எங்களின் கவனம் எல்லாம் ஐசிசி என்ன சொல்லப்போகிறது என்பதுதான்’எனத் தெரிவித்தார்.
ஸ்மித் மிகவும் முக்கியம்
இதற்கிடையே பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்மித், வார்னர் ஆகிய இருவீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்கு மிக முக்கியமாகும். இவர்களின் ஒப்பந்தத்தை இந்த ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் உடனடியாக ரத்து செய்துவிட முடியாது. ஒருவேளை ஐசிசி ஒரு டெஸ்ட் போட்டிக்கு தடை விதித்தாலோ, அல்லது 3 மைனஸ் புள்ளிகள் கொடுத்தாலோ நாம் எப்படி கடினமான முடிவுகளை ஸ்மித், வார்னர் மீது எடுக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் 2 ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் போட்டிக்கு வந்துள்ளது. இப்போதுள்ள நிலையில், ஸ்மித் போன்ற நட்சத்திர வீரர் அவசியம்’ எனத் தெரிவித்தார்.
ஆதலால், ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், வார்னர் ஆகியோர் மீது ஐசிசி கடுமையான தண்டனைகள் விதித்தால் கூட அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் பெரும்பாலும் சிக்கல் இருக்காது, அந்த தண்டனைகள் ஐபிஎல் போட்டிகளை பாதிக்காது என்றே தெரிகிறது.
நன்றி : 
தி இந்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்