Latest Updates

6/recent/ticker-posts

சுதந்திரக் கிண்ணம் யாருக்கு? பங்களாதேஷின் அனுபவம் எதிர் இந்தியாவின் இளமை + அதிரடி


இலங்கையில் நடைபெறும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் பங்கேற்கும் முத்தரப்பு T20 கிரிக்கெட் தொடர் இலங்கையின் கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் 3 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்ட இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் இலங்கையும், வங்கதேசமும் தலா ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தன.

இந்த நிலையில் இலங்கை, வங்கதேசம் மோதிய கடைசி லீக் ஆட்டம் நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வங்கதேசம் 19.5ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

போட்டியை நடத்தி வரும் இலங்கை அணியானது, வங்கதேசத்துடன் மோதிய 2 லீக் போட்டிகளிலும் தோற்று வெளியேறியுள்ளது.

இறுதியாக நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் போட்டியின் சர்ச்சைகள் தொடர்ந்தாலும் தற்போதைக்கு ICCயின் தண்டனை அறிவிப்பும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் மன்னிப்பும் கொஞ்சம் தணிவைக் கொடுத்துள்ளது.

எனினும் பங்களாதேஷ் வீரர்களின் மோசமான நடத்தையும், பாம்பு நடன வெற்றிக் கொண்டாட்டங்களும் இலங்கை ரசிகர்களைப் புண்படுத்தியிருப்பதால் அனேக இலங்கை ரசிகர்கள் இன்று இந்திய அணிக்கே ஆதரவு அளிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

இலங்கை அணியுடனான் வெற்றி மற்றும் தலைவர் ஷகிப் அல் ஹசனின் வரவு என்பவற்றினால் பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு மிகவும் நம்பிக்கையுடன் வந்துள்ளது. அதே நேரத்தில் இந்திய அணி இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் தோல்வி கண்டாலும், அடுத்து தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியுள்ளது.

தலைவர் ரோஹித் சர்மா, தான் இழந்த formமை கடைசி ஆட்டத்தில் மீட்டார். அவர் அந்த ஆட்டத்தில் 61 பந்துகளில் 89 ஓட்டங்கள் குவித்தார். அதைப் போலவே மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் அபாரமாக ஆடி வருகிறார்.

அதேபோல சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களது அதிரடியை கடைசி ஆட்டத்திலும் தொடர்ந்தால் இந்திய அணிக்குக் கிண்ணம் வசமாகும்.

பந்துவீச்சில் இந்திய அணிக்கு ஷர்துல் தாக்குர், யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் வலு சேர்க்கின்றனர்.
அனுபவம் குறைவாக இருந்தாலும் ஆற்றலும் துடிப்பும் கொண்ட பந்துவீச்சு வரிசை.
இவர்களில் யாருக்கு அணியில் இடம் கிடைக் கும் என்பது இன்று மாலைதான் தெரியவரும்.

அதேபோல வங்கதேசம், இலங்கையுடனான 2 லீக் ஆட்டங்களிலும் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவுடனான 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட போதிலும், கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசம் பெற்ற வெற்றியானது அந்த அணிக்கு பெரிய அளவிலான நம்பிக்கையைத் தந்துள்ளது.

அணி வீரர்கள் தமிம் இக்பால், சவும்ய சர்க்கார், சப்பிர் ரஹ்மான், தலைவர் ஷகிப் அல் ஹசன், சிறப்பான form இல் சரமாரியாக ஓட்டங்களைக் குவிக்கும் முஷ்பிகுர் ரகீம், கடைசிப் போட்டியின் கதாநாயகன் மஹ்முதுல்லா ஆகியோர் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.

அதைப் போலவே பந்துவீச்சில் ரூபல் ஹொசைன், ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், மெஹதி ஹசன், மஹமதுல்லா, சவும்ய சர்க்கார் ஆகியோர் எதிரணியை மிரட்டுவர் என்பதில் சந்தேகமில்லை. இறுதி ஆட்டம் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

அணி விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ஜெய்தேவ் உனத்கட், யுவேந்திர சாஹல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், லோகேஷ் ராகுல், அக்ஸர் பட்டேல், தீபக் ஹூடா, முகமது சிராஜ்.

வங்கதேசம்: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தமிம் இக்பால், மஹமதுல்லா, ரூபல் ஹொசைன், ஷப்பிர் ரஹ்மான், சவும்ய சர்க்கார், நஸ்முல் இஸ்லாம், லிட்டன் தாஸ், தஷ் கின் அகமது, முஸ்தாபிஸுர் ரஹ்மான், மெஹதி ஹசன், அரிபுல் ஹக், நூருல் ஹசன், அபு ஹைதர் ரானி, அபு ஜாயேத். - பிடிஐ

நேரம்: இரவு 7 மணி

நேரடி ஒளிபரப்பு: டி ஸ்போர்ட்

கருத்துரையிடுக

0 கருத்துகள்