தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

ஞாயிறு, 25 நவம்பர், 2018

மூன்று நாளில் முடிந்த கதை, வங்கச் சுழலில் சிக்கிச் சுருண்ட மேற்கிந்தியத் தீவுகள்

இரண்டாம் நாளில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சிட்டகொங் ஆடுகளத்தில் நேற்று மூன்றாவது நாளிலேயே முதலாவது டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது,

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 64 ஓட்டங்களால் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. மேலும் இப்போட்டியின் சிறப்பம்சமாக பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் உபாதையிலிருந்து மீண்டும் அணிக்குத் திரும்பியதும்,  நயீம் ஹசன் எனும் இளம் சுழல் பந்துவீச்சாளர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மொமினுல் ஹக் பெற்றுக் கொண்ட சதத்தின் உதவியோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 324 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக மொமினுல் ஹக் அதிக பட்சமாக 120 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இது அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 8 ஆவது சதம் மட்டுமின்றி இவ்வாண்டில் பெற்றுக் கொண்ட 4 ஆவது சதம் ஆகும். மேலும் பங்களாதேஷ் வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக் கொண்ட அதிக சதங்கள் என்ற தமீம் இக்பாலின் சாதனையை சமப்படுத்தியதோடு, நடப்பாண்டில் அதிக சதம் பெற்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் சமப்படுத்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக பந்து வீச்சில் ஜோமெல் வொரிக்கன் மற்றும் ஷன்னோன் கேப்ரியல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனினும் 6 ஆவது விக்கெட்டுக்காக ஹெட்மயர் மற்றும் டௌரிச் ஆகியோர் இணைந்து 92 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி  பங்களாதேஷ் அணியை விட 78 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 246 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஹெட்மயர் அதிரடியாக துடுப்பாடி 47 பந்துகளில் 63 ஓட்டங்களையும் டௌரிச் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் பெற்று அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில் அறிமுக வீரர் நயீம் ஹசன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்ததுடன் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இளம் வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியிருந்தார். அவருக்கு வயது 17 வருடங்கள் 356 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

78 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த பங்களாதேஷ் அணி நேற்றைய (23) இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 55 ஓட்டங்களை மட்டுமே பெற்று மோசமான துடுப்பாட்ட பிரதியை வழங்கியிருந்தது. எனினும் இன்றைய தினம் (24) அதனை சீர்செய்யும் நோக்கில் தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளின் துல்லியமான பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் மேலதிகமாக 70 ஓட்டங்களைப் பெற்று மொத்தமாக 203 ஓட்டங்கள் முன்னிலையுடன் 125 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் மஹ்மதுல்லா பெற்றுக் கொண்ட 31 ஓட்டங்களை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடனே ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்து வீசிய தேவேந்திர பிஷூ நான்கு விக்கெட்டுகளையும் ரோஸ்டன் சேஸ் 3 மற்றும் வொர்ரிகன் 2 விக்கெட்டுகள் என கைப்பற்றியிருந்தனர்.

204 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷ் சுழல் பந்து வீச்சினை எதிர் கொள்ள முடியாமல் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 64 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சுனில் அம்ப்ரிஸ் 43 ஓட்டங்களையும் வொர்ரிகன் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டதோடு ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் அணி சார்பாக தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன் மெஹ்தி ஹசன் மிராஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர். இரண்டாவது இன்னிங்சில் கிரன் பவலின் விக்கெட்டை கைப்பற்றிய ஷகிப், டெஸ்ட் போட்டிகளில் தனது 200 ஆவது விக்கெட்டாக அதனை பதிவு செய்திருந்தார். \

மேலும் டெஸ்ட் போட்டிகளில் 3000 ஓட்டங்களையும் 200 விக்கெட்டுகளையும் வேகமாக கடந்த வீரராகவும் சாதனை படைத்திருந்தார். அவர் 54 போட்டிகளில் இச்சாதனையை நிலைநாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக சதம் பெற்ற பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் மொமினுல் ஹக் தெரிவானார். தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...