தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Friday, October 19, 2018

அப்பாஸ் அசத்தல் !! பாகிஸ்தான் பிரம்மாண்டமான வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது !!

மொஹமட் அப்பாஸின் அற்புதமான வேகப்பந்து வீச்சினால் பாகிஸ்தான் அணிக்கு அபுதாபியில்நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  373 ஓட்டங்களால் மிகப்பெரிய வெற்றி கிட்டியது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் சார்பாக ஃபகர் சமான் மற்றும் மிர் ஹம்ஸா ஆகியோர் அறிமுக வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.  

பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியொன்றில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக அமைவதுடன், அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற மிகப்பெரிய தோல்வியாகவும் பதிவாகிறது.
முதலாவது இன்னிங்க்சில் 57/5 என்ற மோசமான நிலையிலிருந்து 6 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஃபகர் சமான் மற்றும் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட் ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டம் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இருவரும் இணைந்து 147 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஃபகர் சமான் தனது அறிமுக போட்டியில் கன்னிச்சதம் பெறும் வாய்ப்பை வெறும் 6 ஓட்டங்களால் தவறவிட்டு, 94 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அணித்தலைவர் சப்ராஸ் அஹமட்டும் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதம் பெறும் வாய்ப்பை இழந்தார்.  இறுதியாக பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் நேதன் லயொன் 4 விக்கெட்டுகளையும் மார்னஸ் லபுஷேன் 3 விக்கெட்டுகளையும்  கைப்பற்றியிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 145 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் மிகச் சிறப்பாக பந்து வீசிய மொஹமட் அப்பாஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் பிலால் ஆசிப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

137 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி முதலாம் இன்னிங்க்ஸை விட நிதானமாகவும் பொறுப்பாகவும் துடுப்பாடி 9 விக்கெட்டுகளை இழந்து 400 ஓட்டங்கள் பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு 538 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்து தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக இரண்டாம் இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாபர் அசாம் டெஸ்ட் போட்டிகளில் தனது கன்னிச்சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டு 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  மேலும் முதலாம் இனிங்ஸில் சிறப்பாக ஆடிய அதே இருவரான சப்ராஸ் அஹமட் 81 ஓட்டங்கள், ஃபகர் சமான் 66 ஓட்டங்கள் மற்றும் அஸார் அலி 64 ஓட்டங்கள் என பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்காற்றியிருந்தனர். லயொன் 4 விக்கெட்டுகளையும் லபுஷேன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.  

538 ஓட்டங்கள் என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி  இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது போல் மோசமான துடுப்பாட்டத்தின் வெளிப்பாடாக 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.  

இப்போட்டியில் காயமடைந்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா இரண்டாம் இன்னிங்ஸிற்காக கடைசி வரை துடுப்பெடுத்தாட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தோல்வியானது அவர்களால் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட நான்காவது மோசமான தோல்வியாகும்.

சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அப்பாஸ் 5 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் மொஹமட் அப்பாஸ் தெரிவானார்.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 24 திகதி நடைபெறவுள்ளது.
No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...