தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

மோசமான களத்தடுப்பின் விளைவு - மீண்டும் ஒரு தோல்வி இலங்கைக்கு

பாடசாலை அணி போல மிக மோசமாகக் களத்தடுப்பில் ஈடுபட்ட எமக்கு இந்தத் தோல்வி உகந்தது தான் - இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் நேற்றைய போட்டியின் பிறகு விரக்தியும் கவலையாக சொன்னவை இவை.

மிக மோசமான முறையில் பிடிகளைத் தவறவிட்ட இலங்கை அணி, பந்துகளைத் தடுப்பதிலும் சறுக்கல்களை வெளிப்படுத்தியது. பெரியளவு ஓட்டங்களைப் பெறாவிட்டாலும் கொஞ்சமாவது போராட்டத் திறனை வெளிப்படுத்தி வென்றிருக்கக்கூடிய போட்டியில் 4 விக்கெட்டுக்களால் தோற்றுப்போனது.

இலங்கை அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற  இரண்டாவது ஒருநாள் போட்டியில்,  தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இதன் மூலம் தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி நிர்ணயித்திருந்த 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 42.5 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
விக்கெட் காப்பாளர் டீ கொக்கின் அதிரடியான 87 ஓட்டங்கள் தென் ஆபிரிக்காவுக்கு கைகொடுத்தது.


பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி உபாதைக்குள்ளாகியுள்ள லஹிரு குமாரவுக்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜிதவையும், லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அறிமுக சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரியவையும் களமிறக்கியது.

முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் தென்னாபிரிக்க அணி, அதே பதினொருவருடன் நேற்றைய போட்டியில் களமிறங்கியிருந்தது.

முதல் போட்டியில் வேகப் பந்துவீச்சின் மூலமாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்த தென்னாபிரிக்க அணி, நேற்றைய போட்டியிலும் அதே பாணியை கையாண்டது. முதலாவது போட்டியில் றபாடாவிடம் சவாலை எதிர்கொண்ட இலங்கை அணிக்கு, லுங்கி என்கிடி கடுமையான சவாலை முன்வைத்தார்.

விக்கெட்டுக்களை இடையிடையே இழந்த இலங்கை அணிக்கு அணித் தலைவர் அஞ்செலோ மத்தியூசுடன் இணைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நிரோஷன் திக்வெல்ல தனது ஆறாவது ஒருநாள் அரைச்சதத்தை பூர்த்திசெய்தார். இந்த அரைச்சதமானது சுமார் 16 இன்னிங்சுகளுக்கு பின்னர் திக்வெல்ல பெற்ற அரைச்சதமாக பதிவாகியது. தொடர்ந்தும் இருவரும் நிதானமாக ஆட இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை கடந்தது. 

 இறுதிவரை போராடிய அஞ்செலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 111 பந்துகளை எதிர்கொண்டு 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.

மத்தியூஸ் தன்னைச் சுற்றி விக்கெட்டுக்களை இழந்துகொண்டிருந்ததனால் இறுதிவரை வேகம் சற்று மந்தமாகவே ஆடியிருந்தார்.
இந்த ஆட்டத்துடன் 3000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்களை அணித்தலைவராகப் பெற்ற நான்காவது இலங்கைத் தலைவரானார்.
5608 - Arjuna Ranatunga (183 inns) 4377 - Sanath Jayasuriya (118 inns) 3352 - Mahela Jayawardene (117 inns) 3075 - Angelo Mathews (88 inns)*

தம்புள்ளை மைதானத்தை பொறுத்தவரையில் சற்று சவால் மிக்கதான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த முற்பட்ட போதும், இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பின் காரணமாக பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டதுடன், எதிரணிக்கு மேலதிக ஓட்டங்களும் வாரி வழங்கப்பட்டது.

இதன்படி ஓட்டங்கள் குவிக்கப்பட, தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் அரைச்சதம் கடக்க, டெஸ்ட் தொடரில் மோசமாக துடுப்பெடுத்தாடி வந்த ஹாஷிம் அம்லாவும் குயின்டன் டி கொக்கிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார். எனினும் தொடர்ந்து தனது துடுப்பாட்டத்தை நகர்த்த முடியாத, அம்லா 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய தனஞ்சய  புதிதாக களமிறங்கிய எய்டன் மர்க்ரமையும் 3 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். இதனால் தென்னாபிரிக்க அணி 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

எவ்வாறாயினும் மர்க்ரமின் இடத்தை நிரப்புவதற்காக களமிறங்கிய அணியின் தலைவர் ஃபப் டு ப்ளெசிஸ் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, மறுனையில் குயின்டன் டி கொக்கும் வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். இருவரும் 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, தென்னாபிரிக்க அணி வேகமாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. இதில் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குயின்டன் டி கொக், கசுன் ராஜிதவின் பந்தை எல்லைக்கோட்டுக்கு செலுத்த முற்பட்ட வேளை, லக்மாலிடம் பிடிகொடுத்து 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இந்த விக்கெட்டானது கசுன் ராஜிதவின் முதலாவது ஒருநாள் விக்கெட்டாகவும் பதிவானது.
முன்னதாக ராஜிதவின் பந்துவீச்சில் இரண்டு பிடிகள் தவறவிடப்பட்ட்துடன் ராஜிதவும் மிக மோசமாகக் களத்தடுப்பில் ஈடுபட்டார்.

இலங்கை அணியின் டிக்வெல்ல நேற்று துடுப்பாடும்போது உபாதைக்குள்ளானதை அடுத்து குசல் ஜனித் பெரேராவே விக்கெட் காப்பில் ஈடுபட்டிருந்தார்.

விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும், சிறந்த ஓட்டவேகத்துடன் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி வெற்றி இலக்கை நெருங்கியது. இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாப் டு ப்ளெசிஸ், 41 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அடுத்துவந்த டேவிட் மில்லர் 3 ஓட்டங்களுடன் வெளியேறி ஏமாற்றினார். இதற்கிடையில் துடுப்பெடுத்தாடிய ஜே.பி.டுமினி 29 பந்துகளுக்கு 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்.

இறுதியாக களம் நுழைந்த வியாம் முல்டர் 19 ஓட்டங்களையும், பெஹலுக்வாயோ 7 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து,  தங்களது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியை உறுதிசெய்தனர்.

இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், திசர பெரேரா மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் பகிர்ந்தனர்.
லக்மல் தனது நூறாவது ஒருநாள் சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றியதுடன் திஸர பெரேரா 150வது விக்கெட்டைக் கைப்பற்றிக்கொண்டார்.


இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என தென்னாபிரிக்க அணி முன்னேறியுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...