வோர்னுக்குப் பின் ஒரு ஜாம்பவான்: டெஸ்ட் கனவு கைவிட்ட அடம் சம்ப்பா - ஒரு சுழல் சூப்பர்ஸ்டாரின் கதை
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், ஷேன் வோர்னுக்குப் பிறகு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தன்னை ஒரு தனிப்பெரும் சுழல்பந்து ஜாம்பவானாக நிலைநிறுத்தியவர் அடம் சம்ப்பா (Adam Zampa). 33 வயதை எட்டியுள்ள இந்த லெக் ஸ்பின் சூப்பர்ஸ்டார், 200-க்கும் மேற்பட்ட போட்டிகளில் 300-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி, கடந்த ஒரு தசாப்தமாக அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய சக்தியாகத் திகழ்கிறார். அவர் விளையாடாத ஒரே ஒரு வடிவம்...
டெஸ்ட் கிரிக்கெட்!
33 வயதில் எட்டாக் கனி: ஒரு டெஸ்ட் போட்டி கூட இல்லை
சர்வதேச கிரிக்கெட்டில் தான் கடந்து வந்த பாதை குறித்து 'தி ஹௌவி கேம்ஸ்' நேர்காணலில் மனம் திறந்து பேசிய சம்ப்பா, ஒரு சுவாரஸ்யமான விடயத்தை வெளியிட்டார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், இதுவரை அவர் ஆஸ்திரேலியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை என்பதே ஆச்சரியம் தரும் விடயம்.
இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் மட்டுமே தனக்கு கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சியிருக்கலாம் என்ற நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவது இவருக்குச் சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால், இதைப் பற்றி சம்ப்பாவுக்கு எந்த வருத்தமும் இல்லை!
"நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட மிகவும் ஆசைப்பட்டிருப்பேன். ஆனால், சிறுவனாக இருந்தபோது, என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டால்... 'உன் நாட்டுக்காக 250 வெள்ளைப்பந்து போட்டிகளில் விளையாடுகிறாயா அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுகிறாயா?' என்றால், நான் 250 வெள்ளைப்பந்து போட்டிகளைத்தான் தேர்ந்தெடுப்பேன்," என்று உறுதியுடன் கூறினார் ஆடம் சம்ப்பா.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் அசைக்க முடியாத அஸ்திவாரம்
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் தாக்குதல் வரிசையில், ஒரு சுழற்பந்து வீச்சாளராக சம்ப்பா தனித்துவமாக நிற்கிறார். ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 200 விக்கெட்டுகளையும், T20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை நோக்கியும் பயணிக்கும் சம்ப்பா, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டார்.
2021 T20 உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஒருநாள் உலகக் கிண்ண வெற்றிகளில் இவர் வகித்த பங்கு மகத்தானது. முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி, எதிரணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை.
சம்ப்பாவின் இழப்பா? டெஸ்ட் கிரிக்கெட்டின் இழப்பா?
"ஒருவேளை சம்ப்பா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியிருந்தால், அவர் ஷேன் வோர்னைப் போலவே அல்லது அவரை விடச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பாரா?" என்ற கேள்வி கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் எப்போதும் உள்ளது. இதற்கான விடை ஒருபோதும் கிடைக்காது.
தனது சர்வதேச வாழ்க்கை முடிவதற்குள் இவருக்கு டெஸ்ட் தொப்பி கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனால், இவருக்கு டெஸ்ட் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால், அது சம்ப்பாவுக்கு ஏற்பட்ட இழப்பல்ல; மாறாக, டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்துக்கே ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பாகத்தான் இருக்கும். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இவர் நிலைநாட்டியிருக்கும் ஆதிக்கம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஸ்பின் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை இவருக்கு நிரந்தரமாகச் சூட்டியுள்ளது.
அடுத்த 2026 T20 உலகக் கிண்ணம் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் சம்ப்பா அங்கம் வகிப்பார் என்ற எதிர்பார்ப்பு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



0 கருத்துகள்