Latest Updates

6/recent/ticker-posts

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் சாதனை

இந்தியாவின் அதிகம் அறியப்படாத இளம் வீரர் ஒருவர் ஒரே இன்னிங்சில் எதிரணியின் 10 விக்கெட்டுக்களையும்  வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்றுவரும் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் சிதாக் சிங் எனும் வீரர்.

ஒரு இன்னிங்ஸின் பத்து விகெட்டுகளையும் ஒரே வீரர் கைப்பற்றுவதென்பது அரிதினும் அரிதாகவே நடக்கக் கூடியது.

சர்வதேச கிரிக்கெட் முதல் உள்ளூர் கிரிக்கெட் வரைக்கும் மிகச் சிலரே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் என்ற சுழற்பந்து வீச்சாளரும் இந்திய அணியின் சார்பில் அனில் கும்ப்ளேயும் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

மிக சமீபமாக கும்ப்ளே 1999ம் ஆண்டு டெல்லி பெரோஸா கோட்லாவில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார்.

சமீப காலமாக இந்த பத்து விக்கெட் வீழ்த்திய சாதனை குறித்த போட்டிகள் நம் காதுகளுக்கு எட்டாத நிலையில் புதுச்சேரியில் அந்த சாதனையைத் தற்போது நிகழ்த்திக் காட்டியுள்ளார் புதுச்சேரி அணிக்காக விளையாடிய சிதாக் சிங் எனும் இளம் சுழற்பந்து வீச்சாளர்.

 நேற்று வெள்ளிக்கிழமை  புதுச்சேரி சிஏபி சீச்செம் அரங்கில் நடந்த போட்டியில் மணிப்பூர் அணிக்கு எதிராகத்தான் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் அவர்.

17.5 ஓவர்கள் பந்துவீசி 7 மெய்டனுடன் 31 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் பத்து விக்கெட்டுகளையும் மள மளவென வீழ்த்தினார். இதனால் மணிப்பூர் அணி 71 ரன்களுக்கு சுருண்டது.

பத்து விக்கெட் வீழ்த்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால் விரைவில் ஐபிஎல்லிலோ தேசிய அணியிலோ இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்