Latest Updates

6/recent/ticker-posts

மழையும் சிக்ஸர் மழையும் !! 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி ! #DDvRR #IPL2018


2018 ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற, டெல்லிக்கு மிக முக்கியமான போட்டியில் டெல்லி டெயார்டெவில்ஸ் அணி திரில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்நோக்கி, டெல்லி அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி, துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை டெல்லி அணிக்கு வழங்கியது.

எனினும் நாணய சுழற்சியின் பின்னர் மழை குறுக்கிட்டதால், அணிக்கு 18 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கொலின் மன்ரோ ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்க, அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரிதிவ் ஷாவ் அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தனர்.

பிரிதிவ் ஷாவ் 47 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ரிஷப் பாண்ட் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 29 பந்துகளில் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஐயரும் பாண்டும் சேர்ந்து மிக வேகமாக 92 ஓட்டங்களை 7.1 ஓவர்களில் பெற்றிருந்தார்கள்.

இதன்படி 17.1 ஓவர்களில் மீண்டும் மழை குறுக்கிட, டெல்லி அணி 6 விக்கட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்து வீச்சில் ஜெயதேவ் உனட்கட் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

மழை ஓய்ந்த பின்னர் டக்வர்த் லூயிஸ் முறைப்படி ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களுக்கு 151 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பட்லரும் ஷோர்ட்டும் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய போதும், ராஜஸ்தான் அணி 12 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 26 பந்துகளுக்கு 67 ஓட்டங்களையும், ஷோர்ட் 25 பந்துகளுக்கு 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
இந்த இருவரது அதிரடி இணைப்பாட்டம் 6.4 ஓவர்களில் 82 ஓட்டங்களை எடுத்து நல்ல அடித்தளம் ஒன்றை இட்டிருந்தாலும் பின் வந்த துடுப்பாட்ட வீரர்கள் சறுக்கியிருந்தார்கள்.
அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் மீண்டும் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை.

டெல்லி அணியின் பந்து வீச்சை பொறுத்தவரையில் ட்ரென்ட் போல்ட் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியின் நிறைவில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், ராஜஸ்தான் அணி 7வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

மழையின் குறுக்கீட்டுகளின் இடையில் நடந்த  நேற்றைய போட்டியில் மொத்தமாக 25 சிக்ஸர்களும் விளாசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரிஷாப் பாண்ட் தெரிவானார். நேற்றைய அதிரடி ஆட்டத்தோடு சென்னையின் ராயுடுவிடமிருந்த செம்மஞ்சள் தொப்பியையும் தன்வசப்படுத்திக்கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்