Latest Updates

6/recent/ticker-posts

வேகமான 100 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுகள் - உலக சாதனையை நெருங்கும் 19 வயது சுழல் புயல்

யுத்த பூமியில் மலர்ந்த செந்தாமரை என கிரிக்கெட் உலகில் வர்ணிக்கப்படும் ஆப்கானிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நெருங்கியுள்ளார்.

இதுவரை 43 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ரஷீத் கான், பெரும்பாலும் இன்று நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான உலகக்கிண்ணத் தகுதிகாண் இறுதிப் போட்டியில் இந்த சாதனையை உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை அவுஸ்ரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வசம் இப்போது உள்ளது. அவர், 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை ரஷீத் கான் இன்று தகர்ப்பார் என நம்பப்படுகின்றது.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், சக்லைன் முஷ்தாக் 53 போட்டிகளிலும், ஷேன் பொண்ட் 54 போட்டிகளிலும், பிரெட் லீ 55 போட்டிகளிலும், 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 50 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுக்களை 26 போட்டிகளில் வீழ்த்திய ரஷீத் கான், கடைசியாக விளையாடிய 17 போட்டிகளில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியக்கவைத்துள்ளார்.

வ.சோழன் - யாழ்.நல்லூர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்