தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 17 செப்டம்பர், 2018

கலக்கிய பாகிஸ்தானின் இளையோர் - ஹொங் கொங்கை இலகுவாக வீழ்த்தியது அசுர பல பாகிஸ்தான்

இந்த ஆசியக் கிண்ணத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புடைய அணியாகப் பலரும் கருதும் பாகிஸ்தானிய அணி தன்னுடைய முதலாவது போட்டியிலேயே மிக இலகுவாக ஹொங் கொங் அணியை வெற்றிகொண்டுள்ளது.

டுபாய் மைதானத்தில் நேற்றைய (பாகிஸ்தான் – ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி குழு A இன் முதல் லீக் ஆட்டமாகவும் அமைந்திருந்தது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஹொங்கொங் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.
பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் ஹொங்கொங் அணி 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது.

பாகிஸ்தான் அணியின் இளைய பந்துவீச்சாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர். உஸ்மான் கான் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சதாப் கான் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கான 117 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 23.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து எவ்வித அழுத்தங்களுமின்றி 120 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை இலகுவாகப்பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இமாம்-உல்-ஹக் அரைச்சதம் ஒன்றுடன் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்று பங்களிப்புச் செய்திருந்தார். 69 பந்துகளை எதிர்கொண்டிருந்த இமாம்-உல்-ஹக் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 69 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பபார் அசாம் 33 ஓட்டங்களை பாகிஸ்தான் அணியின் வெற்றிக்காக பெற்றுத் தந்திருந்தார்.
இதேவேளை இந்தப்போட்டியில் 2000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்களை விரைவாகக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார் பாகிஸ்தானிய வீரர் பபார் அசாம்.



போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர் உஸ்மான் கானுக்கு வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணி தமது அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்வரும் புதன்கிழமை (19) எதிர்கொள்கின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...