தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Tuesday, June 19, 2018

சர்ச்சைகள் நிரம்பிய 2வது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது #WIvSL

மழையும் சர்ச்சையும் நிறைந்திருந்த இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

நேற்றைய இறுதிநாள் ஆட்டம் மிக விறுவிறுப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காரணமாக 30 ஓவர்கள் இழக்கப்பட்டதனால் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்ட அதேவேளை மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் க்ரெய்க் ப்ரத்வெயிட்டின் மிகப்பொறுமையான துடுப்பாட்டமும் தோல்வியிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளைக் காப்பாற்றியிருந்தது.

93 ஓவர்களில் 296 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் ஆரம்பத்திலேயே இரு விக்கெட்டுக்களை கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் இழந்தாலும், இடையிடையே மேலும் விக்கெட்டுக்களை இழந்தாலும் ஒரு பக்கம் ப்ரத்வெயிட் நிதானமாக ஆடிக்கொண்டிருக்க இடையிடையே குறுக்கிட்ட மழையும் சேர்ந்து 60 ஓவர்களையே பந்துவீச அனுமதித்தது.

மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் போட்டி முடிவுக்கு வந்தது.

இலங்கை அணியின் மீது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக சர்ச்சைகள் இரண்டாம் நாளிலிருந்து தொடர்ந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்தியத் தீவுகள் 47 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணியின் போராட்டம் 342 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தது.
இப்படியான நெருக்கடியான வேளைகளில் சிறப்பாக ஆடிவரும் குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும், டிக்வெல்ல 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஷனன் கப்ரியல் இரண்டாம் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளர் ஒருவர் இலங்கை அணிக்கு எதிராக பத்து விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களில் மூன்றாவது மிகச்சிறந்த டெஸ்ட் போட்டிப் பெறுதியும் கப்ரியல் கைப்பற்றிய 13/121 ஆகும்.

இலங்கை அணியின் சார்பாக  கசுன் ராஜித சிறப்பாக பந்துவீசி கவனத்தை .ஈர்த்திருந்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷனன் கப்ரியல் தெரிவானார்.No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...