தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 28 மே, 2018

அல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள நிர்ணய சதி - மூவர் பணி நீக்கம் !!

இலங்கையில் காலி மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணப் படமொன்றை அல்- ஜஸீரா தொலைக்காட்சி நேற்று (27) மாலை ஒளிபரப்புச் செய்தது.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக முன்பு விளையாடிய இரண்டு வீரர்கள் பணத்திற்காக ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புபட்டு இருப்பதாக அந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி மைதான உதவி முகாமையாளர் தரங்க இந்திக மற்றும் முன்னாள் முதற்தர வீரரும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளரில் ஒருவரான தரங்க மெண்டிஸ் ஆகியோரே அவர்கள்.

இந்நிலையில், அல்– ஜஸீரா தொலைக்காட்சி வெளிப்படுத்திய ஆவணப் படத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆடுகள நிர்ணயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளது. 

அத்துடன் இந்த ஆட்ட நிர்ணய சதியுடன் தொடர்புபட்ட அனைவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது நபரான ஜீவந்த குலதுங்க இலங்கை அணிக்காக சில போட்டிகளை விளையாடியதுடன் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளராக இரு வருடகாலம் கடமையாற்றியவர்.
நான்காவது நபர் சில வருட காலம் இலங்கை அணிக்காக விளையாடிய வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே. இப்போது அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளார். தில்ஹார லொகுஹெட்டிகே கடந்த 2016ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

இதேநேரம், ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் எவராக இருந்தாலும், தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டணை வழங்குவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ”காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளத்தின் தன்மையை மாற்றி பணத்துக்காக ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை தொடர்பில் அல்– ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்களை அறியக்கிடைத்தமை மிகவும் வேதனையளிக்கின்றது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் நேசிக்கின்ற கிரிக்கெட் விளையாட்டில் இதுபோன்ற விடயங்களுக்கு இடமளிக்கக் கூடாது” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே, ஆடுகளத்தை மாற்றி ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பிலான விசாரணைகள் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று இரவு அவசரமாகக் கூடியது. 

இதன்போது, ஆட்ட நிர்ண சதி தொடர்பிலான விசாரணைகளை இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் எயார் கொமடோர் ரொஷான் பியன்வல மற்றும் பிரசன்ன வீரக்கொடி ஆகியோர் அந்தக் குழுவில் அடங்குகின்றனர். இதன்படி, ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சரினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பணத்திற்காக ஆடுகளத்தின் தன்மையை மாற்றி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் வெளியிட்ட அல்–ஜஸீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுடன் இணைந்து விசாரணைகளில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்ப வழங்க முன்வர வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின், ஊழல் எதிர்ப்பு பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்சல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் காலி மைதானம் சுழற்பந்து வீச்சாளருக்கு எப்போதுமே சாதகமான ஆடுகளமாக இருந்து வருவதனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 1/2 நாட்களில் முடிவடைந்த போட்டி பற்றி யாருக்கும் சந்தேகம் வரத் தேவையில்லை என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்றதிகாரி ஆஷ்லே டீ சில்வா அறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.


2016ஆம் ஆண்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர்கள் காலி மைதானத்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அல்–ஜஸீரா தெரிவித்துள்ளது.

அல் ஜஸீரா வெளியிட்ட முழுமையான ஆவணப்படம் :
Cricket’s Match Fixers - Al Jazeera Investigations - Shocking Video

இது இவ்வாறிருக்க, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் உதவி முகாமையாளரும், பராமரிப்பாளருமான தரங்க இந்திக்க மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தரிந்து மெண்டிஸ் ஆகியோர் காலி மைதானத்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கு மும்பையைச் சேர்ந்த முன்னாள் உள்ளூர் கிரிக்கெட் வீரர் றொபின் மொறிஸ் என்பவரின் உதவியை இதற்காகப் பெற்றுக்கொண்டுள்ளனர்.


இதில், கிரிக்கெட் வீரராகவும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புடைய மாவட்ட அணிக்கு பயிற்சியாளராகவும் செயற்பட்டு வருகின்ற தரிந்து மெண்டிஸ், இந்த ஆட்ட நிர்ணயத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவர் 2016/2017 பருவகாலத்தில் மூவர்ஸ் கழகத்துக்காக விளையாடியுள்ளதுடன், 2017இல் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஜீவந்த குலதுங்க மற்றும் தில்ஹார லொகுஹெட்டிகே ஆகியோர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவது போன்று கலந்துரையாடுகின்ற காணொளியையும் அல்–ஜஸீரா வெளியிட்டது.


இதேவேளை, குறித்த ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்புபட்ட வீரர்கள் நால்வரும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

R.M.நிரோஷன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...