தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 19 மார்ச், 2018

கார்த்திக் - கடைசிப் பந்து சிக்ஸ் - அபார வெற்றி பெற்ற இந்தியா ! - Nidahas Trophy 2018 இறுதிப்போட்டி

32 ஆண்டுகளுக்கு முதல் ஷார்ஜாவில் ஜாவேத் மியாண்டாட் செய்ததை நேற்றிரவு தினேஷ் கார்த்திக் T 20 போட்டியொன்றில் நிகழ்த்திக் காட்டியிருந்தார்.

கடைசிப்பந்து - தேவை ஐந்து ஓட்டங்கள்.
வழமையாக எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் தமது கால் பகுதியில் லாவகமாக அடித்து நொறுக்க ஆசைப்படுவர். ஆறு ஓட்டம் ஒன்றைக் குறிவைக்க இலகுவான திசை அது. இல்லாவிட்டால், நான்கு ஓட்டம் ஒன்றை முனைந்து பெற்று சிக்கல் இல்லாமல் சூப்பர் ஓவருக்கு அழைத்துச் செல்லும் எண்ணம் இருக்கும்.
ஆனால் ஆடுகளம் வந்த முதல் பந்தில் இருந்து ஒவ்வொரு பந்தாக துடுப்பின் மையப் பகுதியிலிருந்து பார்த்துப் பார்த்து விளாசிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்குக்கு எந்த வித பயமோ சந்தேகமோ இல்லை.
மனிதர் இந்தப் பருவ காலத்தில் இருக்கும் form அத்தகையது.
மிக உறுதியான மன நிலையோடு எக்ஸ்டிரா கவர் திசையில் பந்தை ஓங்கி அடிக்கிறார். பறக்கிறது சிக்ஸர்.
இந்தியாவுக்குக் கிண்ணம்.
மீண்டும் இந்தியாவுக்கு எதிராக மனவுடைவு பங்களாதேஷுக்கு.

 இதற்கு முந்தைய ஓவர்களில் விக்கெட் இழப்புக்கள், புதியவரான விஜய் ஷங்கரின் பதற்றம் காரணமாக ஓட்டங்களைப் பெறமுடியாமல் போன பந்துகள் என்று இந்தியாவின் தடுமாற்ற நிலையை மாற்றி நிலையை சுமுகப்படுத்தி அபாரமான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர் தினேஷ் கார்த்திக் தான்.

ஆனால் மிக அமைதியாக வெற்றியைக் கொண்டாடிய  விதத்தில் தன் சிரேஷ்ட பக்குவத்தைக் காட்டியிருந்தார்.

அண்மைக்காலத்தில் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளைக் காட்டி தவிர்க்கவே முடியாமல் அணியில் - குறிப்பாக ஒருநாள் அணியின் தடுமாற்றத்துக்குரிய நான்காம் இலக்கத்துக்கு என்று வந்த கார்த்திக்கின் ஆற்றலும் அனுபவமும் இப்போது இந்திய அணிக்கு மிகச் சிறப்பாகக் கைகொடுக்கிறது.

கோலி, தோனி போன்றோர் அணிக்குத் திரும்பிய பிறகும் இவரது இடம் நிரந்தரமாகட்டும்.

-----------

பாம்பு நடனமும் பங்களாதேஷ் வீரர்களின் அட்டகாசங்களும் சேர்ந்து இலங்கை அணி ரசிகர்களை எல்லாம் முதல் தடவையாக ஏகோபித்து இந்தியாவுக்கு ரசிகர்களாக மாற்றியிருந்த நேற்றைய இரவில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடும் வாய்ப்பை பங்களாதேஷுக்கு வழங்கியது. இதன் மூலம் துரத்தும் ராசியுடன் வெல்லலாம் என்ற எண்ணத்துடன்.

வழமை போல வொஷிங்டன் சுந்தரின் கட்டுப்பாடான ஆரம்ப ஓவர்களோடு, முந்தைய போட்டியில் மீண்டும் பழைய விக்கெட் பறிக்கும் ஆற்றலோடு திரும்பியுள்ள சஹாலின் 3 விக்கெட்டுக்களும் சேர்ந்து பங்களாதேஷைத் தடுமாற வைத்தபோதும் தனியொருவராக நின்று போராடிய சபீர் ரஹ்மான் 50 பந்துகளில் நான்கு சிக்ஸர்களுடன் 77 ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.

இதன் மூலம் இந்தியாவுக்கு சவால் வழங்கக்கூடிய 166 ஓட்டங்களைப்  பெற்றுக்கொண்டது.

இந்தியாவின் ஆரம்பம் தடுமாற்றகரமாக இருக்க, அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா ஒருமுனையில் நங்கூரம் இட்டுக்கொண்டார்.
அரைச்சதம் பெற்றாலும் வேகம் கொஞ்சம் மந்தம் தான்.
ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பு இன்னும் அணியின் வேகத்தை மந்தமாக்கியது.
மனிஷ் பாண்டே, விஜய் ஷங்கர் ஆகியோரின் தடுமாற்றம் தினேஷ் கார்த்திக்கை ஏழாம் இலக்கம் வரை தாமதப்படுத்திய ரோஹித் ஷர்மாவின் நுட்பம் பற்றி யோசிக்க வைத்தது.
போட்டி இறுக்கமாக, இந்தியாவுக்கு வாய்ப்புக்கள் அருகி வந்த நேரம் தான் உள்ளே நுழைந்தார் தினேஷ் கார்த்திக்.

தான் சந்தித்த முதல் பந்தையே அபாரமான ஆறாக மாற்றிக்கொண்ட கார்த்திக் அத்தனை நேரம் மிகச் சிறப்பாகப் பந்துவீசிய ருபேல் ஹுசெய்னின் ஓவரை 22 ஓட்டங்கள் கொண்ட ஓவராக மாற்றி விளாசினார்.

இறுதி ஓவரை சௌம்ய சர்க்கார் துல்லியமாக வீசிய போதும் கார்த்திக் கட்டம் போட்டு வெற்றியை வசப்படுத்திக்கொண்டார்.
ஷங்கரின் தடுமாற்றத்தையும் காப்பாற்றிய அவர் மற்றொரு தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் மறுமுனையில் நிற்கையிலே  இந்த அபார வெற்றியை அடைந்தது இன்னொரு சிறப்பு.

8 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 நான்கு ஓட்டங்களோடு 29 ஓட்டங்களைப் பெற்று போட்டியை மாற்றிய விதம் அபாரம்.
DK the Real Finisher என்று இனிப் புகழ ஆரம்பிப்பர்.

போட்டியின் நாயகனாக ஒரு தமிழக வீரர், கார்த்திக்.
தொடர் நாயகனாக பந்துவீச்சில் எதிரணிகளைத் தடுமாற வைத்த 18 வயதேயான மற்றொரு தமிழ் வாலிபர் வொஷிங்டன் சுந்தர்.

28 ஆண்டு காலம் நிலைத்திருந்த முன்னாள் பாகிஸ்தான் வேகப்புயல் வக்கார் யூனிஸின் சாதனையையும் முறியடித்தார் சுந்தர்.
இள வயதில் தொடர் நாயகன் விருது பெற்ற சாதனையே அது.

வக்கார் - 18 வயது 169 நாட்களில்
சுந்தர் - 18 வயது 164 நாட்களில்.



எல்லாவற்றையும் தாண்டி இலங்கை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா கிண்ணம் வென்றதும், இலங்கை ரசிகர்கள் பங்களாதேஷைப் பழித்தும் களித்தும் பாம்பு நடனமாடி இந்த வெற்றியைத் தம் அணியின் வெற்றி போலவே கொண்டாடியதும் கண்கொள்ளாக் காட்சிகள்.

ரோஹித் ஷர்மாவும் இலங்கை ஜனாதிபதியின் கைகளால் சுதந்திரக் கிண்ணத்தைப் பெற்ற பிறகு விசேடமாக இலங்கை ரசிகர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...