தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 10 மார்ச், 2018

உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ள ஆப்கானிஸ்தான் !! அசத்தும் புதிய அணிகள் - CWCQ


சிம்பாப்வேயில் இடம்பெற்றுவரும் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகளில் தான் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோற்றுப் போயுள்ள ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியான இரண்டாவது உலகக்கிண்ணப் போட்டித்தொடரில் பங்குபற்றும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துள்ளது.

இந்தத் தகுதிகாண் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் முன்னாள் உலகச் சம்பியன்களான மேற்கிந்தியத் தீவுகளை விட அதிக வாய்ப்புடைய அணியாகக் கருதப்பட்ட ஆப்கனிஸ்தானின் அடுத்தடுத்த அதிர்ச்சித் தோல்விகள் அனைத்துக் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியமே.
அதிலும் தரப்படுத்தலில் அண்மையில் உலகின் முதல் நிலை சுழற்பந்து வீச்சாளராக (ஒருநாள் மற்றும் T 20) முன்னேற்றம் கண்ட ரஷீத் கான் மற்றும் அவரது சகபாடிகளின் சுழல்பந்து வியூகங்கள் இருந்தும், ஹொங் கொங் போன்ற ஒரு புதிய, சிறிய அணியிடம் தோல்வி கண்டது மிகப்பெரும் புதினமே.

அட்கின்சன், சப்மன் போன்ற முக்கியமான வீரர்கள் இல்லாமலேயே ஹொங் கொங் தனது முதலாவது 'பெரிய' வெற்றியைப் பெற்றுள்ளது. ஹொங் கொங் ICCயின் முழுமையான அந்தஸ்து பெற்ற அணியொன்றை முதல் தடவை வெற்றிகொண்டுள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் அணியொன்றுக்கு மிக இளவயதில் தலைமை தாங்கிய பெருமையைப் பெற்றுக்கொண்ட ரஷீத் கான் தான் தலைமை தாங்கிய மூன்று போட்டிகளிலும் தோல்வியையே பெற்றுள்ளார்.

அடுத்த சுற்றான சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இன்னும் தகுதிபெறக்கூடிய வாய்ப்பு இருந்தாலும் அது மிக சாத்தியக் குறைவானதே.

அதே பிரிவில் உள்ள ஸ்கொட்லாந்து அணி மூன்று தொடர்ச்சியான வெற்றிகளுடன் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் அணியாகியுள்ளது.
சிம்பாப்வே இரண்டு வெற்றிகளோடு அடுத்த நிலையில் உள்ளது. சிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவின் அற்புதமான சகலதுறை ஆற்றல் இந்தத் தகுதிகாண் சுற்றின் சிறப்பம்சமாக இதுவரை இருக்கிறது.

ஹொங் கொங் அணி இன்னொரு வெற்றியை (நேபாளத்துக்கு எதிராக) பெற்றால் அது ஆப்கனிஸ்தானுக்கு ஆப்பாக மாறும்.

மற்றைய பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் எதிர்பார்த்தது போலவே முன்னணியில் திகழ்கின்றன. தலா இரண்டு போட்டிகள், இரண்டு வெற்றிகள்.
ஐக்கிய அரபு அமீரகம் முதலாவது போட்டியில் தோற்ற பிறகு அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று மூன்றாம் நிலையிலுள்ளது.
இப்போதிருக்கும் நிலையில் இந்த மூன்று அணிகளைத் தாண்டி பப்புவா நியூ கினியா அல்லது நெதர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்குச் செல்வது என்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

எனினும் புதிய அணியான பப்புவா நியூ கினியா காட்டிய போராட்ட குணமும், இளம் வீரர்களோடு ஹொங் கொங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் காட்டும் வல்லமையும் எதிர்கால சர்வதேசக் கிரிக்கெட்டின் பரம்பல் பற்றிய நம்பிக்கையை வழங்குகிறது.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் மோதப்போகும் ஆறு அணிகளில் அதிக புள்ளிகளைப் பெறும் இரண்டு அணிகள் நேரடியாக 2019இல் இலங்கிலாந்தில் இடம்பெறும் உலகக்கிண்ணத்தில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறும்.
அத்துடன் முன்னணி இடங்களைப் பெறும் (நெதர்லாந்தைத் தவிர்ந்த) இணை அந்தஸ்துள்ள - Associate Members அணிகள் மூன்றுக்கு 2022 வரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதி ICC யினால் வழங்கப்படும்.
எனவே போட்டியிடுதலும் வெற்றி பெறப் போராடுவதும் அவசியமாகிறது.

அத்துடன் ஏற்கெனவே இந்த முதற்சுற்றில் விளையாடிய அணிகள் சூப்பர் சிக்ஸுக்கு தகுதிபெறும் நேரம் முதற்சுற்றின் புள்ளிகளும் சேர்க்கப்படும் என்பதால் வெற்றிகள் ஒவ்வொன்றுமே முக்கியமாகின்றது.

இதனால் அயர்லாந்து - மேற்கிந்தியத் தீவுகள் போட்டியும், ஸ்கொட்லாந்து - சிம்பாப்வே போட்டியும் மிகத் தீர்க்கமான போட்டியாக மாறியுள்ளன.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...