அதிரடியான ஆட்டம் மூலமாகத் தொடர்ந்து இரண்டாவது சதத்தை இங்கிலாந்தின் விக்கெட் காக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயார்ஸ்டோ பெற்றதுடன் இங்கிலாந்து ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றியை வசப்படுத்தியது.
இதன் மூலம் 3-2 என்று தொடர் வெற்றியையும் பெற்றுக்கொண்டது.
கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து அணியைத் தன் அற்புதமான பந்துவீச்சில் 223 ஓட்டங்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து.
கடந்த போட்டியில் தனித்து நின்று சதமடித்து அபாரமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த ரொஸ் டெய்லர் விளையாடாதது நியூசிலாந்துக்குப் பேரிழப்பாக அமைந்தது.
சண்ட்னர் மட்டுமே (67) அரைச்சதம் பெற்றார்.
இங்கிலாந்தின் ஆரம்ப இணை பெயார்ஸ்டோ - ஹேல்சின் 155 ஓட்டங்களை அத்திவாரம் போட்டுக்கொண்ட இங்கிலாந்து 7 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றிபெற்றது.
பெயார்ஸ்டோ 58 பந்துகளில் சதம் பெற்றார். அவரது சக ஆரம்பத் துடுப்பாளர் ஹேல்ஸ் தன் அரைச்சதம் பெற எடுத்துக்கொண்டதோ 67 பந்துகள்.
6 ஆறு ஓட்டங்கள், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 60 பந்துகளில் 109 ஓட்டங்கள் பெற்ற பெயார்ஸ்டோ போட்டியின் சிறப்பாட்டக்காரர்.
தொடர் முழுதும் சகலதுறை வீரராகப் பிரகாசித்த க்றிஸ் வோக்ஸ் தொடர் நாயகன்.
அடுத்தாண்டு சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கிண்ணத்தைக் குறிவைத்து பலம் வாய்ந்த ஒருநாள் அணியைக் கட்டியெழுப்பி வரும் இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றியும் ஒரு உற்சாகத்தை வழங்கியிருக்கிறது.
0 கருத்துகள்