தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 31 அக்டோபர், 2018

இறுதி ஒருநாள் போட்டியில் தோனி இல்லை ??

இந்தியாவுக்கு எதிராக தடுமாறும் என்று கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி.  இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகிறது
கடைசியாக நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

 எனினும் 2-1 என்ற கணக்கில்  இந்திய  அணி  முன்னிலை பெற்றிருந்த போதும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு தொடர் முழுவதும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இறுதி மற்றும் 5வது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் MS தோனி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் நான்காவது ஒரு நாள் போட்டியில் தோனி துடுப்பாடிய போது மேற்கிந்தியத் தீவுகளின் களத்தடுப்பாளர் ஒருவர் வீசிய பந்தினால் மணிக்கட்டு உபாதை ஏற்பட்டது.  இதன் காரணமாக, தோனியின் சிகிச்சைக்காக பத்து நிமிடம் ஆட்டம் தடைப்பட்டது.

அதன் பின்னர் அவருக்கு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ஆட்டமிழக்கும் வரை முழுவதுமாக ஆடினார். இந்நிலையில் இன்று வரை அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று தெரிகிறது.

அவர் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் நாளைய 5வது போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

மேலும் நேற்று  விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது கூட அவருக்கு  கையில் காயம் சரியான வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தாண்டி அவரது கையில் கட்டுப்போட்டிருந்தார். இதனால் இந்த காயம் இன்னும் சரியாகவில்லை என்று தென்படுகிறது.   
எனினும் இதுவரை நாளைய அணி பற்றி எந்தவொரு உறுதியான தகவலும் இந்திய முகாமிலிருந்து வரவில்லை.

திங்கள், 29 அக்டோபர், 2018

மூன்றாவது போட்டியையும் வென்றது பாகிஸ்தான் !! T20 தொடரில் 3-0 என அபார வெற்றி.

பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்  அணி 33 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றெடுத்து தமது T 20 முதற்தர ஸ்தானத்தை நிரூபித்துள்ளது.

நேற்று  நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.  இத்தொடரில் மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக முதல் இரு போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் பெற்ற பாபர் அசாம் இப்போட்டியிலும் அதிக பட்சமாக 50 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது பபார் அசாம் கடைசி 5 T 20 இன்னிங்ஸ்களில் பெற்ற 4ஆவது அரைச்சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர சிப்ஷாடா பர்ஹான் 39 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

முதலிரு போட்டிகளிலும் தோற்றிருந்த அவுஸ்திரேலியா இந்தப் போட்டியில் துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக தலைவர் ஏரோன் பின்ஞ்சுடன் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி களமிறங்கினார். எதிர்பார்த்த மாற்றத்திற்கு ஏற்றாற்போல் கேரி, முதல் இரு போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி ஆட்ட நாயகன் விருது பெற்ற பாகிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் இமாத் வசீம் வீசிய முதலாவது ஓவரிலே இரண்டு சிக்சர்கள் மற்றும் இரண்டு பௌண்டரிகளை விளாசி 20 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார். 

எனினும், கேரியின் ஆட்டம் அதனை தாண்டி நீடிக்கவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் பின்ஞ் ஒரு ஓட்டத்துடனும் கேரி 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணியினால் வெற்றியிலக்கை அடைவது சாத்தியமற்று போனது.


இறுதியில் அவ்வணி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 33 ஓட்டங்களால் தோல்வியுற்று 3-0 என T 20 தொடரை இழந்தது. சிறப்பாக பந்து வீசிய ஷடாப் கான் மூன்று விக்கெட்டுகளையும் ஹஸன் அலி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷடாப் கான் தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு தொடரின் நாயகனாக பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பபார் அசாம் தெரிவு செய்யப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு அடுத்து நியூசீலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T 20 தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகிறது.

சனி, 27 அக்டோபர், 2018

இலங்கை அணிக்கு பேரிழப்பு !! குசல் ஜனித் பெரேரா, அகில தனஞ்செய இன்றைய போட்டியில் இல்லை !!

இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள T20 போட்டியிலிருந்து இலங்கை அணியின் வீரர்களான குசல் ஜனித் பெரேரா, அகில தனஞ்செய ஆகியோர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான அகில தனஞ்செய இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்று முடிந்த ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் தொடை உபாதைக்கு ஆளாகியிருந்த காரணத்தினாலேயே இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதேநேரம், இங்கிலாந்து அணியுடனான T20 போட்டிக்கு  குழாமில் பெயரிடப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவும் முன்பு ஏற்பட்ட தொடை உபாதையினால் போதிய உடற்தகுதியை நிரூபிக்கத் தவறியதாலேயே இன்று விளையாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அகில தனஞ்செய சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, இன்றைய போட்டியில் அகில இல்லாதது இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாகும். 

அத்துடன் இலங்கை அணிக்காக இந்த ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முன்னணியில் திகழும் குசல் ஜனித் பெரேரா இதே தொடை உபாதை காரணமாக இங்கிலாந்து அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஏற்கனவே விளையாடாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் இரண்டு வீரர்களின் இடத்தினையும் இன்றைய  T20 போட்டியில் பிரதியீடு செய்ய இடதுகை சுழல் வீரரான அமில அபொன்சோ மற்றும் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம ஆகியோர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு திசர பெரேரா தலைமை தாங்குகிறார்.

மீண்டும் வென்ற பாகிஸ்தான், தொடரையும் கைப்பற்றியது !

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியை வென்றதன் மூலம் பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. நாளை மூன்றாவது போட்டி எஞ்சியுள்ள நிலையில்
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்று  மூன்று போட்டிகள் கொண்ட T 20 தொடரை 2-0 கைப்பற்றியது. தனது தொடர்ச்சியான பத்தாவது T 20 தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. தமது 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கடந்த முதலாவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரர் ஷோயிப் மலிக் அணியில் நேற்று மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.


பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் முதலாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற பாபர் அசாம் இப்போட்டியிலும் அதிக பட்சமாக 45 ஓட்டங்களையும் மொஹமட் ஹஃபீஸ் 40 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தனர். பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பாக கோல்டர் நைல் மூன்று விக்கெட்டுகளையும் பில்லி ஸ்டேன்லேக் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

148 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எனினும் இறுதி ஓவர் வரை அவுஸ்திரேலியாவுக்கு வெல்லும் வாய்ப்புக்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியை போன்றே அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும் அணியின் வெற்றிக்காக போராடிய கிளென் மக்ஸ்வல் மற்றும் கோல்டர் நைல் ஜோடி கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இருவரும் தமது விக்கெட்டுக்களை பறிகொடுத்ததன் மூலம் பாகிஸ்தான் அணியின் வெற்றி உறுதியானது.

மக்ஸ்வல் 37 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன் கோல்டர் நைல் 27 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் சதாப் கான் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்ததோடு இமாத் வசீம் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இமாட் வசீம் 4 ஓவர்களில் வெறுமனே 8 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து அவுஸ்திரேலிய அணி ஓட்டங்களைப்  பெறுவதை சிரமத்துக்குள்ளாக்கினார்,

இத்தொடர் வெற்றியானது சப்ராஸ் அஹமட் தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட 10 ஆவது சர்வதேச T20 தொடர் வெற்றியாகும்.


இப்போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 8 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றிய இமாத் வசீம் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இவர் முதலாவது போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (28) நடைபெறவுள்ளது.

வியாழன், 25 அக்டோபர், 2018

விராட் கோலி - ஒரே போட்டி ஏழு சாதனைகள்


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நேற்றைய 2வது போட்டியில்
இந்திய அணித்தலைவர்  விராட் கோலி 129 பந்துகளில் 153 ஓட்டங்களை அடித்து நொறுக்கினார்.

இந்தப் போட்டியில் அவர் 81 ஓட்டங்களை அடைந்தததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்தப் போட்டியில் பல சாதனைகளை     
படைத்துள்ளார்.அந்த சாதனைகள் விவரம் :-

1.இந்தியாவில் மிகவேகமாக 4000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர்
2. சர்வதேச ரீதியில் மிகவேகமாக 10,000 ஓட்டங்களை கடந்த வீரர்
3.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக சதங்களைப் பெற்ற வீரர்
4.ஒரே ஆண்டில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களை கடந்த வீரர்.
  இந்த வருடத்தில் 11 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.
5.பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்களில் அதிக சராசரி வைத்திருப்பவர்.
6.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அதிக ஓட்டங்கள் பெற்ற இந்திய வீரர்
7.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிக சதங்களைப் பெற்றவர்.
  

அபூர்வ TIE ! கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் !!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான இரண்டாவது ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் (Tie) முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று 10000 ஓட்டங்களை பூர்த்தி செய்த இந்திய அணித்தலைவர் விராட் கோலியின் ஆட்டமிழக்காத அதிரடி 157 ஓட்டங்களின் உதவியுடன் இந்திய அணி 321 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷாய் ஹோப்பின் இறுதிப் பந்து பௌண்டரியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்று போட்டியை சமப்படுத்தியது.

இது இந்திய அணியின் ஒருநாள் வரலாற்றில் 9வது சமநிலை முடிவாகும். மேற்கிந்தியத் தீவுகளின் 10வது சமநிலை & சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 37வதாகும்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இரண்டு விக்கெட் இழப்புக்களின் பின்னர் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் விராட் கோலி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்காக 139 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் ராயுடு 73 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 10,000 ஓட்டங்களை கடந்தார். வெறும் 205 இன்னிங்ஸ்களில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். டெண்டுல்கர்  259 இன்னிங்ஸ்களில் 10,000 ஓட்டங்களை கடந்திருந்தார்.

பின்னர் தன்னுடைய 37வது சதத்தைப் பெற்ற விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அதிரடியாக துடுப்பாடிய இவர் 129 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 157 ஓட்டங்களை குவித்தார்.
 இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு கடுமையான சவாலைக் கொடுத்திருந்தது. முதலாவது போட்டியில் சதமடித்த ஷிம்ரன் ஹெட்மையர் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவிக்க, ஷாய் ஹோப் அணி நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார்.

இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 143 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை பதம் பார்த்த ஹெட்மையர் 64 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஒரு ஓவருக்கு 14 ஓட்டங்கள் என்ற நிலையில், அதிலும் இறுதிப் பந்தில் 5 ஓட்டங்கள் என்ற நிலையில், ஷாய் ஹோப் பௌண்டரி விளாசி போட்டியை சமப்படுத்தினார். இறுதிவரை வெற்றிக்காக போராடிய ஷாய் ஹோப் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்து 123 ஓட்டங்களை பெற்றார். \



எனினும் இவரது தடுமாற்றமும் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லவேண்டிய போட்டியை சமநிலையாக்கியது என்ற விமர்சனங்களும் எழுகின்றன.


இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக விராட் கோலி  தெரிவானார்.

இதன் அடிப்படையில், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்குமான மூன்றாவது ஒருநாள் போட்டி 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

புதன், 24 அக்டோபர், 2018

ஆறுதல் வெற்றி, அபார வெற்றி !! சாதனை வெற்றி பெற்ற இலங்கை அணி !!

இலங்கை - இங்கிலாந்து இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணிக்கு 219 ஓட்டங்களால் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
மழை குறுக்கிட்ட போட்டியில் DLS மழை விதி அடிப்படையில் 219 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியானது, இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணியால் பெறப்பட்ட மிகப்பெரிய ஒருநாள் போட்டி வெற்றியாக மாறியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியமையே மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது. எனினும் அந்த சாதனையை முறியடித்து, இலங்கை அணி டக்வர்த் லூவிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 219 ஓட்டங்களால் வெற்றியை சுவைத்துள்ளது.
இலங்கை அணி பெற்ற 366 ஓட்ட எண்ணிக்கையானது இந்த மைதானத்தில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். கடந்த ஆண்டு இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 375 ஓட்டங்களை குவித்திருந்தது.
அத்துடன் இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற அதிகூடிய ஓட்ட என்னிக்கையாகவும், இந்த வருடத்தில் இலங்கை பெற்ற கூடுதல் ஓட்ட எண்ணிக்கையாகவும் அமைந்துள்ளது.
நேற்றைய போட்டியில் இங்கிலாந்தின் அணித்தலைவர் ஒயின் மோர்கன் ஓய்வெடுத்துக்கொண்ட அதேநேரம், ஜோஸ் பட்லர் அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார்..
முதல் தடவையாக கரான் சகோதரர்கள் சேர்ந்து விளையாடினர். அத்துடன் மார்க் வூட், லயம் ப்ளங்கெட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கை அணியின் லசித் மாலிங்கவுக்கு ஒய்வு கொடுத்து அவருக்குப் பதிலாக துஷ்மந்த சமீர விளையாடியிருந்தார்.
அமில அப்போன்சொவுக்குப் பதிலாக மீண்டும் சந்தக்கான் அணியில் சேர்க்கப்பட்டார்.

இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 366 ஓட்டங்களை குவித்தது. 
சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களுடனும், துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்ட டடிக்வெல்ல 95 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 
சதீர சமரவிக்கிரம தனது கன்னி அரைச்சதத்தைப் பெற்றார்.
நிரோஷன் டிக்வெல்ல மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 137 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு நேர்த்தியான  ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இந்த ஆரம்பமானது கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட சிறந்த ஆரம்பமாகவும், முதல் சத இணைப்பாட்டமாகவும் பதிவாகியது.

பின்னர் மத்திய வரிசையை பலப்படுத்திய குசல் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சந்திமால் அணிக்கு தேவையான இணைப்பாட்டமாக 102 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
நிதானமாக ஆடிய தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றார்.

மிக சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து  அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது இங்கிலாந்து அணி நான்கு ஓட்டங்களை பெற்றிருந்த போது தங்களது மூன்று விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்தது. ஜேசன் ரோய் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பட்லர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து, பின்னர் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்தது. 
லசித் மாலிங்கவுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட துஷ்மந்த சமீர 3 முக்கியமான விக்கெட்டுக்களை சரித்தார்.

பின்னர் ஸ்டொக்ஸ் மற்றும் மொயீன் அலி நம்பகமான இணைப்பாட்டத்தைப் புரிந்தாலும் அகில தனஞ்செயவின் மாயச் சுழலில்  இங்கிலாந்து தொடர்ந்து விக்கெட்டுக்களை இழந்தது.
367 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி, மழை கொட்டி போட்டி நிறுத்தப்பட்ட நேரம், 26.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை எடுத்திருந்தது.
ஸ்டோக்ஸ் - 67
அகில தனஞ்செய 4/19
துஷ்மந்த சமீர - 3/20

எவ்வாறாயினும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றி தொடர் வெற்றியைப் பெற்றது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான  T20 போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் : நிரோஷன் டிக்வெல்ல
தொடர் நாயகன் : ஒயின் மோர்கன்


வெள்ளி, 19 அக்டோபர், 2018

அப்பாஸ் அசத்தல் !! பாகிஸ்தான் பிரம்மாண்டமான வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது !!

மொஹமட் அப்பாஸின் அற்புதமான வேகப்பந்து வீச்சினால் பாகிஸ்தான் அணிக்கு அபுதாபியில்நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  373 ஓட்டங்களால் மிகப்பெரிய வெற்றி கிட்டியது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் சார்பாக ஃபகர் சமான் மற்றும் மிர் ஹம்ஸா ஆகியோர் அறிமுக வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.  

பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியொன்றில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக அமைவதுடன், அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற மிகப்பெரிய தோல்வியாகவும் பதிவாகிறது.
முதலாவது இன்னிங்க்சில் 57/5 என்ற மோசமான நிலையிலிருந்து 6 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஃபகர் சமான் மற்றும் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட் ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டம் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இருவரும் இணைந்து 147 ஓட்டங்கள் பெற்றிருந்த போது ஃபகர் சமான் தனது அறிமுக போட்டியில் கன்னிச்சதம் பெறும் வாய்ப்பை வெறும் 6 ஓட்டங்களால் தவறவிட்டு, 94 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அணித்தலைவர் சப்ராஸ் அஹமட்டும் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதம் பெறும் வாய்ப்பை இழந்தார்.  இறுதியாக பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் நேதன் லயொன் 4 விக்கெட்டுகளையும் மார்னஸ் லபுஷேன் 3 விக்கெட்டுகளையும்  கைப்பற்றியிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 145 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் மிகச் சிறப்பாக பந்து வீசிய மொஹமட் அப்பாஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் பிலால் ஆசிப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

137 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி முதலாம் இன்னிங்க்ஸை விட நிதானமாகவும் பொறுப்பாகவும் துடுப்பாடி 9 விக்கெட்டுகளை இழந்து 400 ஓட்டங்கள் பெற்று அவுஸ்திரேலிய அணிக்கு 538 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்து தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக இரண்டாம் இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாபர் அசாம் டெஸ்ட் போட்டிகளில் தனது கன்னிச்சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டு 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  மேலும் முதலாம் இனிங்ஸில் சிறப்பாக ஆடிய அதே இருவரான சப்ராஸ் அஹமட் 81 ஓட்டங்கள், ஃபகர் சமான் 66 ஓட்டங்கள் மற்றும் அஸார் அலி 64 ஓட்டங்கள் என பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்காற்றியிருந்தனர். லயொன் 4 விக்கெட்டுகளையும் லபுஷேன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.  

538 ஓட்டங்கள் என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி  இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது போல் மோசமான துடுப்பாட்டத்தின் வெளிப்பாடாக 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.  

இப்போட்டியில் காயமடைந்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா இரண்டாம் இன்னிங்ஸிற்காக கடைசி வரை துடுப்பெடுத்தாட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தோல்வியானது அவர்களால் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட நான்காவது மோசமான தோல்வியாகும்.

சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அப்பாஸ் 5 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் மொஹமட் அப்பாஸ் தெரிவானார்.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 24 திகதி நடைபெறவுள்ளது.




திங்கள், 1 அக்டோபர், 2018

முதலிடத்துக்கு முன்னேறிய ரஷீத் கான் ! ஒருநாள் போட்டிகளில் தொடரும் கோலி, பும்ரா & இந்தியாவின் ஆதிக்கம்

ஆசியக் கிண்ணப்போட்டிகள் முடிவடைந்ததையடுத்து சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் புதிய ஒருநாள் தரப்படுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலியும், பந்துவீச்சில் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ராவும் தத்தமது முதலாமிடங்களை தக்க வைத்துள்ள அதே நேரத்தில், இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்து வைத்துள்ள முதலாமிடத்தை நெருங்குவதற்கு மேலும் ஒரு புள்ளியை மேலதிகமாகப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானும் இலங்கையும் புள்ளிகளை இழந்திருக்கும் அதேவேளை, ஆப்கானிஸ்தான் ஐந்து புள்ளிகளை பெற்று தனக்கு மேலேயுள்ள மேற்கிந்தியத் தீவுகளை நெருங்கியுள்ளது.

இதேவேளை சகலதுறை வீரர்க்கான பட்டியலில் துரிதமான முன்னேற்றம் கண்டு முதலாமிடத்தைத் தன் வசப்படுத்தியுள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான். ரஷீத் கான் பந்துவீச்சாளர் பட்டியலிலும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இந்த ஆசியக் கிண்ணத்தின்போது காட்டிய திறமைகளின் அடிப்படையில்
இந்திய வீரர்கள் பலர் தரப்படுத்தலில் முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்களில் ரோஹித் ஷர்மா, ஷீக்கார் தவான் ஆகியோரும், பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் பங்களாதேஷின் முஸ்டபிஸ்சுர் ரஹ்மானும் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

இப்போது ஆரம்பித்துள்ள தென் ஆபிரிக்க - சிம்பாப்வே ஒருநாள் தொடரும், அடுத்து நடைபெறவுள்ள இலங்கை - இங்கிலாந்து தொடரும் அணிகளின் தரப்படுத்தலில் இன்னும் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய வாய்ப்புள்ளது.

முழுமையான தரப்படுத்தல்கள் :




Related Posts Plugin for WordPress, Blogger...