Latest Updates

6/recent/ticker-posts

பதிலடி கொடுத்த பாகிஸ்தான் ! முத்தரப்பு T20 தொடரின் இறுதிப்போட்டிக்குத் தெரிவு !!

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் இன்று  நடைபெற்ற T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சில் சுருண்டு தோற்றிருந்த பாகிஸ்தான்
இன்றைய வெற்றி மூலம் முத்தரப்பு T20 தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.



சிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு T20 தொடர் சிம்பாப்வேயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணி, 55 பந்துகள் மீதமிருக்க ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. T20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்த தோல்வியானது அதிகளவான தாக்கத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்து, T20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள அணி என்பதை நிரூபிக்கும் கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியிருந்தது. சிம்பாப்வே அணிக்கெதிரான T20 போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலிக்குப் பதிலாக 19 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி அணிக்குள் உள்வாங்கப்பட, அவுஸ்திரேலிய அணி மாற்றங்கள் இன்றி களமிறங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியது.

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்
ஃபக்கர் சமான் 42 பந்துகளுக்கு முகங்கொடுத்து 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.  பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அன்றூ டை 4 ஓவர்கள் பந்து வீசி, 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு ஏரோன் பின்ச்சின் ஆட்டமிழப்பு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் 172 ஓட்டங்களை விளாசி உலக சாதனை படைத்திருந்த பின்ச்சை, பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அஃப்ரிடி போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். ஏரோன் பின்ச் 11 பந்துகளை எதிர்கொண்டு 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்திருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் மத்திய வரிசை வீரர்களும் பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

நிதானமாக துடுப்பெடுத்தாடிய டார்சி ஷோர்ட் அதிக பந்துகளை எதிர்கொண்ட போதிலும் போதுமான வேகத்தில் ஓட்டங்களை பெற்றுக்கொள்ள தவறினார். இவர் 34 பந்துகளுக்கு 28 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் தொடர்ச்சியாக ஆடுகளம் விட்டு நடையைக் கட்டினர்.

எனினும், அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு சற்று வலிமை கொடுத்த அலெக்ஸ் கெரி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும், அவுஸ்திரேலிய அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் தனது வேகத்தால் மிரட்டிய இளம் புயல் ஷஹீன் அப்ரிடி நான்கு ஓவர்கள் பந்து வீசி 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதனால், இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் T20 தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பிருந்த போதும், அந்த வாய்ப்பினை அவுஸ்திரேலிய அணி தவறவிட்டது. இன்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும் முத்தரப்பு தொடருக்கான இறுதிப் போட்டியின் வாய்ப்பை 8 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி தக்கவைத்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணி, சிம்பாப்வே அணியுடன் மோதவுள்ள அடுத்த T20 போட்டியில் தோல்வியடைந்து, இந்திய அணி இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டு T20 போட்டிகளிலும் வெற்றி பெறுமாயின் அவுஸ்திரேலிய அணி ஐசிசி T20 தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்படும். இதன்மூலம்  இந்திய அணி ஐசிசி T20 தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.

எனினும் இன்றைய வெற்றியுடன் பாகிஸ்தான் குறைந்தது எதிர்வரும் ஒக்டொபர் மாதம் வரை T20 தரவரிசையில் முதலிடத்திலிருந்து கீழே இறங்க வாய்ப்பில்லாத உறுதியான நிலையைப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான அடுத்த T20 போட்டி நாளை (06) ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.


இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஃபக்கார் சமானுக்கு வழங்கப்பட்டது. 

அசீம் ஷெரிப்

கருத்துரையிடுக

0 கருத்துகள்