கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் எப்போதும் நிகழலாம் என்பது நேற்று மீண்டும் நிரூபணமானது. அதிலும் T20 போட்டிகள் சில பந்துகளிலேயே கதை மாறிப்போகும் என்பது இந்த சில வருடங்களில் பல தடவை நடந்திருக்கிறது.
இலங்கை அணி நாட்டிய சாதனை சில மணி நேரங்களிலேயே பங்களாதேஷ் அதைத் தாண்டி இன்னொரு சாதனையை நிலைநாட்டியது.
கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற, சுதந்திரக் கிண்ணத்தின் மூன்றாவது போட்டி சிக்சர்கள் மழையாய்ப் பொழிந்து ஓட்டங்கள் மலையாய்க் குவிந்த போட்டியானது.
அதிரடி ஆரம்பத்தோடு இலங்கை அணி இந்த மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
214 என்பது இலங்கை அணியின் 4வது கூடிய T20 சர்வதேச ஓட்ட எண்ணிக்கை.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக எந்தவொரு அணியும் பெற்ற இரண்டாவது கூடிய ஓட்டங்கள் இதுவாகும்.
இரண்டு குசல்களும் சேர்ந்து குவித்தார்கள் ஓட்டங்களை.
குசல் ஜனித் பெரெரா 74 - 48 பந்துகளில், இரண்டு சிக்சர்களுடன்
(தொடர்ச்சியான இரண்டாவது அரைச்சதம்)
ஐந்து சிக்சர்களைப் பறக்கவிட்டு அதிரடி ஆட்டம் ஆடிய குசல் மெண்டிஸ், வெறும் 30 பந்துகளில் 57.
அநேக ரசிகர்களால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று கருதப்படும் உபுல் தரங்கவின் 15 பந்துகளில் 32 ஓட்டங்கள் கவனிக்கத் தக்கது. இலங்கை அணி சரியாகப் பயன்படுத்தாத ஒரு சிறப்பான துடுப்பாட்ட வீரர் தரங்க.
இந்திய அணிக்கு எதிராகவும், அதற்கு முன்னதாக பங்களாதேஷிலும் தடுமாறியிருந்த பங்களாதேஷ் துடுப்பாட்டம் இந்த ஓட்ட எண்ணிக்கையைத் துரத்தி வெல்லும் என்று யார் நினைத்திருப்பர்?
ஆரம்ப ஜோடியை மாற்றி அதிரடி ஆட்டத்தைத் தந்து இலங்கையின் வியூகங்களை சிதறடித்தது. தமீம் இக்பால் மற்றும் துணிச்சலான துடுப்பாட்டப் பிரயோகங்களைப் பயன்படுத்திய லிட்டன் தாஸ் (19 பந்துகளில் ஐந்து சிக்ஸர்களுடன் 43) சேர்ந்து 6 ஓவர்களுக்குள் 74 ஓட்டங்களைப் பெற்ற பின் வந்த முஷ்பிகுர் ரகீம் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டார்.
அனுபவமும் ஆற்றலும் கொண்ட ரஹீமின் கட்டுப்பாட்டில் போட்டி வந்த பின் இலங்கைப் பந்துவீச்சாளர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை. போதாக்குறைக்கு இரவு நேரப் பனியும் பந்தை சரியாகப் பற்றிக்கொள்ள முடியாமல் செய்தது.
யோர்க்கர் பந்துகளை முயற்சிக்க அவை full toss ஆகின. பவுன்சர் பந்துகளை ரஹீமும் பின்னர் வந்த தலைவர் மஹ்முதுல்லாவும் வெளுத்தனர்.
நான்கு ஆறு ஓட்டங்கள், ஐந்து நான்கு ஓட்டங்களுடன் 35 பந்துகளில் 72 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற ரஹீம் இறுதி ஓவரில் போட்டியை வென்றுகொடுத்தார்.
இலக்கு சிரமமாகும் போதெல்லாம் இலங்கை அணியின் பந்துவீச்சும் களத்தடுப்பும் இலகுவான பரிசுகளை வழங்கிக்கொண்டே இருந்தது.
இலங்கையில் வெற்றிகொண்ட பெரிய இலக்கு மட்டுமன்றி, பங்களாதேஷ் துரத்திப் பெற்ற பெரிய இலக்கும் இதுவே.
தமது தொடர்ச்சியான T20 தோல்விகளுக்கும் முடிவு கட்டி, முஷ்பிகுர் ரஹீமின் பாம்பு நடனப் பழிவாங்கலோடு இலங்கை ரசிகர்களைக் கோபம் + சோகத்தோடு போட்டி முடிந்தது.
மூன்று அணிகளும் இப்போது தலா ஒவ்வொரு வெற்றிகள்.
நாளை அடுத்த சுற்று ஆரம்பம்.
இலங்கை மீண்டும் இந்தியாவை சந்திப்பதோடு விறுவிறுப்பான கட்டம் தொடங்கும்.
0 கருத்துகள்