மீண்டும் வெடித்த Sandpapergate: கம்மின்ஸின் மறுப்பும் பான்கிரொப்ட் (Cameron Bancroft) எட்டு வருட வலியும்!
ஒரு சிறிய மணற்காகிதத் துண்டு (sandpaper)… அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் பெருமையை உலகத்தின் முன்னால் தலைகுனிய வைத்தது.
எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தடைகள் முடிந்துவிட்டன. அணித் தலைமைகள் மாறிவிட்டன. ஆனால், அந்தச் சம்பவம் ஏற்படுத்திய காயங்கள் இன்னமும் ஆறவில்லை.
இப்போது கமரன் பான்கிரொப்ட் வெளியிட்டுள்ள வெளிப்படையான அறிக்கை, அந்தப் பழைய காயத்தை மீண்டும் திறந்திருக்கிறது. sandpaper பயன்படுத்தப்பட்டது ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், தனக்கு மட்டுமே தெரிந்த விடயமல்ல; அணியினர் அனைவருக்கும் தெரியும் என்பது அவரது குற்றச்சாட்டு.
2018இல் நடந்தது என்ன?
தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டின்போது, பந்தின் மேற்பரப்பை sandpaper கொண்டு சேதப்படுத்திய பான்கிரொப்ட் தொலைக்காட்சிக் கமராக்களில் சிக்கினார். பந்தின் நிலையைச் செயற்கையாக மாற்றி, பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான நகர்வைப் பெற முயன்ற அந்தச் சம்பவமே Sandpapergate என அழைக்கப்பட்டது.
அதன் பின்னர் Cricket Australia விதித்த தண்டனைகளில், ஸ்மித் மற்றும் வோர்னருக்கு தலா 12 மாதங்களும், பான்கிரொப்டுக்கு ஒன்பது மாதங்களும் தடைவிதிக்கப்பட்டது. வெற்றிகளால் உலகை அச்சுறுத்திய அணிக்கு, நேர்மை தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அத்தியாயம் முடிந்துவிட்டதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நினைத்திருக்கலாம். ஆனால், அண்மையில் உஸ்மான் கவாஜாவின் சுயசரிதையில் வெளியான தகவல்கள் சர்ச்சையை மீண்டும் கிளப்பின.
அதற்குப் பதிலளித்த பட் கம்மின்ஸ், sandpaper பயன்படுத்தப்படவிருந்தது தனக்குத் தெரியாது என்று உறுதியாக மறுத்தார். அந்தத் திட்டத்தைத் தானும் மற்றவர்களும் உருவாக்கியதாகக் கூறப்படுவதையும் கடுமையாக நிராகரித்தார்.
மௌனத்தை உடைத்த மறுப்பு
பான்கிரொப்டைப் பொறுத்தவரை, கம்மின்ஸின் அந்தச் செய்தியாளர் சந்திப்பே இனியும் அமைதியாக இருக்க முடியாது என்ற முடிவுக்குத் தள்ளியிருக்கிறது.
அந்த மறுப்பு தனக்குக் கோபத்தையும், துரோகம் செய்யப்பட்ட உணர்வையும், தனிமையையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். பந்தின் நகர்வு மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் குறித்து கம்மின்ஸ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களுடன் உரையாடியதாகவும், தனது செயற்பாடு பலனளிக்கிறதா என்பது தொடர்பில் அவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றதாகவும் பான்கிரொப்ட் கூறுகிறார்.
இவை பான்கிரொப்ட் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள். கம்மின்ஸின் மறுப்பு அதற்கு நேர்மாறாக இருக்கிறது; புதிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளாக இன்னும் நிறுவப்படவில்லை.
ஆனால், அவரது பதிவில் மிக முக்கியமானது மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு மட்டும் அல்ல.
2018 விசாரணையின்போது தானும் முழுமையான உண்மையைக் கூறவில்லை என்று பான்கிரொப்ட் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
sandpaper பயன்பாடு எப்போது ஆரம்பித்தது, எவ்வளவு காலம் தொடர்ந்தது, மற்றவர்களின் தொடர்பும் அறிதலும் என்ன என்பன போன்ற தகவல்களை மறைத்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், அன்றைய விசாரணை எந்தளவுக்கு முழுமையான தகவல்களின் அடிப்படையில் நடந்தது என்ற கேள்வி மீண்டும் எழுகிறது.
கம்மின்ஸ் இதைக் கையாண்ட விதத்தை விமர்சிக்க இடமிருக்கிறது. அவரது கடுமையான மறுப்பு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவில்லை; பான்கிரொப்டின் விரிவான பதிலுக்கு வழிவகுத்திருக்கிறது. அதேவேளை, தனது நற்பெயருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் உரிமையும் கம்மின்ஸுக்கு இருக்கிறது.
இங்கே பிரச்சினை, அவர் பேசியதா என்பதைக் கடந்து செல்கிறது. ஒரே அணியில் இருந்தவர்கள், ஒரே சம்பவத்தைப் பற்றி ஏன் இவ்வளவு முரண்பட்ட விளக்கங்களை அளிக்கிறார்கள்?
இப்போது Cricket Australia எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
நவம்பர் 18 அன்று, 2018 தென்னாபிரிக்கச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற வீரர்களும் பணியாளர்களும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான சுயாதீன கலந்துரையாடல் ஏற்பாட்டை Cricket Australia அறிவித்துள்ளது. இது புதிய தண்டனைகளை வழங்குவதற்கான மறுவிசாரணை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிர்வாகத்திடம் எந்த நடவடிக்கையும் இல்லை என்று இப்போது கூற முடியாது. ஆனால், இந்த ஏற்பாடு முரண்பாடுகளைத் தெளிவுபடுத்துமா? பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்குமா? அதுவே முக்கியமான சோதனை.
பான்கிரொப்டின் வார்த்தைகளில் வெளிப்படுவது கோபம் மட்டும் அல்ல; பல ஆண்டுகளாகச் சுமந்ததாக அவர் கூறும் மனப்பாரமும் கூட.
ஒரு அணியாக வெற்றியைக் கொண்டாடியவர்கள், தோல்வியையும் அவமானத்தையும் ஒரு அணியாகப் பகிர்ந்துகொண்டார்களா என்ற கேள்வி இப்போது அவர்களைத் துரத்துகிறது.
2018இல் கமரா பதிவு செய்தது பந்தின் மீது தேய்க்கப்பட்ட sandpaper ஐ.
2026இல் வெளிச்சத்துக்கு வருவது, அந்த அணிக்குள் தேய்ந்துபோன நம்பிக்கை.

0 கருத்துகள்