சிராஜ், ஜடேஜா நீக்கம் ஏன்? இந்திய அணித் தேர்வை நியாயப்படுத்தும் கோட்டக்! 🏏
புதிய பந்தில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாகச் செயற்பட்டபோதும், அந்த ஆரம்ப ஆதிக்கத்தை இந்தியாவால் தொடர முடியவில்லை. இதனால், முதல் நாள் ஆட்டத்தின் பின்னர் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் சிதான்ஷு கோட்டக்கிடம் எழுப்பப்பட்ட கேள்விகளில் பெரும்பாலானவை அணித் தேர்வை மையப்படுத்தியிருந்தன.
“இந்தச் சூழலுக்கு இதுவே சிறந்த பதினொருவர் அணி என்று அனைவரும் கருதினோம். தனிப்பட்ட முறையில் இதைத் தவறான முடிவாக நான் பார்க்கவில்லை” என கோட்டக் தெரிவித்தார்.
ஈரப்பதமும் புற்களும் கொண்ட ஆடுகளத்தில் வேகம், ஸ்விங், சீம் மற்றும் உயரத்தால் கிடைக்கும் பவுன்ஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார். முதல் நாளை மட்டுமன்றி, முழுப் போட்டியையும் கணக்கில் எடுத்தே முடிவெடுத்ததாகவும் கூறினார்.
ஜடேஜாவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றதற்கு, நியூசிலாந்தின் முன்வரிசையிலுள்ள நான்கு இடதுகைத் துடுப்பாட்ட வீரர்களும், இரண்டாவது இன்னிங்ஸில் அவரது ஓஃப் ஸ்பின் பயன்படக்கூடும் என்பதும் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.
ஆனால், நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுற்றில் 11 போட்டிகளில் 43 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்தியவரான சிராஜை வெளியே வைத்தது ஏன்? அதேபோல், 2021 முதல் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய வீரர்களில் ரிஷப் பந்துக்கு அடுத்த சிறந்த துடுப்பாட்டச் சராசரியைக் கொண்ட ஜடேஜாவை, துடுப்பாட்ட ஆழம் தேவைப்படும் நிலையில் நீக்கியது ஏன் என்ற கேள்வியும் தொடர்கிறது.
அணித் தேர்வை நிர்வாகம் நியாயப்படுத்தியிருக்கிறது. அந்தத் தேர்வுக்கான பதிலை இனிவரும் நாட்களில் களத்தில் காட்ட வேண்டிய பொறுப்பு இந்திய வீரர்களிடம் உள்ளது!

0 கருத்துகள்