தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 3 நவம்பர், 2018

மீண்டும் பாகிஸ்தான் வெற்றி !! 11வது தொடர் வசமானது !

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இது பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 11ஆவது சர்வதேச T 20 தொடராகும்.  அத்துடன் சப்ராஸ் அஹமட்டின் தலைமையில் பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 32 T20 போட்டிகளில் 28வது வெற்றியைப் பெற்றுள்ளது.

நேற்று டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஃபக்கார் சமான் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார். நியூசிலாந்து அணி மாற்றங்கள் எதுவும் இன்றி விளையாடியது.


இமாத் வசீம் வீசிய முதலாவது ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸருடன் தமது இன்னிங்ஸை ஆரம்பித்தது நியூசிலாந்து அணி. ஆரம்பத்தில் கொலின் மன்ரோவினால்  அதிரடியாக பெறப்பட்ட 44 ஓட்டங்களும் மத்திய வரிசையில் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் நிதானமாக பெற்றுக் கொண்ட 37 ஓட்டங்கள் மற்றும் கடைசியில் கொரே அன்டர்சன் அதிரடியாக ஆட்டமிழக்காமல் பெற்ற 44 ஓட்டங்கள் என தமது பங்களிப்பை வழங்கியதன் மூலம் இறுதியில் நியூசிலாந்து அணி  7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் ஷஹீன் அப்ரிடி சிறப்பாகப் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. பக்கார் சமான் மற்றும் பாபர் அசாம் ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களை அதிரடியாக பெற்றிருந்த போது பக்கார் சமான் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாபர் அசாம் மற்றும் ஆசிப் அலி ஆகிய இருவரும் இணைந்து 56 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் களமிறங்கிய மொஹமட் ஹஃபீஸ் ஆட்டமிழக்காமல் அதிரடியாக 34 ஓட்டங்களைப் பெற பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கு வழங்கப்பட்டது. இத்தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...