இலங்கை - பங்களாதேஷ் 2வது டெஸ்ட்: நிஸ்ஸங்கவின் அபார சதம்; இலங்கை வலுவான நிலையில்!
கொழும்பு, ஜூன் 26, 2025 – பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், பத்தும் நிஸ்ஸங்கவின் தொடர்ச்சியான இரண்டாவது சதம் மற்றும் தினேஷ் சந்திமாலுடன் அவர் அமைத்த வலுவான கூட்டணி, இலங்கையை 290 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழப்பு என்ற வலுவான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. முன்னதாக, பங்களாதேஷ் தனது முதல் இன்னிங்ஸில் 247 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடக்க வீரரான நிஸ்ஸங்க, கடந்த வாரம் காலியில் நடந்த முதலாவது சமன் செய்யப்பட்ட டெஸ்டில் தனது சிறந்த இன்னிங்ஸான 187 ஓட்டங்களை எடுத்ததைத் தொடர்ந்து, இப்போட்டியில் 238 பந்துகளில் 18 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 146 ஓட்டங்களை எடுத்துள்ளார். இது ஒரு பிழையற்ற ஆட்டமாக அமைந்தது.
நிஸ்ஸங்கவும் தினேஷ் சந்திமாலும் இணைந்து பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து, இரண்டாவது விக்கெட்டுக்காக 194 ஓட்டங்கள் சேர்த்தனர். போதிய ஒளியின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படுவதற்கு சற்று முன்னர், சந்திமால் 153 பந்துகளில் 93 ஓட்டங்களுடன் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். நயீம் ஹசனுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றபோது விக்கெட் காப்பாளர் லிட்டன் தாஸிடம் இலகுவான பிடியைக் கொடுத்தார்.
இது சந்திமால் 90களில் ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பமாகும்.
மறுபுறம், இரவு நேர காவலாளியாக - Night watchman களமிறங்கிய பிரபாத் ஜெயசூரிய 5 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
முன்னதாக, லஹிரு உதார மற்றும் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இலங்கைக்கு 88 ஓட்டங்கள் என்ற துரிதமான தொடக்கத்தை வழங்கினர். ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு இடதுகை சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம், உதாரவை 65 பந்துகளில் 40 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். நேராக வந்த பந்தை அடிக்கத் தவறியதால் பங்களாதேஷ் எடுத்த டிஆர்எஸ் (DRS) வெற்றிகரமாக அமைந்தது.
வேகப்பந்து வீச்சாளர் நஹீத் ரானா 144 கிமீ வேகத்தில் சராசரியாக தொடர்ச்சியாக பந்து வீசியபோதிலும், அவரது குறுகிய நேர ஸ்பெல்கள் பயனற்றதாகவே இருந்தன. நிஸ்ஸங்கா மற்றும் சந்திமாலுக்கு எதிராக பவுன்சர்கள் மூலம் சவால் விட அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. சந்திமால் 30 ஓட்டங்களில் இருந்தபோது எல்பிடபிள்யூ (LBW) முடிவை DRS மூலம் தனக்குச் சாதகமாக மாற்றினார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு, ரானாவின் பந்துவீச்சில்பவுண்டரி அடித்து நிஸ்ஸங்க தனது நான்காவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இது அவரது 18வது டெஸ்ட் போட்டியில் 11வது 50+ ஓட்ட எண்ணிக்கையாகும். சந்திமாலும் கடைசி செஷனில் ரிவர்ஸ் ஸ்வீப்கள் மூலம் துரிதமாக ஓட்டங்களைச் சேர்த்தார். இருவரும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கால்களை சிறப்பாகப் பயன்படுத்தி ஆடியதுடன், வேகப்பந்து வீச்சாளர்களின் தளர்வான பந்துகளை தண்டனைக்குள்ளாக்கினர்.
இதற்கு முன்னர், பங்களாதேஷ் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களுடன் தொடங்கி, மேலும் 27 ஓட்டங்களை மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அறிமுக வீரரான இடதுகை சுழற்பற்பந்து வீச்சாளர் சொனால் தினுஷ, 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கை அணிக்கு சிறந்த பந்துவீச்சு பெறுதிகளைப் பதிவு செய்தனர்.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் பற்றிய விரிவான காணொளி
0 கருத்துகள்