தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 29 அக்டோபர், 2018

மூன்றாவது போட்டியையும் வென்றது பாகிஸ்தான் !! T20 தொடரில் 3-0 என அபார வெற்றி.

பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்  அணி 33 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றெடுத்து தமது T 20 முதற்தர ஸ்தானத்தை நிரூபித்துள்ளது.

நேற்று  நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.  இத்தொடரில் மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக முதல் இரு போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் பெற்ற பாபர் அசாம் இப்போட்டியிலும் அதிக பட்சமாக 50 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது பபார் அசாம் கடைசி 5 T 20 இன்னிங்ஸ்களில் பெற்ற 4ஆவது அரைச்சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர சிப்ஷாடா பர்ஹான் 39 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

முதலிரு போட்டிகளிலும் தோற்றிருந்த அவுஸ்திரேலியா இந்தப் போட்டியில் துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக தலைவர் ஏரோன் பின்ஞ்சுடன் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி களமிறங்கினார். எதிர்பார்த்த மாற்றத்திற்கு ஏற்றாற்போல் கேரி, முதல் இரு போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி ஆட்ட நாயகன் விருது பெற்ற பாகிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் இமாத் வசீம் வீசிய முதலாவது ஓவரிலே இரண்டு சிக்சர்கள் மற்றும் இரண்டு பௌண்டரிகளை விளாசி 20 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொடுத்தார். 

எனினும், கேரியின் ஆட்டம் அதனை தாண்டி நீடிக்கவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் பின்ஞ் ஒரு ஓட்டத்துடனும் கேரி 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணியினால் வெற்றியிலக்கை அடைவது சாத்தியமற்று போனது.


இறுதியில் அவ்வணி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 33 ஓட்டங்களால் தோல்வியுற்று 3-0 என T 20 தொடரை இழந்தது. சிறப்பாக பந்து வீசிய ஷடாப் கான் மூன்று விக்கெட்டுகளையும் ஹஸன் அலி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷடாப் கான் தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு தொடரின் நாயகனாக பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பபார் அசாம் தெரிவு செய்யப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு அடுத்து நியூசீலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T 20 தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...