தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Sunday, September 16, 2018

முஷ்பிகுரின் அற்புத சதம், இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ் ! வீணாய்ப்போனது மாலிங்கவின் மீள்வரவு சாகசம்

ஒரு வருடத்துக்குப் பிறகு அணிக்குள் மீண்டும்  தன்னுடைய மீள் வருகையை முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டாட்டகரமாக ஆரம்பித்த லசித் மாலிங்கவின் 4 விக்கெட்டுக்களையும் தாண்டி ஆரம்பத்தில் பொறுமையாகவும் பின்னர் தனித்து நின்று போராட்டகரமாகவும் ஆடிச் சதமடித்த முஷ்பிகுர் ரஹீம் மிகப் பெரிய வெற்றியொன்றை பங்களாதேஷ் அணிக்கு நேற்று பெற்றுக் கொடுத்தார்.

இந்த 137 ஓட்ட வெற்றியானது பங்களாதேஷ் அணி தமது நாட்டுக்கு வெளியே பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாகும்.
அத்துடன் முஷ்பிகுர் ரஹீம் அடித்த 144  ஓட்டங்கள் அவரது தனிப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் அமைகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 14 ஆவது முறையாக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியை  137 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கும் பங்களாதேஷ் அணி அதிரடியான வெற்றியொன்றுடன் தொடரை ஆரம்பித்துள்ளது.


இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு  நடைபெறும் இம்முறைக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி குழு B இன் முதல் லீக் போட்டியாக அமைந்திருந்தது.

டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ராபே மொர்தஸா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இலங்கை அணியில் 16 மாதங்களின் பின்னர் வேகப்புயலான லசித் மாலிங்க திரும்பியிருந்ததோடு சுழல்பந்துவீச்சாளரான டில்ருவான் பெரேராவுக்கும் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கை ஒரு நாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

மறுமுனையில் பங்களாதேஷ் அணியில் உபாதை ஆபத்துகள் இருந்த நிலையில் தமிம் இக்பால், ஷகீப் அல் ஹஸன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

பங்களாதேஷ் தமது துடுப்பாட்டத்தை லிடன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் ஆகியோருடன் ஆரம்பித்தது. எனினும், போட்டியின் முதல் ஓவரை வீசிய லசித் மாலிங்க முதல் ஓவரின் இறுதி இரண்டு பந்துகளிலும் ஆரம்ப வீரர் லிடன் தாஸ், மூன்றாம் இலக்கத்தில் வந்த ஷகீப் அல் ஹஸன் ஆகியோரின் விக்கெட்டுக்களை கைப்பற்றி அதிரடியான ஆரம்பம் ஒன்றினை இலங்கை அணிக்கு வழங்கி தனது மீள்வருகையின் முக்கியத்துவத்தையும் காட்டினார்.


இதனை அடுத்து, போட்டியின் இரண்டாவது ஓவரில் சுரங்க லக்மாலின் பந்துபட்டு தமிம் இக்பாலுக்கு மணிக்கட்டு உபாதை ஏற்பட அவர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவானது. இப்படியாக தொடர்ச்சியாக முக்கிய வீரர்களின் வெளியேற்றத்தினால் பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பின்னடைவு ஏற்பட்டது. இதனால், புதிய துடுப்பாட்ட வீரர்களாக களத்தில் இருந்த முஷ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன் ஆகியோருக்கு அணியை கட்டமைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு இருந்தது.

தொடர்ந்து, இலங்கை அணி களத்தடுப்பில் பல தவறுகளை விட்டது. இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மிதுன் – ரஹீம் ஜோடி பங்களாதேஷ் அணிக்காக மெதுவான முறையில் இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்ப முயற்சி செய்து, அதில் வெற்றியும் கண்டனர்.
மத்தியூஸ், டில்ருவான் ஆகியோர் பிடிகளையும் தவறவிட்டனர்.

இந்த இணைப்பாட்டத்திற்குள் அனுபவம் குறைந்த மொஹமட் மிதுன் அவரது கன்னி அரைச்சதத்தை பூர்த்தி செய்ததோடு, முஷ்பிகுர் ரஹீமும் அவரது 30 ஆவது ஒரு நாள் அரைச்சதத்தை பதிந்து கொண்டார்.


மிதுன் 68 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இலங்கை அணி விக்கெட்டுக்களை உடைத்துத் தள்ள பங்களாதேஷ் தடுமாறியது.
எனினும், மிகவும் பொறுமையாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் தனது 6 ஆவது ஒரு நாள் சதத்தினை பூர்த்தி செய்தார். முஸ்பிகுர் ரஹீமின் சத உதவியோடு பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை குவித்தது.
அனைத்து விக்கெட்டுக்களை இழந்த நேரத்தில் மணிக்கட்டு முறிந்த வேளையிலும் கூட ஒற்றைக்கையுடன் ஆடுகளம் வந்த தமீம் இக்பால் ரஹீமுக்குத் துணை வழங்கியது பலரது பாராட்டுக்களையும் வழங்கியது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை போராடிய முஷ்பிகுர் ரஹீம், 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 150 பந்துகளுக்கு 144 ஓட்டங்களை குவித்து ஒரு நாள் போட்டியொன்றில் தான் பெற்ற தனது சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக லசித் மாலிங்க வெறும் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது சிறந்த பந்துவீச்சு பெறுமதியை பதிவு செய்ததோடு, தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுக்களை கைப்பபற்றியிருந்தார்.

வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 262 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாட ஆரம்பித்த இலங்கை அணியின் துடுப்பாட்டத் தடுமாற்றம் முதலில் இருந்தே தொடர்ந்தது.எந்தவொரு வீரரும் நின்று நிலைத்து ஆடவில்லை. கடைசியில், 35.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இலங்கை அணி 124 ஓட்டங்களுடன் படுதோல்வி அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக டில்ருவான் பெரேரா 29 ஓட்டங்களை குவித்திருந்தார்.
அசத்தலான பந்துவீச்சை வெளிக்காட்டிய பங்களாதேஷ் அணியின் மஷ்ரபே மொர்தஸா, முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹீமுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அணி ஆசியக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் திங்கட்கிழமை (17) ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கின்றதுடன் குறித்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையிலும் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...