வெளிநாடுகளில் சாதகமற்ற ஆட்டங்களைக் கொண்டுள்ள இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு, சிம்பாப்வேயில் நடக்கவுள்ள இந்தத் தொடர் ஒரு முக்கியமான சவாலாக அமைந்துள்ளது. 2023 உலகக் கிண்ணத்துக்குப் பிறகு, சொந்த மண்ணில் விளையாடிய 9 ஒருநாள் தொடர்களில் 7இல் வெற்றி பெற்றதால், ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை 4ஆம் இடத்தில் உள்ளது. இருப்பினும், 2024இல் பங்களாதேஷ் மற்றும் 2025இல் நியூசிலாந்தில் நடந்த தொடர்களில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், வெளிநாட்டுத் தொடர்களில் இலங்கையின் பலம் கேள்விக்குறியாகியுள்ளது.
2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கிடைத்த வெற்றிக்கு பின், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து தொடர்கள் தவிர்த்து, இலங்கை அணி வெளிநாடுகளில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. இது ஒரு தசாப்தத்திற்கும் மேலான வெற்றிக்கான நீண்ட இடைவெளியைக் குறிக்கிறது.
புதிய வீரர்களுக்கு வாய்ப்பு?
தரவரிசையில் 11ஆம் இடத்தில் இருந்தாலும், சொந்த மண்ணில் சிம்பாப்வே அணி வலிமையானது. அண்மையில் அயர்லாந்துக்கு எதிரான தொடரை 2-1 என வென்ற உற்சாகத்தில் அவர்கள் உள்ளனர். மறுபுறம், இலங்கை அணியும் பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இதேபோன்ற வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
2008இல் 5-0 என்ற கணக்கில் சிம்பாப்வே அணியை இலங்கை வெள்ளையடித்த (White wash) பிறகு, முதல் முறையாக ஒருநாள் தொடருக்காக சிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 1994க்கில் முதற்தடவையாக சிம்பாபேக்கான தொடர் ஆட ஆரம்பித்தது முதல் சிம்பாப்வேவில் இலங்கை எந்த ஒரு ஒருநாள் தொடரையும் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத்துக்கு அணி தயார்!
இந்தத் தொடரின் முக்கிய கவனம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள இருபதுக்கு -20 உலகக் க்கிண்ணத்துக்கான அணித் தேர்வில் உள்ளது. இருப்பினும், இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கிண்ணம் வந்தாலும், இந்த ஒருநாள் தொடரும் முக்கியத்துவம் பெறுகிறது. நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் பவன் ரத்நாயக்க போன்ற இளம் வீரர்களின் வருகையால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம மற்றும் நிஷான் மதுஷ்க போன்ற வீரர்களுக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயத்தால் அவதிப்படும் சமீர
திறமையான வீரராக இருந்தாலும், தொடர்ச்சியான காயங்களால் அவதிப்படும் துஷ்மந்த சமீர மீது அதிக கவனம் இருக்கும். பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட அவர், இந்தத் தொடர் முழுவதும் தாக்குப்பிடிப்பாரா என்பது அவரது உடற்தகுதிக்கான ஒரு சோதனையாக இருக்கும்.
பந்துவீச்சில் அசீத பெர்னாண்டோ அணியின் முன்னணி வீரராக இருப்பார், அவருக்கு சமீர, தில்ஷன் மதுஷங்க மற்றும் மிலன் ரத்நாயக்க ஆகியோர் உறுதுணையாக இருப்பார்கள். 2023 உலகக் கிண்ணத்தில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்த தில்ஷன் மதுஷங்க, அதன் பின்னர் சீரற்ற ஆட்டத்தால் தனது இடத்தை தக்கவைக்க போராடுகிறார்.
முக்கிய சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இல்லாத நிலையில், பந்துவீச்சு பொறுப்பு மகீஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வன்டர்சே ஆகியோரிடம் இருக்கும், அத்துடன் அணித் தலைவர் சரித் அசலங்க, துனித் வெல்லாலகே மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
0 கருத்துகள்