தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 1 மே, 2018

நடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் குமுறல் #CSKvDD #IPL2018

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்ட டெல்லி அணி 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் 212 என்ற பாரிய இலக்கை நோக்கிய டெல்லி அணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், 198 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் பந்தில் நிராகரிக்கப்பட்ட வொட்சனின் ஆட்டமிழப்பு என டெல்லி  டெயார்டெவில்ஸ் அணியின் தலைவர் ஷ்ரெெயாஸ்   ஐயர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “போட்டியின் பின்னர் உடைமாற்றும் அறையில் பேசப்பட்ட ஒரே ஒரு விடயம் வொட்சனின் ஆட்டமிழப்பு. எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வொட்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் என்பது தெரியும். ஆனால் தீர்ப்பு சென்னை அணிக்கு சாதகமாக அமைந்து விட்டது.

குறித்த சாதகத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட அவர் 40 பந்துகளுக்கு 78 ஓட்டங்களை விளாசினார். இந்த வாய்ப்பானது போட்டியின் முடிவை தீர்மானித்தது என்றுதான் கூறவேண்டும்.

வொட்சனுக்கு ஆட்டமிழப்பு வழங்கியிருக்க வேண்டும். நாம் குறித்த தீர்ப்புக்கு எதிராக முறைப்பாடு செய்வோம். எது எப்படியோ இந்த போட்டியில் தோல்வியடைந்தோம். அடுத்து இன்னும் 6 போட்டிகள் நடைபெறவுள்ளன. பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் அனைத்து வெற்றிகளையும் பெறவேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து சிறப்பாக விளையாடுவோம்” என குறிப்பிட்டார்.

சென்னை அணியின் வொட்சனுக்கு போட்டியின் முதலாவது பந்தை டெல்லி அணியின் ட்ரென்ட் போல்ட் வீசினார். குறித்த பந்து வொட்சனின் காலில் பட்டது. களத்தடுப்பில் ஈடுபட்ட வீரர்கள் ஆட்டமிழப்புக் கோரிய நிலையில், நடுவர் ஆட்டமிழப்பை வழங்கவில்லை.

எனினும் டெல்லி அணியின் தலைவர் உறுதியாக மூன்றாவது நடுவரிடம் மேன்முறையீடு செய்தார். குறித்த காணொளியை அவதானித்த நடுவர் பந்து மட்டையில் பட்டதா? அல்லது நேரடியாக காலில் பட்டதா? என்ற சந்தேகத்தில் இருந்ததால் அது ஆட்டமிழப்பு அல்ல என அறிவித்தார்.

எனினும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் என பெரும்பாலானோர் நடுவரின் தீர்ப்பு தவறு என தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த IPL தொடரில் பல நடுவர்களின் தீர்ப்புக்கள் தவறாக அமைந்ததுடன் தொலைக்காட்சி நடுவர் மூலம் திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை G.பிரசாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...