தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றது! லோர்ட்ஸில் 27 வருட கனவு நிறைவேறியது !! #WTCFinal
லோர்ட்ஸ், லண்டன்: 27 ஆண்டுகால தாகம் தணிந்தது! 'கிரிக்கெட்டின் தாயகம்' லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. எய்டன் மார்க்ரமின் கம்பீரமான 136 ஓட்டங்கள், தெ.ஆ அணிக்கு ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்தது. 1998 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா வென்ற முதல் ஐசிசி கிண்ணம் இது.
மார்க்ரமின் மகுடமும், தென் ஆபிரிக்காவின் வரலாற்றுப் பயணமும்!
282 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி 213 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இன்று களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு, காலைப்பொழுதின் மேகமூட்டம் விலகி வெயில் வீசியது சாதகமாக அமைந்தது. வெற்றிக்காக மேலும் 69 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியா தனது வழக்கமான உறுதியுடன் பந்துவீசத் தொடங்கியது. தலைவர் பட் கம்மின்ஸ், மூன்றாவது ஓவரிலேயே தெம்பா பவுமாவின் விக்கெட்டைக் கைப்பற்ற, பவுமா தனது முந்தைய நாள் ஓட்டங்களுடன் ஒரு ஓட்டத்தை மட்டுமே சேர்த்திருந்தார்.
புதிதாகக் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ்க்கு எல்.பி.டபிள்யூ முறையில் அவுஸ்திரேலியா ரிவியூ கேட்டபோதும், பந்து ஸ்டம்ப்பிற்கு வெளியே சென்றதால் அவர் தப்பினார். மார்க்ரம் அடுத்த பந்தையே மிட்-விக்கெட் பவுண்டரிக்கு அனுப்பி, தேவையான ஓட்டங்களை 50 ஆகக் குறைத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து வேகத்துடன் பந்துவீசி, ஸ்டார்க் ஸ்டப்ஸை க்ளீன் போல்ட் ஆக்கி தென்னாப்பிரிக்காவை 241 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என ஆழ்த்த, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
ஸ்டார்க் மீண்டும் பெடிங்ஹாமின் காலில் பந்தை குறிவைத்தபோது, அவுஸ்திரேலியா மீண்டும் ஒரு ரிவியூ கேட்டது. ஆனால், ரீப்ளேக்களில் பந்து ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே சென்றது தெரியவர, 2023 ஆம் ஆண்டு சாம்பியன்களான அவுஸ்திரேலியாவின் அனைத்து ரிவியூக்களும் முடிவுக்கு வந்தன.
மார்க்ரமும் பெடிங்ஹாமும் மிக நிதானமாக ஆடி, தென்னாப்பிரிக்காவை வெற்றியை நோக்கி நகர்த்தினர். இருவரும் ஓட்டங்களை விரைவாகச் சேர்த்ததுடன், ஆட்டத்தின் அழுத்தத்தை மறைக்கும் அமைதியுடன் ஆடினர். பெடிங்ஹாம் கம்மின்ஸ் பந்தை மிக அழகாக அடித்து, இலக்கை 20 ஓட்டங்களுக்குள் கொண்டுவந்தார்.
ஆஸ்திரேலியா 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் புதிய பந்தைக் எடுத்தது. மார்க்ரம் அதை அலட்சியமாக எதிர்கொண்டார். புதிய பந்து எடுக்கப்பட்ட, 81வது ஓவரின் முதல் பந்திலேயே ஹேசில்வுட் வீசிய பந்தை லெக் சைடில் பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை நெருங்கினார்.
வரலாற்று வெற்றி: மார்க்ரம்-பெடிங்ஹாம்-வெரெய்ன்!
வெற்றியை மிக அருகில் கொண்டுவந்த மார்க்ரமினால் வெற்றி ஓட்டத்தைப் பெற்று அதை முடித்து வைக்க முடியவில்லை. ஹேசில்வுட் வீசிய பந்தை ட்ராவிஸ் ஹெட்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார். டேவிட் பெடிங்ஹாமுடன் கைல் வெரெய்ன் இணைந்தார். 84வது ஓவரில், ஸ்டார்க் பந்தை ஆஃப்-சைடில் அடித்து வெரெய்ன் வெற்றியை உறுதி செய்ய, லோர்ட்ஸ் மைதானத்தில் கூடியிருந்த தென்னாப்பிரிக்க இரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டங்கள் வெடித்தன. இந்த 11 வீரர்களின் பெயர்கள் தலைமுறை தலைமுறையாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். 27 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு இன்று ஒரு மகத்தான கொண்டாட்டத்துடன் முடிவுக்கு வந்தது!
#SAvsAUS #WTCFinal2025 #CricketHistory #Proteas
0 கருத்துகள்