தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Thursday, October 25, 2018

அபூர்வ TIE ! கோலியின் சாதனைப்போட்டியை சமநிலைப்படுத்திய ஹோப் !!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான இரண்டாவது ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் (Tie) முடிவுக்கு வந்துள்ளது.

நேற்று 10000 ஓட்டங்களை பூர்த்தி செய்த இந்திய அணித்தலைவர் விராட் கோலியின் ஆட்டமிழக்காத அதிரடி 157 ஓட்டங்களின் உதவியுடன் இந்திய அணி 321 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷாய் ஹோப்பின் இறுதிப் பந்து பௌண்டரியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்று போட்டியை சமப்படுத்தியது.

இது இந்திய அணியின் ஒருநாள் வரலாற்றில் 9வது சமநிலை முடிவாகும். மேற்கிந்தியத் தீவுகளின் 10வது சமநிலை & சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 37வதாகும்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இரண்டு விக்கெட் இழப்புக்களின் பின்னர் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் விராட் கோலி மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்காக 139 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் ராயுடு 73 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 10,000 ஓட்டங்களை கடந்தார். வெறும் 205 இன்னிங்ஸ்களில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். டெண்டுல்கர்  259 இன்னிங்ஸ்களில் 10,000 ஓட்டங்களை கடந்திருந்தார்.

பின்னர் தன்னுடைய 37வது சதத்தைப் பெற்ற விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அதிரடியாக துடுப்பாடிய இவர் 129 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 157 ஓட்டங்களை குவித்தார்.
 இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு கடுமையான சவாலைக் கொடுத்திருந்தது. முதலாவது போட்டியில் சதமடித்த ஷிம்ரன் ஹெட்மையர் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவிக்க, ஷாய் ஹோப் அணி நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார்.

இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 143 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை பதம் பார்த்த ஹெட்மையர் 64 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஒரு ஓவருக்கு 14 ஓட்டங்கள் என்ற நிலையில், அதிலும் இறுதிப் பந்தில் 5 ஓட்டங்கள் என்ற நிலையில், ஷாய் ஹோப் பௌண்டரி விளாசி போட்டியை சமப்படுத்தினார். இறுதிவரை வெற்றிக்காக போராடிய ஷாய் ஹோப் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்து 123 ஓட்டங்களை பெற்றார். \எனினும் இவரது தடுமாற்றமும் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லவேண்டிய போட்டியை சமநிலையாக்கியது என்ற விமர்சனங்களும் எழுகின்றன.


இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக விராட் கோலி  தெரிவானார்.

இதன் அடிப்படையில், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்குமான மூன்றாவது ஒருநாள் போட்டி 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...