தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

இந்தியா இன்னிங்க்சினால் மோசமான தோல்வி !! லோர்ட்ஸ் டெஸ்ட்டில் துவம்சம் செய்த இங்கிலாந்து


முதல் நாள் முழுவதும் மழையினால் கழுவப்பட்ட பிறகும் கூட நேற்று நான்காவது நாளில் இங்கிலாந்து அணி லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியை இன்னிங்சினால் வென்றுள்ளது.
போட்டி முழுவதும் தன்னுடைய முழுமையான ஆதிக்கத்தை செலுத்திய இங்கிலாந்து இரண்டு இன்னிங்சிலும் இந்தியாவின் துடுப்பாட்டத்தை உருட்டித் தள்ளியது.

இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரில் இப்போது 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

முதலாம் இன்னிங்சில் 107 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா, நேற்று இரண்டாம் இன்னிங்சில் 130 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா துடுப்பாடிய மொத்த ஓவர்களே 80.
யாரொருவரும் அரைச்சதம் கூட பெறமுடியவில்லை.
முதலாவது டெஸ்ட் போட்டியில் தனித்து நின்று போராடிய அணியின் தலைவர் விராட் கோலியும் இம்முறை தடுமாறியிருந்தார்.
இரண்டு இன்னிங்சிலும் அதிக பட்சமான ஓட்டங்களை எடுத்தவர் ரவிச்சந்திரன் அஷ்வின்.

எந்தவொரு வீரரும் 35 ஓட்டங்களுக்கு மேல் எடுக்காதளவு மிக மோசமாகத் துடுப்பாடியிருந்தது இந்தியா.

முதலாம் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை எடுத்த ஜிம்மி அண்டர்சன் இரண்டாம் இன்னிங்சிலும் 4 விக்கெட்டுக்களை எடுத்தார்.
இதன்மூலம் ஒரு குறித்த மைதானத்தில் 100 விக்கெட்டுக்களுக்கு மேல் எடுத்த முதலாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

இலங்கையின் முத்தையா முரளிதரன் மட்டுமே தனியொரு மைதானத்தில் நூறுக்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை எடுத்த ஒரே பந்துவீச்சாளர்.
மூன்று மைதானங்களில் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.

ஸ்டூவர்ட் ப்ரோட்டும் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

துடுப்பாட்டத்தில் அனைவரும் அசந்துபோகும் விதத்தில் அபார சதம் அடித்துக் கலக்கிய கிறிஸ் வோக்ஸ் முதலாவது இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்சிலும் இரண்டு விக்கெட்டுக்களை எடுத்துக்கொண்டார்.

அவரது ஆட்டமிழக்காத சதத்தின் போது தனது 1000 டெஸ்ட் ஓட்டங்களையும் பூர்த்தி செய்துகொண்ட வோக்ஸ் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

இங்கிலாந்து 88 ஓவர்களை சந்தித்து வேகமாக ஓட்டங்களையும் எடுத்திருந்ததும் இந்தியாவின் முழுமையான தடுமாற்றமும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்போடு அணிக்குள் கொண்டுவரப்பட்ட புஜாராவும் குல்தீப் யாதவும் சொதப்பியது ஒரு பக்கம், தொடர்ந்து தடுமாறி வரும் இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மறுபக்கம்- போதாக்குறைக்கு முரளி விஜய் இரண்டு இன்னிங்சிலும் பூஜ்ஜியத்துடன் ஆட்டமிழந்ததும் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அணிக்கு மிகப்பெரிய அவமானங்களாக மாறியுள்ளது.

அத்துடன் இங்கிலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் எந்தவொரு ஓவரும் பந்துவீசாததும், துடுப்பெடுத்தாட வாய்ப்பே கிடைக்காததும் கவனிக்கக்கூடியது.

எனினும் இங்கிலாந்துக்கு ஒரு சுவாரஸ்யமான தெரிவுச் சிக்கல் ஒன்று இப்போது ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைகள் காரணமாக இந்த டெஸ்ட்டில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அடுத்த போட்டிக்குத் திரும்பும் நேரம், யாரை நீக்குவது என்ற குழப்பம். அவருக்குப் பதிலாகவே இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் வோக்ஸ் அணிக்குள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...