தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

புதன், 27 ஜூன், 2018

இலங்கை அணிக்கு சரித்திரபூர்வ வெற்றி ! சமநிலையில் முடிந்த தொடர் !! #WIvSL

பார்படோஸில் நேற்று நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.

குறைவான ஓட்டங்கள் பெறப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி இடையிடையே பெய்த மழை காரணமாகத் தடைப்பட்டவாறே இருந்தது.

144 என்ற இலக்கை நேற்று இலங்கை அடைவதற்கு இடையில் 81 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்த வேளையில் வைத்தியசாலையில் இருந்து திரும்பிய குசல் ஜனித் மற்றும் துடுப்பாடக் கூடிய சுழற்பந்து வீச்சாளர் டிமுத் ஆகிய இரு பெரேராக்கள் மூலமாக இந்த வெற்றி இலக்கு அடையப்பட்டது.

பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளின் பார்படோஸ் நகரில் (பிரிட்ஜ்டவுன்) நடைபெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாகவும் வரலாறு படைத்திருக்கின்றது.

இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மேற்கிந்திய தீவுகளை இரண்டாம் இன்னிங்ஸில்  நிர்மூலம் செய்திருந்த காரணத்தினால் அவர்கள் 93 ஓட்டங்களுடன் கட்டுப்படுத்தப்பட்டு, ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு அணிகளினதும் முதல் இன்னிங்சுகளின் அடிப்படையில் போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு 144 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகித்த காரணத்தினால், மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை சமநிலைப்படுத்தும் நோக்கோடு தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி ஆட்டத்தின் மூன்றாம் நாள் நிறைவில் 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இலக்கு தொடும் தமது பயணத்தில் சற்று பின்னடைவான நிலையில் காணப்பட்டிருந்தது. ஆடுகளத்தில் குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடனும், டில்ருவான் பெரேரா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

ஆட்டத்தின் நான்காம் நாளில் 63 ஓட்டங்கள் தேவையாக இருக்க 5 விக்கெட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு இலங்கை அணி வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடத் தொடங்கியது. எனினும், நான்காம் நாளின் முதல் ஓவரை வீசிய மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர் இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய வீரரான குசல் மெண்டிஸின் விக்கெட்டை LBW முறையில் கைப்பற்றினார். இந்த விக்கெட்டுக்காக குசல் மெண்டிஸ் மூன்றாம் நடுவரின் பரிசீலனையை நாடியிருந்த போதும் அது கைகொடுக்காமல் போக 25 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

நான்காம் நாளின் ஆரம்பத்தில் பறிபோன மெண்டிஸின் விக்கெட் இலங்கை அணிக்கு அதிர்ச்சியாகவும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மகிழ்ச்சியாகவும் மாறியிருந்தது. இதனையடுத்து, போட்டியின் மூன்றாம் நாளில் சிக்ஸர் ஒன்றை தடுக்க முயன்ற போது காயத்துக்குள்ளாகி, வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட  ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித்  பெரேரா, மருத்துவர்கள் துடுப்பாட முடியும் என்று ஆலோசனை வழங்கியதனால் 8 ஆம் இலக்க வீரராக களம் நுழைந்தார்.


களத்தில் இருந்த தில்ருவான் பெரேராவுடன் 7 ஆம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் பெரேரா தமது அணியில் ஏனைய சிறப்பு துடுப்பாட்ட வீரர்கள் யாரும் இல்லை என்பதனால் மிகவும் பொறுமையான முறையில் இலங்கை அணிக்கு ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார்.

இரண்டு பெரேராக்களினதும் 7 ஆம் விக்கெட்டுக்கான நிதானமான இணைப்பாட்டம் (63) கைகொடுக்க இலங்கை அணி, 40.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கான 144 ஓட்டங்களை அடைந்தது.

இலங்கை அணியை பிரபல்யமான டெஸ்ட் வெற்றி ஒன்றுக்கு வழிநடாத்திய குசல் ஜனித் பெரேரா 28 ஓட்டங்களையும், டில்ருவான் பெரேரா 23 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

மறுமுனையில், இலங்கை அணியை இரண்டாம் இன்னிங்ஸில் தனது வேகத்தின் மூலம் அச்சுறுத்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். ஹோல்டருக்கு இந்த இன்னிங்சுடன் சேர்த்து போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றிய காரணத்திற்காகவும்,  துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட காரணத்திற்காகவும் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதேவேளை, இத்தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஷேன் டௌரிச் தொடரின் ஆட்ட நாயகனுக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.

முன்னணி வீரர்களின் காயங்கள், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அஞ்செலோ மத்தியூஸ் நாடு திரும்பியமை, பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டமை, மழையினால் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் வெற்றி வாய்ப்பு நழுவிப்போனமை போன்ற விடயங்களால் மிகவும் அழுத்தங்களுக்கு உள்ளாகிய நிலையிலேயே சுரங்க லக்மால் தலைமையிலான இலங்கை அணி இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றியடைந்து சாதித்து காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை டெஸ்ட் அணியின் 16வது தலைவராகப் பொறுப்பெடுத்த லக்மால் கன்னிப் போட்டியிலேயே வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தலைவர் லக்மலுடன் சக வேகப்பந்துவீச்சாளர்கள் கசுன் ராஜித, லஹிரு குமார ஆகியோரும் இந்தப் போட்டியில் ஜொலித்திருந்தனர்.



மேற்கிந்திய தீவுகள் உடனான இந்த டெஸ்ட் சுற்றுப் பயணத்தை முடித்திருக்கும் இலங்கை அணி அடுத்த மாதம் தமது சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணியுடன் மோதவுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...