தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வெள்ளி, 30 மார்ச், 2018

சர்ச்சை, தடையினால் பலவீனப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க்கும் இல்லை - தீர்க்கமான இறுதி டெஸ்ட் ஆரம்பம்

அவுஸ்திரேலிய - தென் ஆபிரிக்க தொடரின் தீர்க்கமான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இப்போது ஜொஹான்னஸ்பேர்க்கில் ஆரம்பமாகியுள்ளது.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையை அடுத்து ஸ்மித், வோர்னர், பான்க்ரொஃப்ட் ஆகியோர் இல்லாமல் களமிறங்கும் அவுஸ்திரேலிய அணியில் உபாதை காரணமாக இன்று அவர்களது பிரதான வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கும் இன்று விளையாடவில்லை.
இதுவும் மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.
கால் உபாதையால் சிலகாலம் சிக்கல்பட்டு வந்த ஸ்டார்க் இம்முறை ஐபிஎல்லிலும் விளையாட முடியாது போகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்க்குக்குப் பதிலாக ஸ்விங் பந்துவீச்சாளர் சட் சயர்ஸ் இன்று அறிமுகமாகிறார். கடந்த சில பருவக்காலங்களாக அவுஸ்திரேலிய உள்ளூர்ப் போட்டிகளில் அமோகமாக விக்கெட்டுக்களை எடுத்துள்ளவரான சயர்ஸ் பல கால முயற்சிக்குப் பிறகு இந்த வாய்ப்பைப் பெறுகிறார்.

டிம் பெய்ன்

அவுஸ்திரேலியாவின் 46வது டெஸ்ட் தலைவராகவும், ஐந்தாவது விக்கெட் காப்பாளர் - தலைவராகவும் இன்று அறிமுகமாகும் டிம் பெய்னின் தலைமையில் களமிறங்கும் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஜோ பேர்ன்ஸ், மட் ரென்ஷோ ஆகியோரும், ஸ்மித்தின் நான்காம் இடத்தில் பீட்டர் ஹான்ஸ்கொம்பும் இன்று விளையாடவுள்ளனர்.

அவுஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன்  இந்த டெஸ்ட்டோடு விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னி மோர்க்கல் இந்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறவுள்ளதும் இந்த டெஸ்ட்டின் மேலும் முக்கியமானவையாக அமைகின்றன.

கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியிலிருந்து எந்த மாற்றமும் செய்யாத தென் ஆபிரிக்கா நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடுகிறது.

1991இல் சர்வதேச கிரிக்கெட்டில் மீள் வருகைக்குப்பிறகு தென் ஆபிரிக்கா இதுவரை சொந்த மண்ணில் வைத்து அவுஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் வெற்றிகொள்ளவே இல்லை என்ற ஏமாற்றத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு அரிய  வாய்ப்பும் கிட்டியுள்ளது.

தற்போது தென் ஆபிரிக்கா 2-1 என்று இத்தொடரில் முன்னிலையில் உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...