லோர்ட்ஸ், லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2025 இன் முதல் நாள், கிரிக்கெட்டின் புனித பூமியான லோர்ட்ஸில், ஒரு உண்மையான வேகப்பந்துவீச்சுப் போராட்டமாக அமைந்தது. ஓட்டம் ஒவ்வொன்றும் கடும் போராட்டத்திற்கூடாகவும், விக்கெட் ஒவ்வொன்றும் பெரும் கொண்டாட்டத்திற்கூடாகவும் கிடைத்தது.
ககிசோ ரபாடாவின் அபாரமான ஐந்து விக்கெட் வீழ்த்தலுக்குப் பிறகு, மிட்செல் ஸ்டார்க்கின் அதிரடியான பதிலடி, ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையைத் தக்கவைத்தது. முதல் நாள் ஆட்ட முடிவில், தென்னாபிரிக்கா 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி, இன்னும் 169 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
ரபாடாவும் ஜான்சனும் கட்டவிழ்த்துவிட்ட அழிவு!
மேகமூட்டமான வானிலையின் கீழ் மிக முக்கியமான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தெ.ஆ தலைவர் டெம்பா பவுமா, முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். அவரின் இந்த முடிவைச் சரியென, உடனடியாக ரபாடா தனது பந்துவீச்சின் மூலம் நியாயப்படுத்தினார். நர்சரி எண்டிலிருந்து பந்துவீச வந்த ரபாடா, முதல் மூன்று ஓவர்களை ஓட்டமற்ற ஓவர்களாக வீசி, நான்காவது ஓவரிலேயே இரு விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிரட்டினார். உஸ்மான் கவாஜா ஓட்டமேதுமின்றி முதல் ஸ்லிப்பில் பிடிகொடுத்து வெளியேற, அதைத் தொடர்ந்து, ஸ்லிப் பகுதியில் எய்டன் மார்க்ரம் பிடித்த அற்புதமான தாழ்வான பிடியின் மூலம் கமரூன் கிரீன் வெளியேறினார்.
ஆரம்ப அதிர்ச்சிக்குப் பிறகு, ஸ்டீவ் ஸ்மித்தும் மார்னஸ் லபுஷேனும் நிலைத்து நின்று, ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தப் பார்த்தனர். ஆனால், ரபாடாவின் புதிய பந்துப் பங்காளியான மார்கோ ஜான்சன் மீண்டும் பந்துவீச வந்ததும் தெ.ஆ அணிக்கு சாதகமானது. ஜான்சனின் பந்துவீச்சில் 17 ஓட்டங்களுடன் லபுஷேன் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுக்க, ஆபத்தான டிராவிஸ் ஹெட்டை அற்புதமான ஒரு கையால் பிடித்த பிடியின் மூலம் விக்கெட் காப்பாளர் கைல் வெரெய்ன் வெளியேற்றினார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் போட்டியைத் தீர்மானித்த சதம் விளாசிய இடது கை துடுப்பாட்ட வீரரான ஹெட், இம்முறை வெறும் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து, மதிய உணவுக்கு முன் கடைசிப் பந்தில் ஆஸ்திரேலியாவை 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளினார்.
வெப்ஸ்டர் மற்றும் ஸ்மித்தின் போராட்டம்; பின்னர் ஆட்டமிழப்பு!
மதிய உணவுக்குப் பிறகு, போ வெப்ஸ்டர் ஸ்மித்துடன் இணைந்துகொண்டு அசாத்தியமான மனஉறுதியை வெளிப்படுத்தினார். வெப்ஸ்டர் இரண்டு முறை LBW முறையீடுகளில் இருந்து தப்பினார். இரண்டும் ஜான்சனின் பந்துவீச்சில் வந்தவை. ஒன்று, நடுவரின் முடிவால் தப்பியது. மற்றொன்றுக்கு ரிவியூ கோரப்படவில்லை, ஆனால் தொலைக்காட்சியில் அந்தப் பந்து நடு ஸ்டம்பைப் பதம் பார்த்திருக்கும் என்று தெளிவாகக் காட்டியது. இந்தத் தப்பித்த வாய்ப்பைப் பயன்படுத்திய வெப்ஸ்டர், ஸ்மித்துடன் இணைந்து ஒரு சிறப்பான கூட்டணி அமைத்தார். இதன்போது, ஸ்மித் 76 பந்துகளில் தனது அரை சதத்தை, பொயிண்ட் எல்லையை நோக்கி விளாசிய ஒரு பவுண்டரியுடன் எட்டினார்.
இதன் மூலம், 36 வயதான ஸ்டீவ் ஸ்மித் லோர்ட்ஸ் மைதானத்தின் வரலாற்றில் மிகவும் அதிக ஓட்டங்கள் குவித்த வெளிநாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆனார். இருப்பினும், கிரிக்கெட்டின் தாயகத்தில் அவரது இந்த முக்கியமான இன்னிங்ஸ் ஒரு எதிர்பாராத பந்துவீச்சாளரால் முடிவுக்கு வந்தது.
பவுமா, வெறும் மூன்று டெஸ்ட் விக்கெட்டுகளை மட்டுமே தன் பெயரில் வைத்திருந்த எய்டன் மார்க்ரமுக்கு பந்துவீச வாய்ப்பளித்தார். மார்க்ரம் வீசிய பந்தை ஸ்மித் அடித்தபோது, ஜான்சன் ஒரு அபார பிடியை லாவகமாகப் பிடித்து, ஆஸ்திரேலியத் துடுப்பாட்டத் தூணை வெளியேற்றினார்.
ஸ்மித்தை அடுத்து வெப்ஸ்டரும் தனது அரை சதத்தை எட்டினார். ஆனால், மாலை நேர ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அதிரடியாக ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அலெக்ஸ் கேரி கேசவ் மஹாராஜின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று விக்கெட்டை இழந்தது சரிவைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ரபாடாவின் அழகிய பந்துவீச்சின் மூலம் பட் கம்மின்ஸின் off ஸ்டம்பை வீழ்த்தினார். பின்னர், ரபாடா வெப்ஸ்டரை (72 ஓட்டங்கள்) தனது off திசைக்கு வெளியே ஆடும்படி தூண்டி, ஸ்லிப்பில் பிடிகொடுக்க வைத்தார். இதன் மூலம் ரபாடா, அலன் டொனால்டின் 330 டெஸ்ட் விக்கெட் சாதனையை முறியடித்தார்.
ஜான்சன் அதே உத்வேகத்துடன் நேதன் லயனின் தடுப்புகளை உடைத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். ரபாடா இரண்டாவது முறையாக லோர்ட்ஸ் சாதனைப் பலகையில் தனது பெயரைப் பொறிக்க களம் தயாரானது. சரியாக 212 ஓட்டங்களுக்கு ஸ்டார்க்கை க்ளீன் போல்ட் செய்து அந்த சாதனையை ரபாடா நிகழ்த்தினார்.
ஸ்டார்க்கின் உடனடித் தாக்கம் மற்றும் ஆஸ்திரேலியாவின் பதிலடி!
குறைவான ஓட்டங்களுடன் அவுஸ்திரேலியா சுருண்டிருந்த நிலையில், தென்னாபிரிக்காவின் முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க் ஆட்டத்தில் இறங்கினார். ஓட்டங்கள் எதுவும் சேர்க்கப்படுவதற்கு முன்பே எய்டன் மார்க்ரமை வீழ்த்தினார். வியான் முல்டர் துடுப்பில் பட்டு விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுக்க இருந்த வாய்ப்பை கேரி தவறவிட்டார். ஆனால் ஸ்டார்க் நீண்ட நேரம் காத்திருக்கவில்லை. ரயன் ரிக்கில்டன் கவாஜாவிடம் பிடிகொடுத்து வெளியேற, ஸ்டார்க்குக்கு இரண்டாவது விக்கெட் கிடைத்தது.
தலைவர் பட் கம்மின்ஸ் பின்னர் களத்தில் குதித்து, முல்டரை க்ளீன் போல்ட் செய்தார். ஜோஷ் ஹசில்வுட் தன்னுடைய சிறப்பான form டெஸ்ட் போட்டிகளிலும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை வீழ்த்தினார். இரண்டாவது நாளில் தென் ஆபிரிக்க அணிக்கு நிறைய சிரமமான கட்டமைப்பு பணிகள் உள்ளன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
முதல் நாள் முழுவதும் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். இது லோர்ட்ஸில் ஒரு பரபரப்பான இரண்டாவது நாளை உறுதியாக்குகிறது. நாளைய தினத்தில் யார் ஆட்டத்தைக் கைப்பற்றப் போகிறார்கள்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அதன் பெரும் எதிர்பார்ப்புகளை முதல் நாளிலேயே ரசிகர்களுக்கு பரவசம் ஊட்டியிருக்கிறது என்பது உண்மை !
0 கருத்துகள்