எதிர்கால நட்சத்திரங்களின் மோதல்! ACC Rising Stars T20 போட்டித் தொடர் நவம்பர் 14-ல் ஆரம்பம்!
கிரிக்கெட் ரசிகர்களின் இரத்தத்தை சூடேற்றும் மற்றொரு மோதல் இன்னும் இரு வரங்களில் !
ஒரு சில வாரங்களுக்கு முதல் தான் ஆசிய நட்சத்திரங்கள் மத்திய கிழக்கில் மோதிய ஆசியக் கிண்ணம் விறுவிறுப்பாக முடிந்து இப்போது இளைய நட்சத்திரங்களுக்கிடையிலான மோதலுக்கான தருணம் !
ஆம், அதிலும் இந்திய, பாகிஸ்தானின் மூத்த அணிகளுக்கு இடையேயான போட்டிகள் அரசியல் ரீதியாக உறைந்திருக்கும் நிலையில், இளம் திறமையாளர்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த ACC Rising Stars T20 கோப்பை களம் காண்கிறது.
வழமையாக மத்திய கிழக்கில் கிரிக்கெட் என்றால் முன்பு ஷார்ஜா, அதன் பின்னர் டுபாய், அபுதாபி, அண்மைக்காலத்தில் ஓமான் என்றிருக்க, இம்முறை ஒரு புதிய களம் !
அது கட்டார் !
கட்டாரின் டோஹாவில், நவம்பர் 14-ம் திகதி ஆரம்பமாகும் இத்தொடரில், முதல் நாளில் பாகிஸ்தானும் ஓமானும் மோதவிருக்கின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் 'ஏ' (A) வீரர்கள் நவம்பர் 16 அன்று பலப்பரீட்சை நடத்த உள்ளனர். முன்னர் இது ACC வளர்ந்து வரும் அணிகளின் ஆசியக் கிண்ணம் (ACC Emerging Teams Asia Cup) என்று அழைக்கப்பட்டிருந்ததுடன், இம்முறை T20 வடிவத்தில் நடைபெறவுள்ளது.
அணிகள் மற்றும் தொடரின் அமைப்பு
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகள் தங்கள் 'A' அணிகளை களமிறக்க, ஹொங்கொங், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற அசோசியேட் நாடுகள் தங்கள் பிரதான அணிகளைப் பயன்படுத்துகின்றன. எட்டு அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
குரூப் A: ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங், இலங்கை.
குரூப் B: இந்தியா, ஓமான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE).
நவம்பர் 14 அன்று பாகிஸ்தானும் ஓமானும் தொடக்க ஆட்டத்தில் மோதவுள்ளன. தினசரி இரண்டு ஆட்டங்கள் நவம்பர் 19 வரை இடம்பெறும். அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 21 அன்றும், இறுதிப் போட்டி நவம்பர் 23 அன்றும் நடைபெறும்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் பின்னணி
செப்டம்பர் மாதம் நடைபெற்ற மூத்த அணிகளின் ஆசியக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆண்களின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் மோதல் இதுவாகும்.
மூத்த அணிகள் மோதிய ஆசியக் கிண்ணப் போட்டியின் முடிவில் ஒரு சர்ச்சை எழுந்தது. கிண்ணத்தை வென்ற இந்திய அணியினர், பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் PCB-ன் தலைவருமான ACC தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெறாமல் துபாயிலிருந்து வெளியேறியதாகத் தகவல் வெளியானது. வெற்றியாளர்கள் கோப்பையைப் பெற வரமாட்டார்கள் என்பது உறுதியானதும், நீண்ட தாமதத்திற்குப் பிறகு கோப்பை மேடையிலிருந்து அகற்றப்பட்டது.
இந்த அரசியல் சர்ச்சைகளின் நிழலில், இளம் கிரிக்கெட் வீரர்கள் களம் காண்பது மேலும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
ACC Rising Stars போட்டி அட்டவணை (முழு விவரம்)
திகதி | ஆட்டங்கள் |
|---|---|
நவம்பர் 14 | ஓமான் vs பாகிஸ்தான்; இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் |
நவம்பர் 15 | பங்களாதேஷ் vs ஹொங்கொங்; ஆப்கானிஸ்தான் vs இலங்கை |
நவம்பர் 16 | ஓமான் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; இந்தியா vs பாகிஸ்தான் |
நவம்பர் 17 | ஹொங்கொங் vs இலங்கை; ஆப்கானிஸ்தான் vs பங்களாதேஷ் |
நவம்பர் 18 | பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; இந்தியா vs ஓமான் |
நவம்பர் 19 | ஆப்கானிஸ்தான் vs ஹொங்கொங்; பங்களாதேஷ் vs இலங்கை |
நவம்பர் 21 | அரையிறுதிப் போட்டிகள்: A1 vs B2; B1 vs A2 |
நவம்பர் 23 | இறுதிப் போட்டி |
தொடரின் வரலாறு
வளர்ந்து வரும் அணிகளுக்கான இந்தக் கிண்ணம் ACC Emerging Cup என்ற பெயரில் 2013-ல் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை ஆறு பதிப்புகள் நடந்துள்ளன. ஆரம்பத்தில் இது 23 வயதுக்குட்பட்டோருக்கான தொடராக நடத்தப்பட்டு, பின்னர் 'ஏ' அணிகள் மோதும் போட்டியாக மாற்றப்பட்டது.
பாகிஸ்தானும் இலங்கையும் தலா இரண்டு முறை கிண்ணம் வென்றுள்ளன. இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தலா ஒரு முறை வென்றுள்ளன. 2024-ல் ஓமானில் நடந்த கடைசிப் பதிப்பில், ஆப்கானிஸ்தான், இலங்கையை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.





0 கருத்துகள்